Puttalam Online
star-person

பலதை சாதித்துவிட்டு சத்தமில்லாதிருக்கும் மூத்த பிரசை- ஹலீம் அப்பா

  • 17 April 2017
  • 1,441 views

“டாக்கடர் பஸ்தியான் பிள்ளை என்று ஒருவர் இருந்தது நினைவிருக்கிறதா?” இப்படி எனது உட்பெட்டிக்கு ஓய்வு பெற்ற பிரதி தேர்தல்தல் ஆளையாளர் சகோதரர் நபீல் அவர்கள் அனுப்பிய செய்தியைத் தொடர்ந்து அந்த ஆக்கத்தை ஆக்கவும், அதற்கான புகைப் படத்தைத் தேடிக் கொள்ளவுமாக நான்கு நாட்களுக்கு மேல் எனக்குத் தேவைப்பட்டது.

Haleem

அது முடிந்த கையோடு பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் சகோரர் ஷன்ஹீர் அவர்களிடம் இருந்துவந்த தொலைபேசி அழைப்பில் ஒரு அவரசம் இருந்தது. இருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவசரமாக அவர்களைப் பற்றிய தகவலைச் சேகரித்து எழுதங்கள்” என்ற அந்த வேண்டுகோளில் உண்மையிலேயே ஒரு அவசரம் இருந்தது. அவர் பெயர் குறிப்பிட்ட இருவரில் ஒருவரைகண்டு பேசி இன்று மாலையே எழுதுவிட வேண்டும் என்ற துடிப்பு எனக்கு. ஏனெனில் இந்த சிரேஸ்ட மண்ணின் மைந்தர் தன் வாழ்வின் பொழுதடையும் நேரத்தை நெருக்கிக் கொண்டிக்கிறார்.

வீடு தேடிப் போனால் ”பள்ளிக்கு” என்ற தகவல் கிடைத்தது. மஸ்ஜிதுல் ஹைறாத் பள்ளிவாசல் பக்கமாகச் சென்றபோது மஃரிப் தொழுகைக்குப் பின்னர் ஒரு நாற்காலியில் அமர்ந்து ”திக்ர்” செய்து கொண்டிருந்தார். 82 வயதாகி, கேள்விக் குறிபோல் முதுகு வழைந்து தட்டுத் தடுமாறி நடக்கும் நிலையிலும் பள்ளிவாசலுக்கு வந்து படைத்தவனின் திருப்திக்கா காத்திருக்கும் இந்த அழகான வெள்ளைத் தாடி, தொப்பி, சாந்தமான முகம், நன்றியுணர்வோடு ‌தரையில் தலை‌வைத்துத் தொழுத வட்ட வடிவ கரிய வடு சகிதம் காணப்பட்ட இவரின் நெஞ்சுதான் எத்தனை பாரத்தைச் சுமக்கிறது. மனைவி இல்லை, பிள்ளைகள் என்று யாரும் இல்லை. இந்தக் கவலை எதுவும் இவர் இதயத்தை எதுவும் செய்து விடவும் இல்லை. மலைபோல் துயர் வந்தாலும் எதையும் தாங்கும் இதயம் இவருக்கு.

எம்.எச்.ஏ. ஹலீம் என்பது இவரது பெயர் என்றாலும் கூட பட்டப் பெயர் பாரம்பரியத்தில் ஊறிப்போன இந்த மண்ணில் இனிப்பான ஒரு பட்டப் பெயரை அடை மொழியாகப் பாவித்தால் விளங்காதவர்களுக்கும் நன்கு விளங்கும் ”சக்கரை ஹலீம்”

சம்பவங்களையெல்லாம் முக நூல் அணுசரணையுடன் சாதனைகளாக்கிக் காட்டும் நமது சமகால உலகில் இந்த சி​ரேஷ்ட மண்ணின் மைந்தனின் Track Record நமது புருவங்களை உயர்த்துகிறது.

இந்த நாட்களில் ”சென்ட் அன்றூஸ் ஆரம்பப் பாடசாலையாக” இருக்கும் அந்த நாளைய ”சென்ட் ஏன்ஸ் பெண்கள் பாடசாலை” தான் இவருக்கு அகரம் போதித்துள்ளது. தமிழ் அகரம் அல்ல ஆங்கில எல்பfபட். அதைத் தொடர்ந்து சாகிராவுக்குப் போயுள்ளார். இப்போதுள்ள சாகிரா அல்ல அந்த நாளைய நோர்த் ரோட் சாகிரா. அதைத் தொடர்ந்து கொழும்பு சாகிரா இப்படித் தொடர்ந்துள்ளது ஹலீம் அப்பாவின் முதல் நிலை, இடை நிலைக் கல்வி.

கொழும்பு சாகிரா இவருக்கு சாதனைக் களம் ஒன்றை அமைத்துக் கொடுத்திருக்கிறது. பள்ளிக் காலத்திலே கொழும்பு சாகிராவின் உதை பந்தாட்ட அணியின் உறுப்பினர். ஐம்பதுகளில் தொடராக மூன்று ஆண்டுகள் பாடசாலைகளுக்கிடையிலான உதை பந்தாட்டப் போட்டிகளில் அசைக்க முடியாதிருந்த கொழும்பு சாகிராவின் உதை பந்தாட்ட அணியின் சாதனைக்கு காத்திரமான பங்களிப்புச் செய்தவர். Football, Table-tennis, Badminton, Billiards, Carom, Tennis இவைகளெல்லாம் இவருக்கு கைவந்த கலை.

பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு நில அளவைத் திணைக்களத்தில் ”வரைபட வரைஞர் ” Surveyor Draftsman” ஆக தனது வாழ்வைத் தொடங்கிய இந்த ஹலீம் அப்பா நில அளைவத் திணைக்களத்தை பிரதிநிதித்துவஞ் செய்து மூன்று முறை இந்தியப் பயணத்தை மேற்கொண்டு Men’s Double Carom போட்டிகளில் சாதனை படைத்துள்ளார். தோற்கடிக்கவேபடாது 06 ஆண்டுகள் வலிமை மிக்கதாய் இவரது Men’s Double திகழ்ந்துள்ளது கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒன்று. நில அளவைத் திணைக்களத்தின் Tennis “A” அணிக்குப் பங்களிப்புச் செய்து முறியடிக்கப்படாத மூன்று ஆண்டு வெற்றிக்குக் காத்திரமான பங்களிப்புச் செய்தவர்.

Billiards விளையாட்டில் உலக கோப்பையை வென்று இலங்கைக்கு புகழ் தேடிக் கொடுத்த M.J.M. லாபீரின் 06 உறுப்பினர் அணியில் இந்த ஹலீம் அப்பாவும் அந்த நாளில் முன்னோடி ஆட்டக்காரர். சேர் ராஸித் பரீத் அவர்களை அனுசர‌ணையாளராகக் கொண்ட Moor Islamic Cultural Home அமைப்பின் பெருமைக்குரிய உறுப்பினர்.

சாதனைகளைச் சாதித்து முடித்த பின்னர் சத்தம் இல்லாமல் இருக்கும் இந்த மூத்த பிரசைகளை சமுகம் அவ்ளவாக இனங்கண்டு கொள்ளவில்லை என்பதைச் செல்லியே ஆகவேண்டும்.

முக நூல்கள் இருந்திருந்தால் அந்தக் காலத்திலே இந்த சாதனைகள் இமயத்தில் உச்சியில் இருந்து உலகெங்கும் கேட்டிருக்கும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All