Puttalam Online
health

புற்று நோயிலிருந்து நிவாரணம் – விழிப்புணர்வும் சிகிச்சையும் குணப்படுத்தும்

  • 7 February 2017
  • 969 views

மர்லின் மரிக்கார்

உலக புற்றுநோயாளர் தினம் (World Cancer Day) இன்று 04 ஆம் திகதி ஆகும்.

Cancerஇத்தினத்தின் நிமித்தம் சுகாதார கல்வி பணியாகம் 01.02.2017 அன்று ஒழுங்கு செய்திருந்த விசேட செய்தியாளர் மாநாட்டில் சுகதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார, பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் பி. டி. எஸ். பி. திஸாநாயக்கா, புற்று நோய்கள் கட்டுப்பாட்டுத் திட்டப் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர, மகரகம (அபேக்ஸா) புற்று நோய் வைத்தியசாலையின் புற்றுநோயியல் சிகிச்சை நிபுணர் என்.​ெஜயகுமாரன், சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவுப் பணிப்பாளர் டொக்டர் திலக் சிறிவர்தன ஆகியோர் தெரிவித்த தகவல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை.

இன்றைய நவீன யுகத்தில் உலகில் காணப்படும் முன்னணி தொற்றா நோயாக புற்றுநோய்கள் விளங்குகின்றன. இவற்றில் மார்புப் புற்று நோய், வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் என பல வகைகள் உள்ளன. இப்புற்று நோய்கள் அனைத்தும் மனித இருப்புக்கு பெரும் சவால் மிக்கவையாக விளங்கி வருகின்றன.

உலக நிலவரம்

images (1)அந்த வகையில் இன்றைய கால கட்டத்தில் உலகில் இடம் பெறுகின்ற மரணங்களில் 04 பேரில் ஒருவர் ஏதாவது ஒரு புற்றுநோயினால் தான் மரணமடைவதாக உலகலாவிய ரீதியில் மதிப்பிடப்பட்டு இருக்கின்றது. அதேநேரம் புற்றுநோய்கள் தொடர்பான தரவுகளை பகுப்பாய்வு செய்யும் போது இந்நோய்கள் தொடர்ந்தும் அதிகரிப்பதற்கான அச்சுறுத்தல்களை வளர்ந்து வரும் நாடுகளும், நடுத்தர வருமானம் பெறும் நாடுகளும் எதிர்கொண்டிருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புற்றுநோய்கள் தொடர்பான தரவுகளை உலகிற்கு வழங்கும் ‘கிலோபோ கென்’ அறிக்கையின்படி, 2012 ஆம் ஆண்டில் மாத்திரம் உலகெங்கிலும் 14.1 மில்லியன் பேர் புதிதாகப் புற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளனர். அதே வருடத்தில் இப்புற்றுநோய்களால் 8.2 மில்லியன் மக்கள் மரணமடைந்துள்ளனர். எனினும் தற்போது உலகில் 32.6 மில்லியன் மக்கள் ஏதாவதொரு புற்றுநோய்க்கு உள்ளானவர்களாக உயிர் வாழ்கின்றனர். அதுவும் கடந்த 05 வருட காலப்பகுதியில் தான் இவர்கள் இப்புற்றுநோய்களுக்கு உள்ளாகியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விபரங்களும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன.

Cancer 3அதேநேரம் ஏதாவது ஒரு புற்றுநோய்க்கு உள்ளானவர்களாக புதிதாக இனம் காணப்பட்ட நோயாளர்களில் 57 வீதமானோரும் அதாவது 8 வீதத்தினரும், மரணமடைந்தவர்களில் 5.3 மில்லியன் மக்களும் அதாவது 65 வீதத்தினரும் கடந்த 05 வருட காலப்பகுதியில் இந்நோய்க்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டுள்ள இதேவேளையில் புற்று நோய்களுடன் உயிர் வாழ்வோரில் 15.6 வீதத்தினர் அதாவது 48 வீதத்தினர் வளர்முக நாடுகளில் தான் இந்நோய்களுடன் காணப்படுகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில்…

images (2)அந்தடிப்படையில், இலங்கையில் புற்றுநோய்களின் நிலவரம் தொடர்பில் கவனம் செலுத்தும் போது, 2010 ஆம் ஆண்டின் புற்றுநோய்கள் தொடர்பான தேசிய ஆவணத்தின் படி, ஒரு இலட்சம் பேருக்கு 82.1 வீதத்தினர் புற்றுநோயாளர்களாக இந்நாட்டில் பதிவாகியுள்ளனர். அதிலும் இந்நாட்டில் பெண்கள் மத்தியிலான மார்புப் புற்றுநோய் தான் அதிகமாகக் காணப்படுகின்றது. பொதுவாக பெண்கள் உள்ளாகும் புற்றுநோய்களில் 26.8 வீதமானவை மார்பகப் புற்றுநோய்களாக விளங்குகின்றன.

இந்தத் தரவுகளின் படி, ஆண் – பெண் இரு தரப்பினரையும் எடுத்துப் பார்த்தால் மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியான இடத்தை வாய் மற்றும் வாய் சார்ந்த புற்று நோய்கள் பிடித்துள்ளது. இப்புற்றுநோய்களுக்கு சனத்தொகையில் ஒரு இலட்சம் பேருக்கு 12.2 வீதத்தினர் உள்ளாகியுள்ளனர். இவ்வகைப் புற்றுநோய்களுக்கு ஆண்களே பெரிதும் உள்ளாவதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

Cancer 1அத்தோடு ஆண்கள் மத்தியில் தோற்றம் பெறுகின்ற புற்றுநோய்களில் இது 24 வீதமாக விளங்குகின்றது. இவ்வகைப் புற்றுநோய்களுக்கு மேலதிகமாக நுரையீரல் புற்றுநோய், உணவுக் கால்வாய் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் குதவழிப் புற்றுநோய் போன்றவாறான புற்றுநோய்களுக்கும் ஆண்கள் உள்ளாகின்றனர். அதேநேரம் பெண்கள் மார்பகப் புற்றுநோய். கருப்பைக் கழுத்துப் புற்றுநோய், தைரொயிட் புற்றுநோய், உணவுக் கால்வாய் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் ஆகியவற்றுக்கும் உள்ளாகின்றனர்.

அறிகுறிகள்

அந்தவகையில் எவராவது ஒருவர் ஏதாவதொரு புற்று நோய்க்கு உள்ளாவாராயின் அவரிடம் ஒரு சில அறிகுறிகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். அதாவது வாய்ப்புற்று நோயாயின், வாயினுள் மாறாத வெள்ளைத் தழும்பு, சிவப்புத் தழும்பு, நீண்ட நாட்களாக காணப்படும் வெள்ளை மற்றும் சிகப்பு நிறத் தழும்பு, வாயில் அசாதாரண எரிவு, உதட்டிலும், வாயினுள்ளும் மென்படலம் ஏற்படல், நீண்ட நாட்கள் ஆறாத புண்கள் போன்றவாறரான அறிகுறிகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

imagesஉணவுக் கால்வாய் புற்றுநோய்களுக்கு உள்ளாகின்றவர்களாயின், உணவு விழுங்குவதில் படிப்படியான சிரமம். உணவு விழுங்கும் போது வலி ஏற்படுதல், உடல் நிறை குறைவடைதல், உடல் மெலிதல் போன்றவாறான அறிகுறிகளையும், பெருங் குடல் மற்றும் மலவாசல் புற்றுநோய்களுக்கு உள்ளாகின்றவர்களாயின் மலத்துடன் குருதி வெளியேறுதல், மலம் கழிப்பதில் மாற்றம், அடிக்கடி மலச்சிக்கல், மல வாசலினூடாக குருதி கசிதல், வழமைக்கு மாறாக மலம் மிக மெல்லியதாக வெளிப்படல், மலம் கழித்த பின்பும் மலம் கழித்ததில் திருப்தியின்மை போன்ற உணர்வு, வயிற்றுநோ, எதிர்பாராத விதத்தில் உடல் நிறை குறைவடைதல் போன்றவாறான அறிகுறிகளையும் அவதானிக்க முடியும்.

மேலும் மார்பகப் புற்றுநோய்க்கு உள்ளாககக் கூடியவர்களுக்கு மார்பகத்தின் உருவில் வித்தியாசம், மார்பகத்தின் அளவில் தெளிவான மாற்றம், மார்பில் கட்டி அல்லது வீக்கம், தோலின் வெளியில் படரும் அடையாளமுடைய புண், மார்பகத்தில் அரிப்பு, மார்பகத்தில் உற்குழிவு, தோடம்பழத்தின் தோலைப் போன்று மார்பகத் தோலில் மாற்றம், முளைக்காம்பு உள்வாங்கப்பட்டிருத்தல் போன்றவாறான அறிகுறிகளையும், கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் உள்ளாகக் கூடியவர்களாயின், யோனி வழியூடாக ஒழுங்கற்ற குருதிப் பெருக்கு, பாலுறவின் பின் குருதி வெளியேதல், துர்நாற்றத்துடன் யோனிவழியாக குருதிக் கசிவு, மாதவிடாய் வட்டம் முற்றப்பெற்ற பெண்களின் யோனி வழியாக குருதி வெளியேறுதல் போன்றவாறாயான அறிகுறிகளையும், தைரோயிட் புற்றுநோய்க்கு உள்ளாகின்றவர்களாயின் தைரேயிட் சுரப்பி வீங்குதல் அல்லது பெரிதாகுதல், கழுத்தின் இரு பக்கங்களிலும் நெறி கட்டுதல், குரல் கரகரப்படைதல், உணவு மற்றும் உமிழ்நீர் விழுங்குவதில் சிரமம், மூச்செடுப்பதில் சிரமம் போன்றவாறான அறிகுறிகளையும் காணக் கூடியதாக இருக்கும்.

Cancer 4இவ்வாறான அறிகுறிகளை அவதானித்தால் அல்லது அவ்வறிகுறிகள் மூன்று கிழமைகளுக்கு மேல் நீடித்தால் அவை தொடர்பில் தாமதமின்றி மருத்துவரை அனுகி மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். அதுவே ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இவ்விடயத்தில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இதேவேளை கருப்பைக் கழுத்துப் புற்றுநோய்க்கு தடுப்பு மருந்தும் புழக்கத்திற்கு வந்துள்ளது. இம்மருந்தை தேசிய தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தில் உள்ளடக்குவதற்கும் இந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

தவிர்த்தலும் கிசிச்சையும்

ஆனால் புற்று நோய்கள் தொடர்பான அறிவுடன், வாழ்க்கை முறையையும் உணவுப் பழக்க வழக்கங்களையும் ஒழுங்குமுறையாக பேணிக் கொண்டால் குறிப்பாக புகைப்பிடித்தல், புகையிலை மற்றும் மதுப்பாவனையை முற்றாகத் தவிர்த்து ஒழுங்குமுறையான உடற்பயிற்சியையும் மேற்கொண்டு வந்தால் மூன்றிலொரு பங்கு புற்று நோய்களை ஆரம்பத்திலேயே தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அத்தோடு புற்று நோய்க்கான அறிகுறிகளை ஆரம்ப கட்டத்திலேயே இனம் கண்டு சிகிச்சை பெற்றால் மேலும் முன்றிலொரு பகுதி புற்று நோய்களை முழுமையாகக் குணப்படுத்திக் கொள்ளலாம். அதன் காரணத்தினால் உடலின் ஏதாவது ஒரு பகுதியில் வித்தியாசங்கள், உருவ மாற்றங்கள் தென்படுமாயின் தாமதியாது மருத்துவ நிபுணரை அனுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகவும் அவசியமானது என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆகவே புற்று நோய்கள் தொடர்பான அறிவும் தெளிவும் விழிப்புணர்வும் ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியமானது. அவை பெரிதும் நன்மை பயக்கும் என்றால் அது மிகையாகாது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

ரகசியங்கள்…!

  • Thursday,24 Oct 2019
சுவடிக்கூடம்View All