Puttalam Online
star-person

இலை மறை காய் – A M M ஹனீபா

  • 15 April 2017
  • 541 views

புத்தளம் நகரில் இலை மறை காயாக வாழ்ந்து மறைந்த  ஓர் ஆசிரியப் பெருந்தகை A M M ஹனீபா அவர்களாவார். ஆசிரியராக,அதிபராக,சமய சீலராக,சமூக சேவகராக ஊரவர்களால் ஓரளவு அறியப்பட்ட அவர் பிரபலமாகப்  பேசப்படாதவர்.
21.9.1925 திங்கள் அதிகாலை 1.15 அளவில் புத்தளத்தின் நடுத்தரக் குடும்பமொன்றில் பிறந்த அன்னாரின் தந்தை அசன் நெய்னா மரைக்கார், தாயார் ஜொஹரா பீபீ ஆவர். குடும்பத்தின் மூத்த பிள்ளையான இவரின் சகோதரர் A N M ஷாஜஹான்.சகோதரி சபீதாஉம்மா. சகோதரர் ஷாஜஹான் அவர்கள் ஆசிரியராக,அதிபராக, கல்வி அதிகாரியாக, எழுத்தாளராக, இலக்கியவாதியாக, வரலாற்றாசிரியராக, வானொலிப் பாடகராக பலராலும் அறியப்பட்டவர். இஸ்லாமிய நடைமுறை ஒன்றைப் பேணவேண்டும்  என்பதற்காக 21.4.1981ல் ஜெசீமா மஹ்மூத் என்பவரை ஹனீபா அவர்கள்  தனது 56வது வயதில்  திருமணம் செய்து இறுதிவரை அவருடன் அன்பாக வாழ்ந்தார்.
A M M ஹனீபா அவர்களின் இளமைக் காலம் வறுமையில் கழிந்தது. தந்தைக்கு நிரந்தரத் தொழில் இல்லை. எனினும் கல்வியில் ஆர்வம் இருந்தது. சிறுவயதிலேயே கடையொன்றில் ஊழியராக சேர்க்கப்பட்டார். குடும்பத்தைக் கவனிப்பதுடன் தனது தம்பியின் படிப்புக்கும் துணை புரிந்தார். அதன் பிரதிபலனாக தம்பி ஷாஜஹான் கற்றுத் தேர்ந்து ஆசிரியரானார்.
ஹனீபா அவர்கள் தாமும் கற்கவேண்டும் என்ற ஆர்வத்தில் விடாமுயற்சியுடன் ஓய்வு நேரங்களில் கற்று 1950 டிசம்பரில் நடைபெற்ற சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்திபெற்று ஆசிரியரானார். 1.11.1954ல் களுத்துறை முஸ்லிம் வித்தியாலயத்தில்  அவருக்கு  முதல் நியமனம் கிடைத்தது.  பின்னர் 1.10.1962ல் இரண்டாம் தலைமை ஆசிரியராகவும் 15.6.1974ல்  முதலாம் தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார். புத்தளம் இருந்து களுத்தறை சன்று கற்பித்து பெற்ற 154.52 சதமாகும்.
சமூக சேவை என்பது அன்னாரின்  குடும்பத்துடன் இரண்டறக் கலந்ததாகும். இவரின்  தந்தையாரும் அக்காலத்தில் சங்கங்களில் இணைந்து ஊருக்கு சேவையாற்றியவர். புத்தளத்தின் கல்வி, கலாசார, சமூக எழுச்சியை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட இஸ்லாமிய முன்னணி இயக்க (IFM) தாபக உறுப்பினர்களில் ஹனீபா ஆசிரியரின் பங்கு குறிப்பிடத்தக்கது.அவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்ட 4.9.1959 முதல், பல வருடங்கள் அதன் செயலாளராகப் பணியாற்றியதில் இருந்து இதனை உணர்ந்து கொள்ளலாம். மேலும் தனது இறுதிவரை தலைவர், பொருளாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். புத்தளத்தின் எழுச்சிக்கு அன்று  இவ்வியக்கம் ஆற்றிய பணி அளப்பரியது. புத்தளம் மெளலாமக்காம் பள்ளி வளவில் (மர்கஸ்)அமைந்துள்ள சங்கக் கட்டிடம் அவரின் முயற்சியே.
புத்தளம் நகரில் அஹதியா இயக்கத்தை ஆரம்பித்ததிலும் அவர் முன்னின்று உழைத்தார். புத்தளத்தின் அஹதியா வரலாறு என்பது ஹனீபா ஆசிரியரின் வரலாறு என்பது மிகையாயிருக்க முடியாது. ” நீல வானும் நிலவும் கதிரும் முகிலும் மழையும் அடவியும்….” என்ற அஹதியாக் கீதம்  அவரால் இயற்றப்பட்டதேயாகும். அவரின் காலத்தில்  அவர் அங்கம் வகிக்காத  மீலாத் ஷரீப் சொசைட்டி இல்லையெனலாம்.அன்று IFM, அஹதியா என்பனவே மீலாத் விழாக்களை நடத்தின. அதற்குக் காரணகர்த்தா ஹனீபா ஆசிரியரே. புத்தளத்தில் அஹதியா, IFM ஆகியவற்றை தாபித்து இறுதிவரை அதில் இணைந்து சேவையாற்றிமையைப் பாராட்டி 23.09.1919ல் மீலாத் விழா மேடையில் அவருக்கு “ஆசிரிய சிகாமணி ” பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
28.10.1931ல் முறையாக மார்க்கக்  கல்வியைப் பயில ஆரம்பித்த அன்னார்  தனது வாழ்நாள் முழுதும் இறை பக்தி மிக்க நல்லொழுக்க சீலராக திகழ்ந்தார் என்பது ஊரறிந்த உண்மையாகும்.புத்தளத்தில் தப்லீக் இயக்கம் அறிமுகமான காலப்பகுதி முதலே அதில்  இணைந்து சன்மார்க்க சேவை புரிந்தார். எச் சந்தர்ப்பத்திலும் ஐவேளைத் தொழுகையை அவர் விடவில்லை. தஹஜ்ஜத்துக்கு எழும் பழக்கமும் அவரிடம்  இருந்தது.
அழகான கையெழுத்தைக்  கொண்ட ஹனீபா ஆசிரியர் அவர்கள் ஒரு சிறந்த கவிஞராவார். பத்திரிகைகளில் “இறை தாசன்”, “புத்தளம் மாணவன்” , “சபீதா” போன்ற புனைப் பெயர்களில் பல ஆக்கங்களை எழுதியுள்ளார். அன்றைய பத்திரிகையில் “எங்கள் கழகம்” என்ற சிறுவர் பகுதியில் சிறுகதைகள்,துணுக்குகள், விடுகதைகள் போன்வற்றைத் தொடர்ச்சியாக எழுதிவந்துள்ளார். பிரசுரமாகாமலே பல கவிதை,கட்டுரைத் தொகுப்புக்கள்  இன்றுமுள்ளன. ‘சங்கப் பலா தந்த இன் தமிழ்த் தேன் சுளைகள்’ , ‘இஸ்லாம் சமய விளக்கமும் சரிதையும்’ போன்றன அவற்றுள் குறிப்பிடத்தக்கவையாகும்.
நூற்றுக்கணக்கான இஸ்லாமியக்  கீதங்களையும்  அவர் யாத்துள்ளார். பல பாடல்கள் புத்தளத்தில் அக்கால மீலாத் மேடைகளில் ஒலித்துள்ளன.  புத்தளம் கல்வி வலயத்தில் இன்றும் பல பாடசாலைகளில் அவரால் இயற்றப்பட்ட பாடசாலைக் கீதங்கள் பாடப்படுவதும்  குறிப்பிடத்தக்கது.
அவருடைய வாழ்நாளில் அவர் மேற்கொண்ட பெரும் எழுத்து முயற்சியாக “ஜும்ஆப் பேருரைகள் என்ற புத்தகத் தொகுதியைக் குறிப்பிடலாம். 92 பாகங்களைக் கொண்ட இதன் முதல் தொகுதி மட்டுமே 10.3.19959ல் வெளியிடப்பட்டது. ஏனையவை கையெழுத்துப் பிரதிகளாகவே இன்றும் உள்ளன. அக் காலத்தில் புத்தளம் பிரதேச கிராமங்கள் தோறும் இக் கையெழுத்துப்  பிரதிகளை எடுத்துச் சென்று கொத்பா பேருரைகள் நிகழ்த்தி அதனை மீளக் கையளிப்பது ஒரு வழக்கமாக இருந்தமை நினைவுகூரத்தக்கதாகும்.
ஹனீபா ஆசிரியர் அவர்கள் புத்தளத்தின் வரலாற்று நிகழ்வுகளைத் தேடி ஆராய்ந்து தொகுத்து எதிர்காலச் சந்ததியினருக்குக் கையளிக்கும் கைங்கரியத்திலும் ஈடுபட்டார். தனது குடும்ப “மரவரைபினை” 1754 – 1993 வரை  தொகுத்து ஓர் இமாலய சாதனையைப்  புரிந்துள்ளார். “செய்யது – செல்லம்மா” என்ற தம்பதியில் இருந்து அது ஆரம்பமாகின்றது. புத்தளம் நகரப் பள்ளிவாசல்களின் வரலாறு, மற்றும் பிரதேசக் குறிப்புக்களும் இவரின் கையெழுத்துப் பிரதிகளாக உள்ளன. புத்தளத்தில் இடம்பெற்ற பிறப்பு, இறப்பு, திருமணம் மற்றும் முக்கிய சம்பவங்களையும் பதிவு செய்துள்ளார். தனது மனம் கவர்ந்த அறிவுரைகளை “ஆத்மீக அறிவுச் சுரங்கம்” என்ற தலைப்பில் ஏழு பாகங்களாக கையெழுத்தில் தொகுத்துள்ளார். மேலும் தேசிய, சர்வதேச நிகழ்வுகளை கையெழுத்துருவிலும் பத்திரிகை நறுக்குகளாகவும் சேகரித்துள்ளார். ஹனீபா அவர்கள் தனது  சுயசரிதையை  எழுதியுள்ளாராயினும் துரதிஷ்டவசமாக அது இப்போது இல்லை.
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) எழுதிய இஹ்யா உலூமித்தீன் தமிழ் பதிப்புக்கள்  அனைத்தையும் ஹனீபா ஆசிரியர் அவர்கள் வாசித்திருப்பார் என்பது உறுதி.ஏனெனில் அவருடைய வீட்டு நூலகத்தில் அவை அனைத்தும் இருந்தன. மேலும் ஆனந்த போதினி(1920 கள்), இந்திய அறிவியல் சஞ்சிகையான கலைக் கதிர்(1950கள்) ,  போன்றவற்றின் தொகுப்புக்களும் மேலும் பெறுமதிமிக்க நூல்களும், பழைய அகராதிகளும் காணப்பட்டன.
ஹனீபா அவர்கள்  இரகசியமாகச் செய்த  பணிகளுள் சில  காலப் போக்கிலும் மரணத்தின் பின்னரும் தெரியவந்தன. குடும்பப் பிரச்சினைகளோ அல்லது ஊரில் முரண்பாடுகளோ வரும்போது இரு பக்க நியாயங்களையும் அலசி ஆராய்ந்து நீண்ட கடிதம் மூலம் இரு சாராருக்கும் எழுதி உணரவைத்துத் தீர்த்து வைத்துள்ளார்.  சிங்கள மொழி மூலம் கற்ற மாணவர்களைத் தனியாக அழைத்து இஸ்லாத்தை எடுத்தியம்பி நல்வழிப்படுத்தியதை அவர்கள் பின்னரே நன்றியுடன் நினைவு கூர்ந்தனர். தனது சொற்ப சம்பளத்திலிருந்து யாரும் அறியாமல் கொடுத்துள்ள தான தர்மங்கள் எண்ணிலடங்காதவை.
பொறுமை,அமைதி,அடக்கம்,பணிவு,ஆரவாரமின்மை, எளிமை,போன்ற அனைத்து குணாம்சங்களும் ஒருங்கேயமைந்த, என்றுமே தாழ்ந்த குரலில் பேசும் அன்னார் 8.10.2001ல் இறையடி எய்தினார்கள்.அவரின் அளுத்கமை ஆசிரிய பயிற்சிக் கல்லூரி நண்பன் கவிஞர்  கல்ஹின்னை A C M சுபைர் அவர்கள் இவருடைய நினைவுக் குறிப்பேட்டில் எழுதிய வரிகள் இவை:
“அருந்தமிழ்ப் பொழிலிற் பூந்தேன்
               அருந்திடு வண்டாய்ச் சுற்றித்
திரிந்திடும் வேளை தன்னிற்
               தினகரன் கூட்டிற் றெம்மை
ஒருங்குறப் பினைந்தோம் அன்பில்
               ஒழுகிடும் மைமு னையில்
பெருந்தகை இறைவன் நேரிற்
               பிணைந்துமே வாழச் செய்தான்
அன்புறை நேய வும்மை அகந்தனி லென்றுங் காண்பேன்
உன்திரு மொழிகள் மேலாம் உதவிகள் உணர்வை யூட்டும்
தண்டமிழ் எழுத்து வன்மை, தேடிமே இனிது செய்யும்
மென்மல ருள்ளம் கொண்டோம் மேதினிச் சிறந்து வாழி !
                                                                          “குறிஞ்சிக்குயில்”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All