Puttalam Online
health

தொழு நோய் – குணப்படுத்தக் கூடியது

  • 7 February 2017
  • 2,788 views

மர்லின் மரிக்கார்

உலக தொழு நோய் தினம் (World leprosy day) ஜனவரி 29 ஆம் திகதி ஆகும்.

உலகில் காணப்படும் மிகப் பழமையான நோய்களில் தொழு நோயும் ஒன்றாகும். இந்நோய் இலட்சக்கணக்கானோரின் உயிர்களைக் காவு கொண்டிருப்பதோடல்லாமல் மேலும் பல இலட்சக்கணக்கானோரை ஊணப்படுத்தியும் இருக்கின்றது. ஆரம்ப காலங்களில் இது கடவுளின் தண்டனை என்றே பார்க்கப்பட்டது. அதனால் இந்நோய்க்கு உள்ளானவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டனர். அந்த நிலையில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டனர்.

images (2)ஆனால் இது உலகில் காணப்படும் ஏனைய நோய்களைப் போன்ற ஒன்றே. இந்நோயின் மூல காரணி பக்றீரியா என்ற நுண்ணுயிரே என்பதை மருத்துவ உலகத்தினர் நீண்ட காலம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் உறுதிப்படுத்தினர். அதனை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்நோய்க்கான மருந்து வகைகளும், சிகிச்சை முறைகளும் புழக்கத்திற்கு வந்துள்ளன. அதனால் இப்போது இந்நோய்க்கு உள்ளானவர்களைத் தனிப்படுத்தி வைத்தோ, வைத்தியசாலையில் தங்க வைத்தோ சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை கிடையாது. அவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று குணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

images (1)இருந்தும் கூட உலகில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வருடாந்தம் இந்நோய்க்கு புதிதாக உள்ளாவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் வருடமொன்றுக்கு சுமார் இரண்டாயிரம் பேர் இந்நோய்க்கு புதிதாக உள்ளானவர்களாக இனம் காணப்படுகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொழு நோய்த் தடுப்பு இயக்கம் அறிவித்து இருக்கின்றது. அதன் காரணத்தினால் இந்நோய் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மருத்துவ உலகம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

இத்தொழுநோயின் மூல காரணி மைக்கோ பக்றீரியம் லெப்ரே ஆகும். இந்நோயில் இரு வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தொற்றக் கூடியது. இதற்கு மல்டி பசிலறி (Multi bacillary) என்ற பக்றீரியாவே காரணமாக அமைகின்றது. மற்றையது தொற்றாதது. இதற்கு பெளசி பசிலறி (Pauci bacillary ) என்ற பக்றீரியா காரணமாக விளங்குகின்றது.
என்றாலும் இந்நோயில் தொற்றிப் பரவக் கூடிய வகையை எடுத்துத் கொண்டால் இந்நோய்க்கு உள்ளாகி இருந்தும் அதற்கு உரிய சிகிச்சை பெறாத நோயாளர்கள் இருமும் போதும், தும்மும் போதும் சுவாசத் தொகுதியின் ஊடாக நோய்க் கிருமிகள் வெளிப்படும். இந்நோய்க்கிருமிகள் காற்றின் ஊடாக சுற்றாடலில் பரவும். இந்நோய்க் கிருமிகள் பரவியுள்ள காற்றை சுகதேகி சுவாசிக்கும் போது அவரினுள் இப்பக்றீரியா தொற்றிக் கொள்ளும்.

imagesஇருந்தாலும் உலக சனத்தொகையில் 80 வீதமானோரின் உடலில் தொழு நோய் எதிர்ப்புச் சக்தி காணப்படுகின்றது. அதனால் இப்பக்றீரியா தொற்றுகின்ற எல்லோருக்கும் இந்நோய் ஏற்படாது. ஆனால் உலக சனத்தொகையில் 10 வீதமானோரின் உடலில் தொழுநோய் எதிர்ப்பு சக்தி வீரியம் குன்றி காணப்படும். அவ்வாறானவர்களுக்குத் தான் இந்நோய்த் தாக்கம் வெளிப்படும்.

குறிப்பாக ஒருவருக்கு இந்நோய்க்கான காரணி தொற்றிவிட்டால் அது சருமத்தையும், சருமத்திற்கு உள்ளே அமைந்துள்ள நரம்புகளையும் தான் தாக்கத் தொடங்கும் அதன் விளைவாக தோலின் மேல் பகுதியில் வெளிறியதும் செந்நிறமானதுமான தழும்புகள் ஆரம்ப அறிகுறிகளாக வெளிப்படும். இப்படியான தழும்புகள் தலை தவிர்ந்த உடம்பின் பல இடங்களிலும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டோ வெளிப்படலாம். அத்தோடு தோல் தடித்தும் (குறிப்பாக காது மடல்களில்) நீண்ட கால விறைப்புத் தன்மையையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

Leparacyஅதேநேரம் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளவர்கள் முக்கிய விடயமொன்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது இந்நோய்க்காக வெளிப்படும் தழும்புகள் ஐந்துக்குக் குறைவாகக் காணப்படுமாயின் அது தொற்றா வகை தொழு நோயாக இருக்கும். ஐந்து தழும்புகளுக்கும் மேற்பட்டு காணப்பட்டால் அது தொற்றும் வகையை சார்ந்ததாக அமையும்.

இந்நோய்க் காரணி சருமத்தையும், சருமத்திற்கு உள்ளே அமைந்துள்ள நரம்புகளையும் தாக்குவதால் நோய்க்கு சிகிச்சை பெறத் தாமதமடையும் போது சில சமயம் அங்கவிகாரம் ஏற்படலாம். குறிப்பாக விரல்கள் குருகிக் காணப்படலாம், கால்களின் உணர்ச்சி நரம்புகள் பாதிக்கப்படுவதால் காலின் அடிப்பாதங்களில் உணர்வற்ற நிலை ஏற்படும், இதன் விளைவாக நீரிழிவு நோயாளர்களுக்கு போன்று அடிக்கடி காயங்கள் ஏற்படும், காலின் கணுக்கால்களுக்கு கீழ் உணர்ச்சியற்ற தன்மை காணப்படல், இதன் விளைவாக கால்களை இழுத்தபடி நடத்தல் என்பன அவற்றில் குறிப்பிடத்தக்க அறிகுறிகளாக விளங்கும்.

என்றாலும் இந்நோய்க்கு 1988 அம் ஆண்டு முதல் குருகிய கால சிகிச்சை முறையும் புழக்கத்திற்கு வந்துள்ளது. அதனை உரிய கால வேளையில் பெற்றுக் கொள்ளும் போது இந்நோயை முழுமையாகக் குணப்படுத்திக் கொள்ளலாம். ஆன போதிலும் இந்நோயில் இரு வகைகள் காணப்படுவதால் அதற்கான மருந்துகளும் இரு வகையாகக் காணப்படுகின்றன. அதாவது தொற்றக் கூடிய தொழு நோய்க்கு உள்ளாகியுள்ளவர்கள் 12 மாதங்களும், தொற்றாத வகைத் தொழு நோய்க்கு உள்ளாகியுள்ளவர்கள் 06 மாதங்களும் தொடராகச் சிகிச்சை பெற வேண்டும். அதன் மூலம் இந்நோயை முழுமையாகக் குணப்படுத்திக் கொள்ளலாம்.

எனினும் இந்நோய்க்கான மருந்துகளைப் பாவிக்கும் போது பக்க விளைவுகள் எற்படுகின்றது என்ற கருத்தும் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. ஆனால் இந்நோய்க்கு மருந்துகளைப் பாவிக்கும் போது 90 வீதம் பக்க விளைவுகள் ஏற்படாது என்று மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் தொற்றா நோய்க்கு மருந்து பாவிக்கத் தொடங்கும் போது மருந்தில் காணப்படும் நிறத்தின் காரணமாக சிறுநீரில் நிற மாற்றம் சிறிதளவில் ஏற்படலாம். இது அச்சப்படக் கூடிய விடயமல்ல.
அதேபோன்று தொற்றக் கூடிய வகை நோய்க்கு மருந்து பாவிக்கும் போது சில சமயம் சருமத்தின் நிறம் மாற்றமடையலாம். இருப்பினும் சிகிச்சை முழுமை அடைந்ததும் தோலின் நிறம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.

இவை இவ்வாறிருக்க, இந்நோய்க்கு மருந்து பாவிக்கும் காலப்பகுதியில் சிலருக்கு கண்களும் சிறுநீரும் மஞ்சள் நிறமாக மாறலாம், பசியின்மை, இலேசான காய்ச்சல் உட்பட ஈரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படக் கூடிய அறிகுறிகளும் கூட வெளிப்படலாம். அவ்வாறானவர்கள் சிகிச்சை பெறுவதை நிறுத்திவிட்டு, தாமதியாது மருத்துவரின் ஆலோனையைப் பெற வேண்டும். அதனடிப்படையில் தான் இந்நோய்க்கு தொடர்ந்தும் சிகிச்சை பெறுவது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.

எனினும் இந்நோய்க்கு ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை பெற்றுக் கொள்ளும் போது அங்கவிகாரங்கள் ஏற்படுவதை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ளலாம். அதிலும் விரல்கள் குருகியதாகவும் கால்களின் கணுக்காலின் கீழ் உணர்ச்சியற்ற தன்மையும் ஆரம்ப கட்டத்தில் காணப்பட்டால் உரிய சிகிச்சை மற்றும் எளிய உடற்பயிற்சி என்பவற்றின் மூலம் அவற்றைக் குணப்படுத்திக் கொள்ள முடியும். மற்றபடி இந்நோய்க்கு உள்ளாகியுள்ளவர்களை முன்பு போன்று தனிமைப்படுத்தி வைத்தோ. வைத்தியசாலையில் தங்க வைத்தோ சிகிச்சை அளிக்க வேண்டியதில்லை. இந்நோயை ஆரம்ப கட்டத்திலேயே இனம் கண்டு சிகிச்சை அளித்தால் அதனை முழுமையாகக் குணப்படுத்திக் கொள்ளலாம்.

நன்றி : தினகரன் – மகுடம்
28.01.2017


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All