Puttalam Online
historical-notes

கொத்துவாப் பள்ளி மைதானம் – தொண்ணூறு வருட கால நினைவுகளை புதைத்துக் கொண்டு மெளனித்துக் கிடக்கிறது

  • 13 April 2017
  • 876 views

17884314_639795066221654_6839415271720079088_n

சுட்டெரிக்கும் வெய்யிலில் காய்ந்து, கொட்டுகின்ற மழையில் ந‌னைந்து வானமே கூரையாய்க் கொண்டு தொன்னூறுகளை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் புத்தளம் நகரின் பாரம்பரிய மீலாத் மேடை இது.

இது வான் மறையின் வசனங்கள் மெய்யுருக ஓதக் கேட்டிருக்கிறது, வள்ளல் நபியின் புகழ்பாடும் ‌தேனினிய இஸ்லாமிய கீத, கஸீதா மழையில் கொட்டக் கொட்ட நனைந்திருக்கிறது அணல் பறக்கப் பறக்க சொற்போர்களைப் பார்த்திருக்கிறது.

மணிமொழி மௌலானா கலீலுர் ரஹ்மான், காமா ஹஸரத், மசூத் ஆலிம், ஈழமேகம் பக்கீர் தம்பி, அன்பு மொகிதீன் போன்ற, கலாநிதி எம்.ஏ. உவைஸ், தமிழக அறிஞர்களான பீர் முகம்மது, முகம்மது மிஸ்பாஹி வெளிநாட்டு இராஜ தந்திரிகள் எல்லாம் தன் மேல் ஏறி நின்று உரையாற்றிய பெருமைக்குரிய நாட்களையெல்லாம் இது தன்னகத்தே புதையலாய்ப் ‌புதைத்து வைத்துள்ளது.

தலைமுறை தலை முறையாகக் “கொத்துவாப் பள்ளி மைதானம்” என்று அழைக்கப்படும் திடலின் ஒரு பகுதியில் கண்டு கொள்ளப்படாது கிடக்கும் இம் மீலாத் மேடை நம் சமுகத்து கலாசார சின்னமாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது.

பசுமையாய் மனதின் எங்கோ ஒரு ஆழமான பகுதியில் அமிழ்ந்து கிடக்கும் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் போதெல்லாம் உள் உணர்வுகள் கையளவு இதயத்தை வருடிவிட்டு தேவைதனை செய்கிறது. வருடமொரு முறை மீலாதுகள் வரும், மூன்று நாட்கள் இம் மேடை களை கட்டிக் கிடக்கும். மேடையிலே தலைக்கு மேலே வெள்ளைப் பட்டுத்தாள் சோடி‌னைகள் காற்றில் சலசலத்தாடும்போது இனம் புரியாத ஒரு வித இன்பம் மனதில் ததும்பும். ஓடியாடித் திரியும் சிறுவர்களின் சிரிப்பொலியும், சண்டைச் சத்தமும் ஒரு திருவிழாக் கோலக் காட்சி தரும், நள்ளிரவின் பின்னரும் கூட சில போது விவாத அரங்கங்கள் விரிந்து செல்லும். ஆண்கள் ஒரு புறமும், பெண்கள் மறு புறமுமாய் நெடிய நேரம் கண்விழித்து அந்த இன்பத்தின் திளைத்திருப்பார்கள்.

என்னோடும், என் மண்ணோடும் விளையாடிவந்த தோழர்கள், பள்ளிக் கூடச் சமகாலங்கள் அருள் மறையை ஓதியிருக்கிறோம், கீதங்கள் இசைத்திருக்கிறோம், பேச்சுக்களில் வீர முழக்கமிட்டி‌ருக்கிறோம், விவாதம் என்று வந்தபோது இடியைப் பேல முழங்கி இருக்கிறோம். இவைகளெல்லாம் ஒரு காலம். மெய் மெய்யாய் இருந்த இனிமையான எமது இளமைக் காலம். அந்த இனிய நாட்களுக்கு சாட்சி பகரும் சாண்றிதழ்கள் கூட விடுகளில் எங்கோ ஒரு மூலையில் தூங்கிக் கொண்டிருக்கக் கூடும். பட்டியலிடப்பட்டு அழைத்துக் கொள்ளப்பட்டவர்கள் போய்ச் சேர்ந்துவிட்ட பின்னர் இன்னும் வாழும் பாக்கியம் பெற்ற பலர் அந்த நினைவுச் சுமைகளுடன் வாழ்ந்து கொண்டு இருக்கக் கூடும்.

சாஜஹான் மாஸ்டர், அனிபா மாஸ்டர், ஜொகுபர் மாஸ்டர், கமர்தீன் மாஸ்டர், லத்தீப் மாஸ்டர், வதூத் மாஸ்டர், ஹாஜா சகாப்தீன் மாஸ்டர், ரபீக் மாஸ்டர், நமாஸ் மாஸ்டர், சலீம் மரிக்கார் மாஸ்டர் இஸ்லாமி்ய முன்னணி இயக்கத்தினர், இளம் பட்டாதாரிகள் சங்கத்தினர் என நமது சம காலங்கள் மீலாத் விழாக்களை இங்கு சிறப்பாக மேடையேற்றிய நினைவுகளை இன்னும் இனிக்க இனிக்கப் பசுமையாய் மனத்தில் சுமக்கிறோம்.

கல்பிட்டி, கடையாமோட்டை, விருதோடை, கனமூலை போன்ற இடங்களில் இருந்தெல்லாம் பாடசாலை மாணவர்கள் போட்டிகளுக்கு வருவார்கள். ரபீயுல் அவ்வல் திங்களிலே மூன்று நாட்கள் இங்கு திரு விழாக் காலம் போலத்தான் இருக்கும். “ஓர்பே” மாஸ்டர், மலிக் மாஸ்டர் போன்றோர் இடி முழக்கம் போலப் பேசக் கேட்டிருக்கிறோம். நஸீம் டீச்சர் போன்றோர் ‌தேனிலும் இனியைமையாய் பாடக் கேட்டிருக்கிறோம், தையூப் மாஸ்டர் ஓதிய ”அர்ரஹ்மானை” இன்னும் மனதில் வைத்திருக்கிறோம். இப்திகார் லோயர், அமீன் லோயர், ஹிஸாம் ஹுசைன், சனூன், ரவூப் மாஸ்டர் போன்றோர் சொற்போர் நிகழ்திய விவாத அரங்குளைப் பார்த்து மெய் சிலிர்திருக்கிறோம். நெய்னா முகம்மதுவின் 1500 வினாடி அறிவுக் களஞ்சியங்கள் கேட்டு மகிழந்திருக்கிறோம். எல்லாமே பொய் பொய்யாய்தான் போய்விட்டன.

”பித்-அத்” என்ற பெயரால் அந்த நாளைய கலாசாரங்களெல்லாம் குரல்வளையை இறுக இறுக, மூச்சு தினறத் தினற காலடியில் போட்டு மிதிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட பின்னர் இது இப்போது இந்தப் பரிதாபக் கோலத்தில் கிடக்கிறது. இப்போது கூட மீலாத் என்ற பெயரில் மாணவர்களுக்கு ஆண்டுக் கொருமுறை எதோ செய்கிறார்கள். அதைக் காணும் தோறும் ஒரு பழைய அடகஸ்தலத்தில் சிலர் ஒன்று கூடும் பரிதாபக் கோலம் போலத்தான் என் கண்களுக்குத் தெரிகிறது. இந்த முறை அது கூட இல்லை. கொஞ்ம் அப்பால் உள்ள ஒரு மண்டபத்துள் பாரம் பரியத்தைக் கைவிடக் கூடாது என்ற உள்ளுணர்வோடு பல வித சிரமங்களுக்கு மத்தியிலும் நடாத்தி முடித்து கடமையை நிறைவு செய்து திருப்தி கண்டார்கள்.

பாவம் இந்த மீலாத் மேடை அதையும் பார்த்துக் கொண்டுதான் கிடக்கிறது. தொன்னூறு வருட கால நினைவுகளை அதன் அடியில் புதைத்துக் கொண்டு மெளனித்துக் கிடக்கிறது. இன்னும் பல காலம் இப்பரிதாபக் கோலத்தில் இது கிடக்கவும் கூடும். காலம் நகர இதை இடித்துத் தள்ளிவிட்டு இங்கு கடை அங்காடிகள் முளைக்கவும் கூடும். யார் கண்டார்கள்?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All