Puttalam Online
star-person

ஆங்கில ஆசிரியர் ஜவுபர் மாஸ்டரின் “JK” டியூட்டரி எப்போதும் மாணவர்களால் நிரம்பிப் போயிருக்கும்.

  • 17 April 2017
  • 573 views

Newton Isaac

“நேரம் இருந்தால் முன்னாள் ஆங்கில ஆசிரியர் JAWFER Sir பற்றியும் எழுதுங்கள்.” எனது உற்பெட்டிக்கு வந்த இந்த வேண்டுகோளுக்கு “ஆகட்டும் பார்க்கலாம்” என்று பதில் அனுப்பிவிட்டதும் எனது மனதில் அச்சம் ஏற்படுத்திய இரண்டு அம்சங்களில் ஒன்று அவரைப் பற்றிய தகவல் எங்கே பெறுவது?, மற்றயது அவருடைய படத்தை எங்கே பெறுவது? உண்மையிலே இது கொஞ்சம் சிரமமான காரியம்தான்.

17862605_641657502702077_306705323371610119_n

ஜவுபர் மாஸ்டர் புத்தளம் நகரத்தின் ஒரு பிரபல்யம் என்று சொன்னால் அதற்கு மாற்றுக் கருத்து இருக்காது என்பது எனது கருத்து. அவரைப் பற்றி பின்னர் வருவோம். மாலை நான்கு மணி ஆகிய பின்னரும் நன்பகல் போல கொதித்துக் கொண்டிருக்கும் சித்திரை வெய்யிலை நினைத்துக் கொண்டபோது கொஞ்சம் அச்சமாகக் கூட இருந்தது. ஜவுபர் மாஸ்டருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர், பல பிள்ளைகள், பல பேரப் பிள்ளைகள். எங்கே போய் யாரிடம் “படம் ஒன்று தருவீங்களா?”  என்று கேட்பது

நினைவிருக்கிறதா மரணித்துவிட்ட தன் ஒரு பிள்ளையை புத்தபிரானிடம் கொண்டு போய் ஒரு இளம் தாய் உயிர் பிச்சை கேட்டபோது “சாகாத வீடு ஒன்றில் ஒரு பிடி கடுகு வாங்கிவா” என்றாராம் புத்தபிரான். வாசற் படி தோறும் ஏறிப்போய் ஒரு பிடி கடுகு கேட்ட பெண் மீது பச்சாதாபங் கொண்டு கடுகு தர எல்லோரும் முன்வந்தார்களாம். ஆனால் அது சாகாத வீடாக இருக்க வேண்டுமே. இது தான் அச்சொட்டாக நேற்றைய சிங்கள தமிழ் புத்தான்டின் போது எனக்கும் ஏற்பட்டது.

கொதிக்கும் வெய்யிலில் நகரத்தின் வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் மேற்கிலும் அமைந்திருந்து ஜவுவர் மாஸ்டரின் இரண்டு மனைவிமார் வீட்டுக்குப் போனேன், பிள்ளைகள் வீட்டுக்குப் போனேன். எல்லா வீட்டிலும் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக பழைய அல்பங்களை எடுத்தும் தேடினார்கள். அப்பாவை நேரில் கண்டிராத ஜவுபர் மாஸ்டரின் பேத்திமார் கூடத் தேடினார்கள். தனியாக இரு படம் இல்லை. எல்லாம் கூட்டத்தோடு இருந்த படங்கள்தான். ஒன்று கூட “சாகாத வீட்டு ஒரு பிடி கடுகு” போல இல்லை. கடைசியாக ஒரு மனைவியின் வீடு தேடிப் போனபோது அவரின் அடையாள அட்டையைத் தந்தார். அப்பாடா என்று ஒரு நெட்டுயிர்ப்புடன் அதைப் பெற்றுக்கொண்டு வீடு வந்தேன். புரப்பட்டபோது அஷர் தொழுகையை முடித்துக் கொண்டுதான் போனனேன் வீடு வந்ததும் வராததுமாக மஃரிப்புக்கான  “அல்லாஹு அக்பர்” ஒலித்தது.

ஜவுபர் மாஸ்டர் பல்கலைக்கழகம், ஆங்கில உயர் கல்வி நிறுவனம் என்றெல்லாம் படி ஏறி இறங்கி ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்றவர் அல்லர். அவர் ஒரு “Self – Made English Teacher” கடும் முயற்சி காரணமாக தாமாகக் கற்று ஆங்கிலத்தில் திறமையை வளர்த்துக் கொண்டவர். ஆங்கில மொழித் திறமையை மாத்திரமல்ல கற்பிக்கும் கலையை இயற்கையாகக் கொண்டவர். எத்தனைதான் பாண்டித்தியம் பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் இந்த நகரத்தில் இருந்தாலும், இருந்துவிட்டுப் போயிருந்தாலும் ஜவுபர் மாஸ்டருக்கு என்று இந்த நகரத்திலே ஒரு தனி இடம் இருந்தது. ஆங்கிலக் கல்வியில் அவரது பங்களிப்பு மிகக் காத்திரமானது.

தனக்கென ஒரு தனிப் பாணியை வகுத்து ஆங்கிலக் கல்வியை நகரத்துக்கு வழங்கி வந்த ஜவுபர் மாஸ்டரின் “JK” டியூட்டரி எப்போதும் மாணவர்களால் நிரம்பிப் போயிருக்கும். “ஜவுபர்-கிரிபா” என்று தனது அன்பு மனைவயின் பெயரையும் இணைத்து இந்தப் பெயரை அவர் வைத்திருக்கிறார்.

முதிர்ந்த முன்பள்ளி ஆசிரியை கிரிபா உம்மாவை சந்திக்கப் போனேன். “அவரிடம் அபாரத் திறமை இருந்தது. கடின உழைப்பாளி. இரவு 12 மணிக்குப் பின்னரும் கூட மாணவர்கள் வருவார்கள். சில போது நாங்கள் முருகன் கபேயில் பார்சல் எடுத்து வைத்துவிட்டு இரவு 1.00 மணி தாண்டிய பின்னர் சாப்பிடுவோம்” என்று கூறினார். ஜவுபர் மாஸ்டரின் கடின உழைப்பை இது கோடிட்டுக் காட்டுகிறது.

ஆனால் ஒரு கணவனைப் பற்றி ஒரு மனைவி உயர்வு நவிட்சியாகச் சொல்லாம் தானே. எனவே தனது ஆரம்ப நிலை ஆங்கிலத்தை ஜவுபர் மாஸ்டரிடம் கற்ற துறை சார்ந்த ஒருவரிடம் கேட்டேன். ”மிகத் திறமையான ஆசிரியர். எனது அடிப்படை ஆங்கிலத்தை அவரிடம் இருந்து கற்றேன். ஆங்கிலத்தின் அஸ்திவாரத்தை பலமாக இட்டார். இன்று நன்றாக இருக்கிறோம்” என ஒரு நல்ல Certificate ஐத் தந்தார்.

ஜவுபர் மாஸ்டரைப் பற்றிய தேடல் எனது புருவங்களை உயரச் செய்கிறது. புத்தளம் நகரத்திலும் சரி, சுற்றுப் புற கிராமங்களிலும் சரி இப்போது சமூக அந்தஸ்துடன் விளங்கம் பலருக்கு ஜவுபர் மாஸ்டர்தான் ஆங்கிலம் படிப்பித்திருக்கிறார்.

துறை சார்ந்தோர் அவரிடம் வந்திருக்கிறார்கள், உயர் உத்தியோகத்தர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் நள்ளிரவின் பின்னர் கூட ஆங்கில் கற்க வந்திருக்கிறார்கள் என்றால் அவரிடம் இருந்த ஆற்றலும், அடிப்படையை ஆழமாக இடவேண்டும் என்ற துடிப்பும் அவர் கடினமாகச் செயற்பட்டுள்ளார் என்பதைத்தானே காட்டுகின்றன.

எனக்கு “”Is” ற்கும் “Are” ற்கும் பொருள் தெரிந்ததே ஜவுபர் மாஸ்டரால்தான்” ஒரு பட்டதாரியும், இப்போது நல்ல உத்தியோகம் ஒன்றில் இருக்கும் ஒரு சகோதரி இன்னொருவருடன் பேசிக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அதிகமானோரை அவரது ஆங்கிலக் கல்வி சென்றடைந்திருக்கிறது. அவர்கள் எல்லோரும் அவர் கொடுத்த ஆங்கிலக் கல்வியில் இருந்துதான் இன்று தம்மை வளர்த்துக் கொண்டு சமூகத்திலே நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்பதை நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது.

ஜவுபர் மாஸ்டர் ஒரு இசை ஞானம் உள்ளவரும் கூட. “எக்கோடியன்” “டப்ளா” போன்ற இசைச் கருவிகளை வாசிப்பதில் கைதேர்ந்தவர். ஒரு ராகத்தை ஒரு முறை கேட்டதும் அதன் ராக, தாள, சுருதிகளை உடனேயே கிரகித்து இசைக் கருவிகளை மீட்டுவதில் அவருக்கு அபாரத் திறமை இருந்திருக்கிறது. ஆரம்பப் பள்ளிகளுக்கான இசை சேவையை வழங்குவதில் தனது திறமையைக் காட்டி வந்துள்ளார். ஆனால் தனது இசைப் பயணத்தைத் தொடராமல் பாதையை மாற்றி ஒரு ஆங்கில ஆசிரியரானார்.

ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் நகரத்தில் மிகப் பிரபல்யமாகப் பேசப்பட்ட ஆங்கில ஆரிசியர் ஜவுபர் மாஸ்டர்தான். அவரது மாணவர்கள் இந் நாட்டில் மூலை முடுக்கெங்கும் வாழலாம், கடல் கடந்து கூட வாழலாம். அவர்களின் இதயங்களில் ஜவுபர் மாஸ்டரின் இனிய நினைவுகளைக் கிளறிவிட்டு அவரை நினைத்துக் கொள்ளச் செய்வதுதான் இந்த எனது முயற்சி.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All