Puttalam Online
international-affairs

அதிரடி நடவடிக்கைகளால் அமெரிக்கா எதிர்கொள்ளும் ஆபத்து

  • 6 February 2017
  • 640 views

மர்லின் மரி்ககார்

ஏழு முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் அகதிகளின் வருகைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை குறித்த நிறைவேற்றுக் கட்டளையில் இருந்து தான் பின்வாங்கப் போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டின் பதில் சட்ட மாஅதிபர் சல்லி கியூ எட்ஸையும் அவர் பதவி நீக்கம் செய்துள்ளார்.

Trumpமுஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஈரான், ஈராக், சிரியா, லிபியா, யெமன், சோமாலியா, சூடான் ஆகிய ஏழு நாடுகளையும் சேர்ந்த பயணிகளுக்கு அமெரிக்கா விஸா வழங்க அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடை, இந்நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அகதிகளுக்கு அமெரிக்க வருகைக்கான 90 நாட்கள் தடை மற்றும் சிரிய அகதிகளுக்கு நிரந்தரத் தடை ஆகிய விடயங்களை உள்ளடக்கிய நிறைவேற்று ஆவணத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த வெள்ளியன்று கையெழுத்திட்டார். அதே தினத்தன்றே இத்தடை உத்தரவு அமுலுக்கும் வந்தது.

பதில் சட்ட மாஅதிபர் நீக்கம்:

CNDoY3QWIAAn2b4இதன் காரணத்தினால் அமெரிக்காவின் சட்டபூர்வ விஸாவைப் பெற்று அமெரிக்கா வந்த குறித்த ஏழு நாடுகளையும் சேர்ந்தவர்கள் விமான நிலையங்களில் அமெரிக்காவுக்குள் பிர​ேவசிக்க முடியாதபடி தடுத்து நிறுத்தப்பட்டனர். இத்தடை உத்தரவு அமுலுக்கு வந்த சொற்ப மணித்தியாலயங்களுக்குள் மாத்திரம் சுமார் 200 பேர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இவர்களில் ஈராக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இருவர் அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் இத்தடையை ஆட்சேபித்து வழக்குத் தாக்கல் செய்தனர். இம்மனுவைப் பரிசீலனை செய்த மாவட்ட நீதவான் ஆன் டொனலி, ட்ரம்பின் நிறைவேற்றுக் கட்டளைக்கு தடை உத்தரவு பிறப்பித்தார். இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், இம்மனு பரிசீலனைக்கு வந்த சமயம் அதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்கு அமெரிக்க சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் தவறி விட்டனர். அதற்கு பதில் சட்ட மாஅதிபரான சாலி கியூ எட்ஸ்தான் காரணம் எனக் கருதி அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்துள்ளார்.

இதன் விளைவாக அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் சட்டத் துறையினர் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் 16 மாநிலங்களின் சட்ட மாஅதிபர்கள் ட்ரம்பின் நடவடிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்:

downloadஅமெரிக்கா ஜனாதிபதியாகப் பதவி ஏற்றதைத் தொடர்ந்து ட்ரம்ப் முன்னெடுக்கும் நகர்வுகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து அமெரிக்காவின் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் இடம்பெற்று வருகின்றன. இதற்கு முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் கிலாரி கிளிண்டன், முன்னாள் அமைச்சர் மெடலின் அல்பிரைட் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிலும் மெடலின் அல் பிரைட், ட்ரம்பின் முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கைக்கு எதிராக முஸ்லிம்களுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருப்பதும் தெரிந்ததே.

இவ்வாறான நிலையில் நியூயோர்க் உட்பட பல நகரங்களிலும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் இடம்பெற்றுள்ளன. அத்தோடு ட்ரம்பின் நியோர்க் இல்லம், வெள்ளை மாளிகை என்பவற்றுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன.

இதேவேளை ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவி ஏற்று இன்னும் எந்தவொரு நாட்டுக்கும் இராஜதந்திர விஜயங்களை மேற்கொள்ளவில்லை. அவர் தனது முதலாவது இராஜதந்திர விஜயத்தை பிரித்தானியாவுக்கு மேற்கொள்ளத் தயாராகி வருகின்றார்.

இவ்வாறான நிலையில் அமெரிக்காவுக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பின்புலத்தில் முஸ்லிம் தடை மனப்பான்மையுடன் ட்ரம்ப் பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்று குறிப்பிட்டு அந்நாட்டின் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மன்செஸ்டர், கிளக்சோ, எடின்பரோ, ஒக்ஸ்போர்ட், லீட்ஸ், லிவர்பூல், ப்ரைட்டன் உள்ளிட்ட பல முக்கிய நகர்களில் மாத்திரமல்லாமல் பிரித்தானியப் பிரதமரின் இல்லத்திற்கு முன்பாகவும் கூட இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். அத்தோடு முஸ்லிம் தடை மனப்பான்மை கொண்ட ட்ரம்ப்பின் பிரித்தானிய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மகஜரில் இற்றைவரையும் பத்து இலட்சம் பேர் கையெழுத்திட்டும் உள்ளனர்.

அமெரிக்கர்களின் உலகிற்கான முன்மாதிரி:

377DCE3800000578-3753074-image-a-52_1471886158423மேலும் ட்ரம்ப் குறித்த நிறைவேற்றுக் கட்டளையில் கையெழுத்திட்டு சில மணித்தியாலங்கள் செல்வதற்குள் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள விக்டோரியா நகரில் அமைந்திருந்த பள்ளிவாசல் இனந்தெரியாதோரால் தீ வைத்து எரித்து சாம்பலாக்கப்பட்டது. இப்பள்ளிவாசலைப் பார்வையிடவென அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் மாத்திரமல்லாமல் அமெரிக்கர்களும் சாரிசாரியாக வருகை தருகின்றனர். அதுவும் முஸ்லிம்களை விடவும் அமெரிக்கர்களே அதிகம் வருகின்றனர் என்று அப்பள்ளிவாசல் நிர்வாகியொருவர் தெரிவித்திருக்கின்றார்.

அதேநேரம் இப்பள்ளியைப் பார்க்க வரும் அமெரிக்கர்கள், அதே இடத்தில் மீண்டும் பள்ளிவாசல் இயங்க வேண்டும். இங்குதான் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட வேண்டும். இதற்காக நாம் என்ன உதவி செய்ய வேண்டும்? நாம் கட்டடப் பொருட்களைத் தருகின்றோம். இதற்கான நிர்மாண செலவுகளை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். நாம் நீர் வசதி செய்து தருகின்றோம்’ என்று கூறியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் இப்பள்ளிவாசலை இவ்விடத்தில் மீள அமைப்பதற்கான செலவு தொடர்பில் உடனடியாக மதிப்பீட செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் இப்பள்ளியை மீளநிர்மாணிக்கவென 8 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தடிப்படையில் இப்பள்ளியை அமைப்பதற்கான நிதியம் ஆரம்பிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் மாத்திரம் 07 இலட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்தோடு இப்பள்ளியை மீள அமைக்கும் பணிக்கென காசோலைகளும், உதவிகளும் தொடர்ந்தும் கிடைக்கப் பெறுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்றுள்ள ட்ரம்பின் கொள்கையை எல்லா அமெரிக்கர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு அவர்கள் தயாரில்லை என்பது தெளிவாகின்றது. இப்பள்ளிவாசல் எரிப்பைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் நடந்து கொண்ட விதம் உலகிற்கே முன்மாதிரியை வழங்கியுள்ளது. இதுவே உலகில் அமைதி சமாதானத்தை விரும்பும் அனைவரதும் அபிப்பிராயமாக உள்ளது.

ட்ரம்ப்பின் கொள்கைக்கு எதிராகத் தொழில் நிறுவனங்கள்:

அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களும் ட்ரம்ப் தற்போது முன்னெடுக்கும் திட்டங்களுக்கு கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளன. அந்த அடிப்படையில் அமெரிக்காவின் முன்னணி கொபி நிறுவனமான ‘ஸ்டார்பொக்ஸ்’ அடுத்து வரும் ஐந்து வருடங்களில் 10 ஆயிரம் அகதிகளுக்கு தமது நிறுவனங்களில் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

இத்திட்டம் தொடர்பில் இந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் ஹவார்ட்ஸ் ஸ்கூல்ஸ் குறிப்பிடுகையில், ‘ட்ரம்பின் குடியுரிமைக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் ஒதுங்கியும், மெளனமாகவும் இருக்க முடியாது’ என்று தெரிவித்திருக்கின்றார்.

அத்தோடு, ‘ஆழ்ந்த கவலையுடனும், கனத்த இதயத்துடனும் உங்களுக்கு ஒரு வாக்குறுதியை அளிக்கின்றேன். நாம் முன்னொரு போதுமே இல்லாத ஒரு காலகட்டத்தில் இருக்கின்றோம். அமெரிக்கர்களின் கனவுகளும், வாக்குறுதிகளும் கேள்விக்கு உள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசாங்கம் ஒவ்வொரு நாளும் அறிவிக்கும் திட்டங்களால் அமெரிக்காவில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. என்றாலும் அடுத்து வரும் ஐந்து வருடங்களில் 76 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு எமது நிறுவனங்களில் தொழில் வழங்கத் தீர்மானித்துள்ளோம்’ என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

‘எங்களது வணிகத்தின் நோக்கமே மனித நேயத்தை வளர்ப்பதேயாகும். அதற்காக எமது அண்டை நாடு சிவப்பானதா? நீல நிறமானதா? கிறிஸ்தவ நாடா? முஸ்லிம் நாடா? என்பது எமக்கு முக்கியமல்ல. அதனால் எமது நிலைப்பாட்டில் ஒரு போதும் மாற்றம் ஏற்படாது’ என்றும் அவர் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

இதே நிலைப்பாட்டடில் தான் அமெரிக்காவின் பல முன்னணி நிறுவனங்களும் உள்ளன. இவ்வாறான நிலையில் ட்ரம்ப் ஏற்பாடு செய்துள்ள வர்த்தக மற்றும் முதலீட்டு நிறுவனங்களுடனான சந்திப்பில் கலந்து கொள்ளுவதில்லை என பல முன்னணி நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளும் தெரிவித்திருக்கின்றனர்.

கட்சிக்குள் எதிர்ப்பு:

இவை இவ்வாறிருக்க, ட்ரம்பின் நகர்வுகளுக்கு அமெரிக்காவுக்குள் பல மட்டங்களிலும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள இச்சந்தர்ப்பத்தில், அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தத் ஆரம்பித்துள்ளது. அத்தோடு ட்ரம்ப் பிரதிநித்துவம் வகிக்கும் குடியரசுக் கட்சிக்குள்ளும் அவர் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஆட்சேபனைகளும் விமர்சனங்களும் எழத் தொடங்கி விட்டன. குறிப்பாக குடியரசுக் கட்சியின் 2008 ஆம் ஆண்டின் ஜனாதிபதி வேட்பாளரும், தற்போதைய செனட் சபை உறுப்பினருமான ஜோன் மெக்கைனும், அக்கட்சியின் மற்றொரு முக்கியஸ்தரான மெக்னால் ரன்டகியும் இணைந்து ட்ரம்பின் தற்போதைய நகர்வுகள் தொடர்பில் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

அக்கூட்டறிக்கையில், ‘ட்ரம்ப் எவருடனும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாகவே இவ்வாறான முடிவுகளை அறிவித்திருக்கின்றார். தன் அரசாங்கத்தோடோ, பாதுகாப்பு அமைப்புக்களோடோ, நீதிபதிகளுடனோ, உள்துறை மற்றும் சர்வதேச விவகார அமைப்புக்களுடனோ கலந்துரையாடல்களை மேற்கொள்ளாமல் தான் அவர் இந்நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றார்.’

‘ட்ரம்பின் இந்நடவடிக்கைகள், அமெரிக்காவுக்கே பேராபத்தாக அமையும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராகத் திரும்பி விடலாம். இதன் விளைவாக மூன்றாம் உலகப் போர் கூட ஏற்படலாம்’ என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குடியரசுக் கட்சியின் மற்றொரு செனட் சபை உறுப்பினரான கிரிஸ் மர்பி, ‘எமது கட்சியின் கணிசமான உறுப்பினர்கள் ட்ரம்பின் தற்போதைய நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை’ என்று தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் அயல் நாடுகளான கனடா, மெக்ஸிக்கோ, ஜேர்மனி உட்பட பல நாடுகள் கடும் விமர்சனங்களை தெரிவித்துள்ளன. இதன்படி ட்ரம்ப் பதவி ஏற்ற பத்து நாட்களுக்குள் அவர் முன்னெடுத்த நடவடிக்கைகளால் அமெரிக்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் கொதி நிலை ஏற்பட்டிருக்கின்றது. அமெரிக்காவின் அண்மைய கால வரலாற்றில் இவ்வாறான ஒரு கொதிநிலை முன்னொரு போதுமே ஏற்படவில்லை.

என்றாலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நகர்வுகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு ட்ரம்புக்கு முன்பாக உள்ளது. இதை விடுத்து ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்ற கொள்கையை அவர் கைகொள்வாராயின் அது அமெரிக்காவுக்கே ஆபத்தாக அமையும்.  அவதானிகளின் கருத்தும் அவ்வாறாகவே உள்ளது.

நன்றி : தினகரன்

01.02.2017


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All