Puttalam Online
art-culture

ஒற்றையடி- மைல் 04

  • 13 April 2017
  • 535 views

TOSHIBA Exif JPEG

 

சினிமாப்பாடல்கள் அள்ளிவரும் உணர்வுகளும் நினைவுகளும் எல்லையற்றவை! ஆனால் அவற்றில் சில நம் வாழ்வுடன் பிணைந்து விடுகின்றன, வாழ்நாள் முழுக்க இழுத்துக்கொண்டே வாழ்ந்து முடிப்போம். மேய்ந்த நினைவுகளை ஜீரணிக்க சில பாடல்கள் நமக்கு உதவுவதுண்டு, இப்போதெல்லாம் பாடல்களை சற்று தள்ளி வைத்து இன்றில் வாழ பழகி உள்ளேன். நேற்றைய பாடல்கள் வலி மிகுந்தவை!

கச்சிதமாக நம்மை நெருங்க பாடல்கள் தாங்கிவரும் சமாச்சாரம் மிக முக்கியம், இசையையும் தாண்டி வரிகளே நம்மை கட்டிப்போடுகின்றன. அப்படி கட்டிப்போட்ட ஒன்றுதான் “டேவிட்” திரைப்பட “மௌனமான மரணம் ஒன்று……”!

ஒவ்வொரு வரிகளும் கனமானவை, எளிமையாக கையாள முடியாத அளவு ஆழமான வரிகள், ஒருவனின் இழப்பின் பின்னால் எஞ்சும் காய வலிகள், அத்துனையும் சகிக்க முடியா தளும்புகள்!
“உயரமான கனவு இன்று தரையில் வீழ்ந்து போனதே….”
“கனவே கனவே கலைவதேனோ….”

கனவுகள் உடைவதென்ன அவ்வளவு வலி மிகுந்ததா என்றால் நிச்சயம் இல்லை, பிறரின் சிதறடிக்கப்பட்ட கனவுகள் நமக்கு வலிப்பதில்லை. கனவுச்சிதைவுகள் வலிக்க அவை தன்மை சார்ந்திருக்க வேண்டும், அப்போதுதான் அவை கருச்சிதைவுக்கு ஒத்த வலியை உணர்விக்கும், வாழ்க்கை முழுதும் குமுறிக்கொள்ள கசப்புகளை எச்சம் வைக்கும்!
நான் அறிந்து 5 வருடங்களாக காதலித்து வந்த நண்பனும் நண்பியும் பிரிந்தார்கள் சில மாதங்களுக்கு முன், அவன் அவளுக்காய் ஆயிரம் கனவுகள் கட்டி இருக்கக்கூடும், அது அவன் நாளை குறித்து அடையும் கவலையில் வெளிப்படும்.

நாம் நாளையை விடியலாக பார்த்த நாட்களிலேயே அவன் அதை விபரீதத்திற்கான வாசலாய் பார்க்க ஆரம்பித்து இருந்தான். தொழில், சம்பளம், அந்தஸ்து, வயது, வசதி பற்றி அவன் சிந்திக்க தொடங்கி இருந்த நாட்களில் நாம் நாளைய கிரிக்கெட் பற்றி மட்டுமே சிந்தித்திருந்தோம்!

பெரும்பாலும் அவன் அவளுக்கான வீட்டின் வரைபடம் வரைந்து உள்ளக வடிவமைப்பும் முடித்திருக்க வேண்டும். கதவு சாத்தியவுடன் முடியும் பெண்ணின் உலகம் மீதான பார்வை போல தடேலென முடிந்தது எல்லாம், எல்லோரும் எவ்வளவோ ஆறுதல் கூறினார்கள், நான் சொன்ன ஆறுதலுக்கு அவன் தந்த பதில், “எல்லாம் தெரிந்தும் நீயுமா?!….”
அதுதான் கனவுச்சிதைவு!

அவள் சார்ந்த இவன் நினைவுகள் ஒவ்வொரு நாளும் செல்லாக அரிக்கக்கூடும், நாளைய இன்னொருத்தியால் ஜீரணிக்கப்படக்கூடும், அல்லது இறப்பில் அவனை அது முனக வைக்கக்கூடும், அவன் அவளுக்கான கனவுகளை இன்னொருத்திக்காக உருமாற்றி வடிக்கக்கூடும், ஆனால் அது நிச்சயமாக அழிக்கப்பட முடியாத வடு!

ஊரில் ஒருத்தர் மெலிந்து தேய்ந்து சுருண்ட முடி கொஞ்சம் மிஞ்சிய தலையுடன் திரிவார், ஒரு காலத்தில் பெரிய கட்டழகன் என்று பழைய புகைப்படமொன்றை பார்த்து தெரிய வந்த நாளில் அவரது கனவுகள் எப்படி இருந்திருக்கக்கூடும் என்று நினைத்து பகீரென்றது எனக்கு!
இப்படி வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொருத்தரும் கனவுகளைத்தானா வாழ்கிறார்கள் என எண்ணத்தோன்றும், விடை தெரியா வினாக்களின் ஓடையில் அவை சங்கமிக்கும்!

சில வாரங்கள் முன்பு வைத்தியசாலை அருகே பரபரத்து விரைந்த நண்பனை சந்தித்தேன். “என்ன மச்சான், இந்த பக்கம்!?”-
“இல்லடா… wifeக்கு abortion….” என்று சொன்ன அவன் கண்களுக்குள் அந்த குழந்தை பற்றிய கனா பளிச்சிட்டு மறைந்தது!

-அப்ஸல் இப்னு லுக்மான்-


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All