“சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா … ” இப்படி தான் பாட தோன்றுகிறது புத்தள வைத்தியசாலையை நினைக்கும் போது.
புத்தளம் மாவட்டத்தில் உள்ள A தர வைத்தியசாலைகளில் நமக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் ஒரு வைத்தியசாலையே இதுவாகும் . புத்தள மக்கள் , அதனை சூழவுள்ள மக்கள் , இடம்பெயர்ந்த மக்கள் என்று அனைவரின் வைத்திய தேவையும் இங்கு தான் நடைபெற்றாக வேண்டும் . ஆனால் நடைபெறுகிறதா என்பதற்கு இன்று நாம் அங்கு சென்ற போது தான் விடை கிடைத்தது .
வகை வகையான கட்டிய கட்டிடங்கள் , கட்டப்பட்டு கொண்டிருக்கும் மேலதிக கட்டிடங்கள் , அலங்கார வேலைப்பாடுகள் என்று பார்ப்பதற்கு ஒரு கவர்ச்சியை தரும் இவ் வைத்தியசாலையை பற்றி நாம் கொண்டிருந்த நல்ல அபிப்ராயம் எல்லாம் வைத்திய அத்தியட்சகர் திருவாளர் சுமித் அவர்களை சந்தித்து உரையாடிய பின்பும் , அங்குள்ள சில அறைகளை பார்த்த பின்பும் தவிடு பொடியானது .
70 வயது கிழவியொருத்தியை மேக்கப் போட்டு குமரி போன்று தோற்றமளிக்க வைக்கலாம் ஆனால் குமரியாக்க முடியாது என்பது போல் தான் இந்த வைத்தியசாலையின் தோற்றமும் .
ஒரு அறைக்கு சென்றோம் கட்டில்கள் கொஞ்சம் கிடக்கின்றன அவைகள் நம்மை பார்த்து பேசுவது போன்று ஒரு உணர்வு – நமக்கு மெத்தை வாங்கி தர வக்கில்லாத உனக்கெல்லாம் எதற்கு நம்மை வந்து பார்க்கும் வேலை என்று . ஆம் மெத்தைகள் இல்லை .
அடுத்த அறைக்கு சென்றோம் அங்கே மேல் மாடி , கீழ் மாடியென்று 16 குழந்தைகள் அதுவும் டெங்கு காய்ச்சல் என்று இனம்காணப்பட்ட குழந்தைகள் . கட்டில் இல்லை . ஒரு கட்டிலில் இருவர் உள்ளனர் .
எவ்வளவு பெரிய முரண்பாடுகள் ? ஒரு அறையில் மெத்தையில்லாமல் கட்டில்கள் .இன்னொரு அறையிலோ கட்டில் இல்லாமல் நோயாளி குழந்தைகள். மெத்தை இருந்தால் இந்த நோயாளிகளுக்கு கட்டில் இருக்குமல்லவா ?
டெங்கு காய்ச்சலுக்கு இங்கேயே பரிசோதனை செய்ய முடியாதா என்று வினவினோம் ? முடியுமாம் சில குறைப்பாடுகள் தான் உள்ளதாம் அதனால் தான் செய்ய முடியாது உள்ளனராம் . அதனை யார் நிவர்த்தி செய்து தருவது என்று நம்மிடம் கேள்வி மீள வருகிறது . வெளியே சென்று பரிசோதிக்க 1800 ரூபாய்க்கு மேலே செலவுகள் ஆகுமாம் .
நோயாளியின் நெஞ்சு பகுதியை படம் பிடித்து காட்டும் மொனிட்டர் கருவி ஒவ்வொரு வார்ட்டுக்கும் ஒவ்வொன்று தேவையாம் . இதன் அடிப்படையில் இன்னும் 25 கருவிகள் வேண்டுமாம் ஒரு கருவியின் விலை இரண்டு இலட்சம் தானாம். அப்படியெனில் மொத்தமே 50 இலட்சம் தான் . ஆனால் பிரேர அறை ஒன்று இருந்த நிலையில் இன்னுமொன்றிற்கு இரண்டு கோடி செலவு செய்து கட்டியுள்ளார்கள் . முஸ்லிம்களின் மரணம் தான் இங்கு கூடுதலாக நிகழ்கிறது அவர்கள் அதிக நேரம் உடலை இங்கு வைப்பதில்லை .அப்படியிருக்க இப்படியான பிரேர அரை ஒன்றிற்கான அவசியம் என்ன ? அந்த பணத்திற்கு இயந்திரங்களை வாங்கலாம் அல்லவா என்கிறார் வைத்தியர் சுமித் .
எல்லாம் போக இருமலுக்கு கொடுக்கும் மருந்துக்கு கூட தட்டுப்பாடு . எமக்ஸிலின் கூட சரியாக கிடைப்பதில்லை போராடுகிறோம் . வடமேல் மாகாண சபை மூலம் எவ்வித உதவிகளும் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டில் வேதனை தொனிக்கிறது .
250 தாதியர்கள் நோயாளிகளை பராமரிக்க தேவை இருப்பதோ 130 அளவிலே தான் அவர்களிலும் விடுமுறை , பயிற்சிகள் என்று 30 பேர் நாளாந்தம் விடுமுறை என்றால் நாம் நூறு நபர்களை வைத்தே அனைத்து நோயாளர்களையும் நிர்வகிக்கிறோம் எனும் தகவல் கிடைக்கிறது .
இன்று பாருங்கள் டெங்கு டெங்கு என்கிறார்கள் அதுவொரு பாரிய விடயமே இல்லை . அதற்கான சகல வசதிகளும் இருக்குமெனில் நாங்கள் மரணங்களை குறைக்க முடியும் . நோயாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடியும் . சென்று பாருங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் டெங்கு நோய்க்கு செய்யும் வைத்தியத்தை என்று உதாரணமும் காட்டுகிறார் .
தேர்தல் காலங்களில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு ஆகாய விமானம் மூலம் அவசரமாக செல்லும் அரசியல்வாதிகள் மக்களின் இவ்வாறன சுகாதார விடயங்களில் கவனமின்றி இருப்பது கவலையாகும் . புத்தளத்தில் மட்டும் தான் இந்த நிலைகள் உங்களது உள் வீட்டு பிரச்சினைகள் காரணமாக இந்த நிலை .இதனால் பாதிக்கப்படுவதோ இந்த ஊர் மக்கள் தான் என்று வைத்தியர் சுமித் சொல்லிய போது அவரின் வார்த்தைகளில் கோபம் , ஆதங்கம் கடந்து மனிதாபிமானம் தெரிந்தது .
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுகாதார அமைச்சர் நம்மை விடவும் சிறிய வைத்தியசாலை அமைந்துள்ள நிக்கவெரட்டிய பிரதேசத்திற்கு சென்றுள்ளார் அங்குள்ள அரசியல்வாதிகளால் அதனை சாதிக்க முடியுமெனில் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ஏன் முடியவில்லை?. அதோடு இங்கு ஏற்கனவே வந்தவர்களால் நடந்த நன்மைகள் தான் என்ன ? என்கின்ற கேள்விகளை அவர் கேட்ட போது நம்மிடம் விடை இல்லை .
எத்தனை பேர்கள் நோயுற்றாலும் , எத்தனை பேர்கள் மரணித்தாலும் வைத்தியர் சுமித் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் கிடைக்கும் அவர் குளு குளு அறையில் இருந்து அவற்றை பெறலாம் . அதையெல்லாம் தாண்டி நான் இந்த வைத்தியசாலையை உயர்த்த ஆசைப்படுகிறேன் ஒத்துழைப்பு தாருங்கள் என்று அரசியல்வாதிகளை கேட்கிறார் எனில் அதனை வழங்குவது தான் அரசியல்வாதிகளின் தார்மீக கடமை .
அதிலும் இந்த அரசின் கழுத்தை பிடித்து பெற வேண்டியதை பெற கூடிய உரிமை நமக்கிருக்கிறது . அதனை செய்து தர வேண்டிய கடமை நல்லாட்சி (எனப்படும்) அரசுக்கும் இருக்கிறது . ஏனெனில் புத்தள மாவட்டத்தில் நான்கு தொகுதிகள் இந்த அரசுக்கு எதிராய் செயல்பட்ட போது அந்த தோல்விகளை ஈடு செய்தது நமது புத்தளம் தொகுதியே ஆகும் .
ஆக , அரசியல்வாதிகள் இது விடயத்தில் கவனம் எடுத்தாக வேண்டும் . இல்லையேல் இந்த அரசிற்கு எதிரான மக்கள் போராட்டம் ஒன்றுக்கு அரசு முகம் கொடுக்க வேண்டும் .
இதை விடுத்து நமது அரச நிறுவனத்தை சரியாக முகாமை செய்ய ஒத்துழைக்காமல் தனியார் நிறுவனத்தை குறை சொல்வதில் எந்த பயனும் இல்லை .
இறுதியாக ஒரு கசப்பான உண்மை – நமது அரசியல் களத்தில் உள்ளோரில் அநேகருக்கு அரச வைத்தியசாலையின் பெறுமதி புரியுமா ? என்பதும் சந்தேகம் தான் . ஏனெனில் அவர்கள் எல்லாம் தனியார் வைத்தியசாலையில் மருந்தெடுத்து பழக்கப்பட்டவர்கள் . இன்னும் எடுக்க இருப்பவர்கள் .
(முஹம்மத் இன்பாஸ்)
WAK
Share the post "குறை கண்:16 உரிய தளபாடங்கள் இன்றி திக்குமுக்காடும் மாவட்ட வைத்தியசாலை"