Puttalam Online
star-person

எஸ்.எஸ்.எம். ரபீக் – நுண்கலை சொல்லும் பெயர்

Rafeek ssm (5)
(கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்)

புத்தளம் நகரின் தனிப்பெரும் கவிஞர்களில் ஒருவராக, சிறுவர் பாடலாசிரியராக, வானொலி அறிவிப்பாளராக, பட்டிமன்ற நடுவராக, சமூக ஆர்வலராக, சித்திரப்பாட ஆசிரியராக, நுண்கலையில் சிறப்பு தேர்ச்சி பெற்றவராக என பல்வேறு பரிமாணங்களில் தடம் பதித்த எஸ்.எஸ்.எம். ரபீக் 1951ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ம் திகதி சேகு ஷம்சுதீன் மற்றும் குரைஷா பீவி  தம்பதியினருக்கு அன்பு மகனாக பிறந்தார்.

குடும்பத்தில் மூத்தவரான இவர் சிறுவயதிலேயே கல்வியில் திறமையை வெளிகாட்டியது மட்டுமல்லாது மீலாத் விழாக்களிலும் பாடசாலை மாணவர் மன்றங்களிலும் பாடல் பாடுவது, அழகாக எழுதுவது போன்ற திறமைகளிலும் தன்னை வளர்த்து கொண்டார். இதன்மூலம் பாராட்டுக்களையும், பரிசில்களையும் ஆசிரியர்களிடமிருந்து சுவிகரித்து கொண்டார்.

தேசிய ரீதியில் நடைபெற்ற அரபு எழுத்தணி போட்டியில் கலந்து கொண்டு முதற்பரிசை சுவிகரித்தமையினால் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவினால் தங்கப்பதக்கம் வழங்கி வைக்கப்பட்டார். இவ் அரபு எழுத்தணி மரம் மற்றும் மர வேர்களை போன்றதான அமைப்பில் “அல்லாஹ்” என வடிவமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவரது திறமைக்கு பதினேழாவது வயதில் கிடைத்த தேசிய சான்றாக அமைகிறது.

Rafeek ssm (1)

பாவரசு விருது வழங்கிய வேளை

கல்வி, இதர கலைகள் என இரு தோணிகளையும் வேகமாகவும், விவேகமாகவும் செலுத்திய இவர் உயர் கல்வியை தொடரமுடியாத குடும்ப சூழ்நிலையில் ஆசிரியர் நியமனத்தினை பெற்றுக்கொண்டார். விஞ்ஞான பிரிவில் கல்விக்கற்ற இவர் ஆரம்பப்பிரிவு சித்திரப்பாட ஆசிரியராக பயிற்சி பெற்றார். தனது முதல் ஆசிரிய சேவையினை கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் 1971-1973 நல்கிய இவர் 1974-1975 ஆண்டு காலப்பகுதியில் பயிற்சி கல்லூரியில் தனது பயிற்சியை நிறைவு செய்துவிட்டு 1976 ம் ஆண்டு புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் இணைந்து கொண்டார். நான்கு வருடங்கள் சாஹிராவில் சேவையாற்றிய இவர் புத்தளம் புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தில் 1981-1983 வரை கடமையாற்றிவிட்டு மீண்டும் 1984 ம் ஆண்டு சாஹிராவில் இணைந்து கொண்ட இவர் 1990 ம் ஆண்டு கடமையிலிருந்து ஓய்வுப்பெற்று கொண்டார்.

2009 ஆம் ஆண்டு நுண்கலைக்கான அரச “கலாபூஷணம்” விருதினை பெற்றுக்கொண்டார். நுண்கலை எனும் போது சிங்களம், தமிழ், ஆங்கிலம், அரபு மொழிகளிலான இலட்சினைகள், சின்னங்கள் வடிவமைத்தல், சங்கு, கடற்சிப்பிகள், பீங்கான் போன்றவைகளில் வடிவங்கள் வரைதல், நுண்ணியமாக செதுக்குதல், மரத்தளப்பாடங்களில் பூ வேலைப்பாடுகள், அலங்காரங்கள் செதுக்குதல் என்பன இவரது திறமைக்கு எடுத்துக்காட்டாகும்.

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களுக்கு, கடல் கடந்து இந்தியா, மத்தியகிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் என இவரது கலைப்படைப்புக்கள் நினைவு சின்னங்களாக, பரிசு பொருட்களாக வலம் வந்துள்ளது, வந்து கொண்டிருக்கிறது எனும் போது நுண்கலை மீது கொண்ட அளவில்லா காதல் எவ்வகையானது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இவரிடம் ஒட்டியிருக்கும் இந்நுண்கலை யாரிடமும் கற்று கொள்ளாது தானாகவே வளர்த்து கொண்டது என்றால் இவரின் அயராத உழைப்பு பின்புலமாகின்றது.

16805099_10210198061602445_880518242_oஅதுமட்டுமல்லாது பழைய பாடல்கள், சினிமா பாடல்களுக்கு புதிய இசைவடிவம் கொடுத்து பாடும் இவர் 2008, 2009 ஆம் வருடங்களில் சிறுவர் பாடல்கள் அடங்கிய ஒலி நாடாக்கள், ஒலி தட்டுக்களை வெளியிட்டுள்ளார்.

ஓவியத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் இலங்கை கல்வி வெளியீட்டு திணைக்களத்தினால் 1980-1998 காலப்பகுதிகளில் வெளியிடப்பட்ட ஆரம்ப கல்வி இஸ்லாம் பாட நூற்களில் படங்கள், அரபு எழுத்தணிகளை எழுதி தேசிய மட்டத்தில் புத்தளத்தின் பெயர்தனை தடம்பதிக்க செய்தவர்.

இவர் சமூக ஆர்வலர் என்ற பரிமாணமாக புத்தளம் அறிவுசுடர் கல்வி மேம்பாட்டு அமைப்பு, புத்தளம் நவமணி வாசகர் வட்டம், முஸ்லிம் மீடியா போரம் உள்ளிட்ட அமைப்புக்களில் பல வருடங்கள் தலைவராக பணியாற்றியுள்ளார். அதேநேரம் வானொலி அறிவிப்பாளராக “புத்தளம் அந்நூர் வானொலி அலைவரிசையில் ஆண்கள், பெண்கள், இளைஞர் யுவதிகள், சிறுவர்களுக்கு என பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி வந்துள்ளார். அத்தருணம் “அந்நூர் மாமா” என மக்கள் மத்தியில் பிரபலமாக பார்க்கப்பட்டார்.

1976 ம் ஆண்டு கண்டியை சேர்ந்த சித்தி மர்சூனா என்பவரை கரம்பிடித்த இவருக்கு இறைவனின் பரிசாக இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் கிடைக்கப்பெற்றது. தந்தையை போலவே இரு ஆண் பிள்ளைகளும் நுண்கலையில் தேர்ச்சி பெற்று தந்தையின் தமையன்களாக மின்னுகின்றனர்.

புத்தளம் கால்பந்தாட்ட லீக், புத்தளம் பிரதேசத்தின் சில பாடசாலைகளின் இலட்சினைகள் இவரின் கைவண்ணத்தில் பிறந்தவை. அதேநேரம் 1976ம் ஆண்டு அணிசேரா நாடுகளின் தலைவர் பங்கு பற்றிய மாநாடு கொழும்பில் நடைபெற்ற பொழுது வந்திருந்த நாட்டு தலைவர்களுக்கு “சங்குகளிலான நினைவு சின்னங்கள்” தயாரித்து வழங்கப்பட்டது. இது பெருமைப்படத்தக்கதொரு தருணமாகவும், இவருக்கு சர்வதேச ரீதியில் கிடைக்கப்பெற்ற அங்கீகாரமாகவும் அமைந்துள்ளது.

Rafeek ssm (4)

பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்ட வேளை

இவற்றுக்கு அப்பால் இவர் ஒரு சிறந்த உதைபந்தாட்ட வீரராகவும் இனம் காணப்படுகின்றார். “Left extreme Player” ஆக புத்தளம் விம்பிள்டன் உதைபந்தாட்ட கழகத்தில் தனது திறமையை வெளிகாட்டிய இவர் பின்னால் அக்கழகத்தின் தலைவராக, செயலாளராக பணியாற்றியுள்ளார். இவர் விம்பிள்டன் உதைபந்தாட்ட கழகத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தற்போது முகநூல் நட்பு வட்டத்தை சேர்ந்த குழுமங்களினால் நடாத்தப்படும் “கவிதை, குறும்பா, சிறு கதைகள், சிறுவர் கதைகள்” போன்ற இன்னோரன்ன போட்டிகளில் கலந்து கொண்டு சுமார் 185 க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை பெற்றுள்ளார். இவை குப்பையில் கிடந்தாலும் குன்றுமணி மங்காது போன்று வயதானாலும் திறமை மழுங்கவில்லை என்பதாய் அமைகிறது.

இவ் லிங்கினை https://www.facebook.com/SSM-RAFEEK-200786386731/?__mref=message_bubble சொடுக்குவதன் ஊடாக அவரின் இலக்கிய புதுமைகளை வாசிக்கலாம், கற்றுக்கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாது “ஓவியச்சுடர், நுண்வினைக்கலைஞர், கவினெழி, கவியருவி, கவிச்சுடர், பாவரசு, கவிமழை, கவித்தென்றல், தங்கத்தமிழ் கவிஞர், கவிக்கடல், முத்திரை எழுத்தாளர், நிலா முற்றக்கவிஞர் என பலவிதமான பட்டங்களுக்கு சொந்தக்காரராக விளங்குகின்றார்.

எமதூரில் இவ்வாறாக பல்வேறு மனிதர்கள் ஒவ்வொரு துறைகளிலும் சிறப்பு தேர்ச்சி பெற்று புத்தளத்தின் நாமத்தை வரலாறுகளில் பதிய காரணகர்த்தாவாக இருந்துள்ளனர். இருந்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் சாதனைகள், இவர்களின் முயற்சிகள், பயணித்த பாதைகள் இன்றைய நிறைய இளசுகளுக்கு தெரியாது. இவர்களது வாழ்க்கை, இலக்குளை நோக்கி செல்லும், செல்ல ஆயத்தமாகும் எம்மவர்களுக்கு நிச்சயம் படிப்பினை தரும்.

வரலாறுகளை நாம் படிக்கும் போதுதான் நாம் வரலாறு படைக்கலாம். வரலாறுகளை மறக்காது நினைவு கூறும் சமூகம் ஆரோக்கியமான நகர்தலுக்கு முன்னோடியாகும். அனைவரிடத்திலும் அன்பாகவும், பண்பாகவும் பழகும், எளிமையாக வாழ்ந்து வரும் பன்முக ஆளுமை கொண்ட இவருக்கு வல்ல இறைவன் தேக ஆரோக்கியத்தை வழங்க வேண்டும்.

அச்சுக்கு ஆயத்தமாகவுள்ள இவரது “சிறுவர்களுக்கான சின்னக்கதைகள்” எனும் புத்தகம் மிகவிரைவாக எம்கைகளில் தவழ ஆவல் கொள்ளும் அதேநேரம் முன்கூட்டியே எமது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.

மூலம்: குடும்ப உறுப்பினர்கள், சக நண்பர்கள், பிராந்திய சஞ்சிகைகள்

WAK

Rafeek ssm (2) Rafeek ssm (3)


2 thoughts on “எஸ்.எஸ்.எம். ரபீக் – நுண்கலை சொல்லும் பெயர்

 1. Razmi Saheed says:

  நேர்மை, வெளிப்படைத்தன்மை, வாக்குறுதி பேணல், சொல்லுவதை தெளிவாக சொல்லுதல் , அனுசரித்தல் போன்ற உயர் பண்பாடுகளையும் நாம் ரபீக் சேரிடம் அவதானிக்க முடிகிறது. பன்முக ஆளுமை கொண்ட இவ்வரிய வளத்தை எமது பிரதேசத்தின் அல்லது சமூகத்தின் மனித வள மேம்பாட்டுக்கு எந்தளவுக்கு பயன்படுத்தி இருக்கின்றோம் என சிந்திக்க வேண்டியுள்ளது. paper qualification அடிப்படையில் வளவாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் இன்று ரபீக் சேர் போன்ற ஆற்றல் மிக்க அனுபவசாலிகளை கண்டுகொள்ளாதிருப்பது கவலையளிக்கிறது. மறைந்து கிடந்த எமது பிரதேசத்தின் ஒரு ஆளுமையின் தகவல்களை வெளிக்கொணர்ந்த தங்களுக்கு எனது நன்றிகள் கோடி.

 2. k.panneer selvam says:

  திரு றபீக் ஐயா அவர்கள் மக்களின் பேரில் மாறா பற்றுக்கொண்டவர்
  கடின உழைப்பாளியும் கூட!

  இந்த பதிவுகளைக் காணும் தோறும் அவர்தம் பெயரும் புகழும் நமக்கு
  தெளிவாக விளங்குகிறது!
  அருமையான இந்த பதிவுக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All