Puttalam Online
star-person

கை ராசிக்கார டாக்டர் – பஸ்தியாம் பிள்ளை ஐயா

  • 14 April 2017
  • 744 views

Newton Isaac

நமது உப்பு மண்ணின் மைந்தர்களாகளப் பிறக்காவிட்டாலும் கூட காதூரம் கடந்து வந்து இந்த மண்ணோடும், மண்ணின் மக்களோடும் பின்னிப் பிணைந்து இரண்டறக் கலந்து இந்த மண்ணி லேயே இறுதி மூச்சு விட்டவர்கள் பலர்.

அவர்களால் இந்த மண் அடைந்த நன்மைகளும் ஏராளம். அவர்களுக்கும் நமக்கும் இடையில் காலம் இழுத்துவிட்ட திரையினால் அவர்களின் முகங்கள் கூட நம்மில் பலருக்கு மறந்து போய்விட்டது. என்றாலும் காலத் திரையைச் சற்று விலக்கி மங்கலாகக் காணப்படும் சில முகங்களை வெளிச்சப் போட்டுக் காட்டும் நம் முயற்சியில் அடுத்த மூத்த பிரசைதான் டாக்டர் பஸ்தியாம் பிள்ளை ஐயா.

Dr Basthiyampillai

பஸ்தியாம் பிள்ளை ஐயா வடக்கு மண்ணின் மைந்தன். அவரின் தந்தை ஜேசப்f ஸேவியர் பஸ்தியாம் பிள்ளை அந்த நாட்களிலே யாழ்ப்பாணத்தில் தலைசிறந்த ஆயூர்வேத வைத்தியராம். அவர் அந்தக் காலத்திலேயே யாழ்ப்பாணத்தில் தனியார் ஆயூர்வேத பாடசாலை ஒன்றை நடாத்தி இருக்கிறார்.

சிறுநீர் கோளாறு, மூல நோய்கள் போன்ற உபாதைகளுக்கு வைத்தியம் செய்ய அந்த நாட்களிலே நமது மண்ணின் மரைக்கார்மார் யாழ்ப்பாணம் போவார்களாம். அப்படிப் போய் வந்த காலத்தில்தான் அவரைப் புத்தளத்துக்கு வந்து பணியாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இடைக் கிடையே அவர் புத்தளம் வந்து போனாலும் நிரந்தரமாக இந்த மண்ணில் தங்கி வைத்திய சேவையை நடாத்தும் வசதி வாய்பு இல்லாதிருந்ததால் அந்தக் காலத்திலே சிங்கப்பூரில் தனது வைத்தியக் கல்வியை தொடர்ந்து கொண்டிருந்த மகன் பஸ்தியாம் பிள்ளையை புத்தளத்துக்கு அனுப்ப எற்பாடு செய்ததாக பேரன் சேவியர் பஸ்தியாம் பிள்ளை நம்முடன் தான் கேட்ட வரலாற்றபை் பகிர்ந்து கொண்டார்.

தாம் செய்யும் தொழிலை தாம் வணங்கும் தெய்வத்துக்கு அடுத்த இடத்தில் வைத்துப் போற்றும் நல்லுள்ளங்கள் வகையில்தான் பஸ்தியாம் பிள்ளை ஐயாவைவும் வைக்க வேண்டியுள்ளது.

சின்னஞ் சிறிய புத்தளம். புழுதி படிந்த குறுகிய பாதைகள், இரவாகும்போது ஆங்காங்கே மின் மினிப் பூச்சுக்கள் போலக் கண்சி‌மிட்டும் தெரு விளக்குகள், ஆறு மணிக்கே எல்லாமே ஆடி அடங்கிப் போகும் மயாண அமைதி.

இது தான் அந்தக் காலத்துப் புத்தளம். இங்கே வைத்தியத் தொழிலில் பெரும்பாலும் ஈடுபட்டவர்கள் பரிசாரிமார்தான். இத்ரீஸ் பரியாரி, சின்னப் பரியாரி, கபீர் பரியாரி இப்படி அந்தப் பட்டியல் போகிறது. அவர்களுக்கு மத்தியில் ஒரு டாக்டராக மருத்துவத் தொழில் செய்ய வந்த விரல்விட்டு எண்ணத் தக்க இரண்டொருவர் மத்தியில் பஸ்தியாம் பிள்ளை ஐயா கோடிட்டுக் காட்டப்பட வேண்டியவர்.

சின்னஞ் சிறுசுகளுக்கும் பென்னம் பெரிய நோய்கள் வரும் இந்தக் காலம் போல அந்தக் காலம் இருக்கவில்லையே. ஒரு வகையான நோய்கள்தான் பெரும்பாலும். எனவே இந்தக் காலம் போல அந்தக் காலத்தில் விதம் விதமான மாத்தி‌ரைகள், ஊசி மருந்துகள் தர மாட்டார்கள். பஸ்தியாம் பிள்ளை ஐயாவின் டிஸ்பென்ஸரியில் பெரிய போத்தல்களில் கலவை செய்யப்பட்ட திரவ நிலையில் மருந்துகள் பல வகை நிறங்களிலும் இருக்கும். சின்னஞ் சிறிய மருந்து உரலில் எதையோ போட்டு இடித்து நீண்ட மருந்து கலவைக் கலசத்தில் போட்டு போத்தல்களில் இருந்து நிற நிறமான மருந்துக் கலவைகளை அதற்குள் வார்த்து கலந்து தருவார். ஆகவே நாம் மருந்து எடுக்கப்போகும்போது கட்டாயமாக இரண்டு போத்தல்கள், அல்லது சீஸாக்கள் கொண்டு போக வேண்டும்.

நமது ஆதார வைத்திய சாலை அந்தக் காலத்திலே ஒரு மாவட்ட வைத்தியசாலை. அது இருக்கும் இடம் அந்த நாட்களிலே முள்ளுக் காடு. தபால் நிலையத்தில் இருந்து பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் ஒன்றும் இருக்காது. அந்த வைத்திய சாலைக்குப் போவது பகல் காலத்தில் கூட கொஞ்சம் பயமாக இருக்கம். எனவே சின்ன சின்ன நோய்களுக்கெல்லாம் பஸ்தியாம் பிள்ளை ஐயாவை நாடுவது பொதுவான வழக்கம். Household name என்று சொல்வார்களே அப்படி.

பஸ்தியாம் பிள்ளை ஐயா கொஞ்சம் கைராசி காரர். மருந்து கொடுத்தால் விரைவில் குணமாகிவிடும் என்று அந்த நாட்களில் பலரும் நினைத்தார்கள். எனவேதான் நகரத்தில் காஸிம் டொக்டர், கரீம் டொக்டர் போன்றோர் இருந்தாலும் பஸ்தியாம் பிள்ளை ஐயாவுக்கு கொஞ்சம் மவுசு.

மருந்து எடுப்பவர்கள் வெற்றிலையில் மடித்துக் கொடுக்கும் கட்டணம் 50 சதம். பிற்காலத்தில் இது 3 ரூபா வரையில் உயர்ந்ததாக ஒரு நினைவு. மருந்து எடுத்துவிட்டு பஸ்ஸுக்குப் போக பஸ்தியாம் பிள்ளை ஐயா ஒரு ரூபா கொடுத்து அனுப்பிய அனுபவமும் இருந்திருக்கிறது.

அந்தக் காலத்திலே நோயாளிகளை வீட்டுக் வீடு போய்ப் பார்க்கும் உன்னத சேவையையும் பஸ்தியாம் பிள்ளை ஐயா செய்திருக்கிறார். வைத்தியசாலையில் வைத்தியர்கள் வாட்டுகளுக்குப் போவது போல காலை 7.00 மணிக்கே பஸ்தியாம் பிள்ளை ஐயா தமது நோயாளரைப் பாரக்க வீடுகளுக்குப் போவார். அதற்காக கட்டணங்கள் அறவிடுவதில்லை. செய்யும் தொழிலின் புனிதத்துவம் மட்டும்தான் அவரது கவலை. மிக் மென்மையாகப் பேசும் மிக மிருதுவான மனிதர். வைத்திய தொழிலுக்கு மிகப் பொருத்தமானவர்.

இந்த மண்ணின் சமுகமும் பஸ்தியாம் பிள்ளை ஐயாவை கைவிடவில்லை. அவர் கவலை இல்லாமல் ஓரிடத்தில் இருந்து தனது மருத்துவச் சேவையைச் செய்ய வேண்டும் என்பதற்கான ESM குடும்பத்தினர் அந்த நாட்களில் செட்டித் தெரு என அழைக்கப்பட்ட இந்த நாள் மஸ்ஜித் வீதியில் உள்ள வீட்டை வழங்கி இருக்கிறார்கள்.

அங்கு வைத்துத்துத்தான் பஸ்தியாம் பிள்ளை ஐயா தமது 73 வது வயதில் 1973 ஆண்டு இறுதி மூச்சை விட்டிருக்கிறார். பஸ்தியாம் பிள்ளை ஐயாவின் அடுத்த தலை முறை இந்த வீட்டில்தான் இன்றும் வாழ்கிறது.

செஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் – அந்த

நினைவினில் அவர் முகம் பதிந்திருக்கும் என்றும்….


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All