Puttalam Online
star-person

ஆரம்பப் பாடசாலைகளில் முதற் படியாகநின்ற குமாரி பாட்டியும், கிரிபா கண்ணாவும்

  • 17 April 2017
  • 672 views

Newton Isaac

சமுகம் ஆறு கடக்கவும், ஏறிச் சென்று எட்டும் வரை எட்டிப் பிடிக்கவும் ஆசிரியர்கள் தோணியாகவும் ஏணியாகவும் அமைகிறார்கள்.

பாடசாலைகளில் ஆசிரியர்கள் ஏணியாக நிற்கையில் ஆரம்பப் பாடசாலைகளில் அவர்கள் ஏணியின் முதற் படியாக நிற்கிறார்கள்.

Thinakara Kumari Kirifa

ஒரு தலை முறைக் காலத்துக்கு முன்பு இந்த இரண்டு முதற்படிகளில் ஏறிச் சென்றோர் ஆயிரக் கணக்கில் இருக்கக் கூடும். அவர்கள் இந்த நகர மண்ணில், இந்த நாட்டின் ஆங்காங்கு ஏன் கடல் கடந்தும் வாழக் கூடும். இந்த இரண்டு முகங்களைக் காணும்போது அவர்களின் இதயத் திரைகளில் அவர்களின் குழந்தைக் கால நிலைவுகள் நிழலாடக் கூடும். அந்த நினைவுகளை மீட்டிக் கொள்ளும்போது இனந் தெரியாத இன்ப உணர்வுகளை அவர்களின் மனங்களில் முகிழ்க்கவும் கூடும்.

அந்த எதிர்பார்புடனேதான் ஒரு தலைமுறைக் காலத்துக்கு முன் நகர முன்பள்ளிகளில் ஆசிரியைகளாகக் கடமையாற்றி தினகர குமாரி பாட்டியையும், கிரிபா உம்மா கண்ணாவையும் இன்று நான் சமுகத்தின் முன்னர் அழைத்து வருகிறேன்.

தினகர குமாரியும், கிரிபா உம்மாவும் இந்த நகரத்தின் முன்பள்ளி ஆசிரியைகளின் முன்னோடிகள் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் “Preschool” , “Nursery ” என்ற இந்தக் கால நாகரீக வார்த்தைப் பிரயோம் கூட இல்லாத 1975 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ”மொன்டிசூரி அம்மையாரின்” பெயரில் இயங்கி வந்த பாடசாலைகளில் சேவை செய்து வந்தவர்கள் இந்த இரு மூதாட்டிகள்.

பகற்போதில் சிறு பிள்ளைகளுக்கு தாய்மாருக்குச் சமமான பாதுகாலர்களாய் இருந்தவர்கள். இவர்களிடம் தம் ம‌ழலைச் செல்வங்களை ஒப்படைத்து விட்டு சிறு‌ போது தாய்மார்கள் அமைதி கண்டிருக்கிறார்கள். அந்த மழலைச் செல்வங்க‌ளை தம் சொந்த பிள்ளைகள் போல அரவணைத்து பாட்டும் கதையும் சொல்லிப் பராக்குக் காட்டி அன்பொழுக வளர்த்தவர்கள் இந்த குமாரி பாட்டியும், கிரிபா கண்ணாவும்.

புத்தளம் நகர பிதாவாக எஸ்.எம்.எம். இபுனு அவர்கள் சேவையாற்றிய காலத்தில்தான் நகர சபை இரண்டு முன்பள்ளிகளை அமைக்கத் திட்டமிட்டு இந்த இருவரையும் மிகப் பொருத்தமானவர்களாக இனங் கண்டு தெரிவு செய்தது. குமாரியின் முன்பள்ளி இப்போது அமைக்கப்பட்டு வரும் மாவட்ட விளைாயாட்டரங்கில் இருந்த மிகப் பழைய கட்டிடத்திலும், கிரிபா உம்மாவின் பள்ளி ஜாவுசன் பள்ளி வீதியில் இப்போது அமைந்துள்ள புத்தம் புதிய பள்ளி வாசல் அமைந்திருக்கும் இடத்திலும் இருந்தது.

இந்த முன் பள்ளிகளில் முன்பிள்ளைப் பருவக் கல்விக்கான நவீன அடிப்படைத் தேவைகள் ஏதும் இருக்கவில்லை. ஆசிரியர்களுக்கு அதற்கான பயிற்சி இருக்கவே இருக்கவில்லை. மூன்று வயது கடந்ததும் பிள்ளைகளை முன்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற இன்றைய தாய்மாரின் துடிப்பு அப்போதைய தாய்மாருக்கு அவ்வளவாக இருக்கவில்லை.

அந்தக் காலத்திலே புத்தளம் நகர சபை குமாரிப் பாட்டிக்கும், கிரிபா கண்ணாவுக்கும் வழங்கிய அலவன்ஸ் வெறுமனே எழுபத்தைந்து ரூபாய்கள்தான். அந்த சம்பளத்திலே 20 அல்லது 25 குழந்தைகளை காலை முதல் முற்பகல் நேரம் வ‌ரையில் பராமரிப்பது, பாட்டும் கதையும் சொல்லித் தருவது, பசி எடுக்கும்போது உணவூட்டுவது உட்பட குழந்தைப் பராமரிப்பின் அத்தனை காரியத்தையும் நீண்ட கால் நூற்றாண்டு காலத்துக்குச் சற்று அதிகமாகச் செய்து முடித்து விட்டு இப்போது ஓய்ந்து போயிருக்கிறார்கள்.

குமாரிப் பாட்டியையும், கிரிபா கண்ணாவையும் தனித் தனியாக அவரவர் இடம் தேடிப்போய் சந்தித்தேன். தினகர குமாரி நன்றாக இருக்கிறார். வயது முதிர்வு பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் கிரிபா உம்மாவைப் பார்க்கப் போய் ஒரேயடியாக இடிந்து ‌போய்விட்டேன்.

கிரிபா உம்மாவைப் பொறுத்தவரையில் வாழ்வாதாரக் கஸ்டம் இல்லை. அவர்கள் ஒய்வு பெறுவதற்கு முன்னர் உள்ளுராட்சித் திணைக்களத்தின் ஓய்வுதிய நிலைக்கு உள்வாங்கப்பட்டதால் ஓய்வூதியம் கிடைக்கிறது. ஆனால் அதுதான் வாழ்க்கை அல்லவே. அவர் வாழும் சுற்றாடலை, அவரின் உடல் தளர்வு நிலையைப் பார்க்கும்போது, அவற்றைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத நிலையைப் பார்க்கும்போது துயரம் தொண்டையயை அடைத்துக் கொள்கிறது.

கிரிபா உம்மா தனது வாழ்நாளின் பிற்பகுதியல் பிரஸித்தி பெற்ற ஆங்கில ஆசிரியர் ஜவுபரை இரண்டாம் அல்லது மூன்றாம் தாரமாகத் திருமணம் செய்தவர். பிள்ளைகள் இல்லை. ஜவுபர் மாஸ்டரின் மறைவின் பின்னர் கங்காணிக் குளம் வீதியில் செலான் வங்கி ஒழுங்கையில் தனது பிறந்த வீட்டில் வாழ்கிறார்.

வீட்டுக்குள் நுழையும்போதே மனித சஞ்சாரம் உள்ள இடம்தானா என்ற சந்தேகம் வந்தது. பழை பொருட்கள் எல்லா இடங்கிலும் குவிந்து கிடக்கின்றன. உட்புரம் மிகவும் இருளாக இருக்கிறது. ஒரு பெண் நோயாளி வீட்டின் முன்புறத்தில் ஒரு பலகைக் கட்டிலில்  கிடக்கிறார்.

கிரிபா உம்மா டீச்சரின் பெயர் சொல்லி அழைத்தேன். ”யார்” என்று உள்ளே இருந்து சத்தம் வந்தது. பெயர் சொன்னபோது ”எழுந்து வர கொஞ்சம் நேரமாகும் தயவு செய்து அமர்ந்திருங்கள்” என்ற குரல் வந்தது.

பொறுமையோடு காத்திருந்தேன். கொஞ்ச நேரம் ஆன போது ”டொக்….. டொக்……” என்ற சத்தம் வந்தது.

கூனிக் குறுகி ஒரு பிளாஸ்டிக் கதிரையை ஊன்று கோலாகப் பாவித்து முன் பக்கம் வந்து அமர்ந்து கொண்டார். வெள்ளைப் பஞ்சுபோல சுருண்ட தலை மயிர் எல்லாப் பக்கமும் கட்டுப்பாடின்றி விரிந்து கிடந்தது. ஒரு வகை அச்சம் தரும் நிலை. வேதனையாக இருந்து. வந்த வியடத்தைச் சொல்லி ”படம் ஒடுத்துக் கொள்ள வேண்டும்” என்ற எனது எண்ணத்தைத் தெரிவித்ததும் ”கொஞ்சம் பொறுங்கள்” என்று கூறிவிட்டு தாவணியை தலையில் போட்டுக் கொண்டபோது இந்த படத்தை எடுத்தேன்.

அவரைப் பராமரிக்கவும், அவரின் வீட்டை கூட்டிக் பெருக்கி சுத்தமைாகப் பேணவும் யாரும் இல்லை. பரிதாபக் கோலம். இவரிடம் ”அகரம்” படித்தவர்களும், பாட்டுக் கதை படித்து மகிழ்ந்திருந்தவர்களும் இப்போது வாழ்வில் நல்ல நிலையில் இருக்கலாம். ஆனால் இந்த முன்னாள் முன்பள்ளி ஆசிரியரின் நிலை பரிதாபமாக இருக்கிறது.

இதுதான் தலை விதி போலும். இந்த நாட்டு மக்கள் எல்லோருக்கும் இலவசக் கல்வியை தந்த முன்னாள் கல்வி அமைச்சர் C.W.W. கன்னங்கரா வாழ்வின் இறுதிக் காலத்தில் தர்ம சம்பளத்தில் (பிச்சைப் படி எனச் சொல்லப்பட்ட) தம் வாழ்நாளின் இறுதிக் காலத்தைக் கழித்தாரம்.

இதையெல்லாம் பாரக்கும்போது எனக்கு ஒரு பழைய பாடல் நினைவுக்கு வந்தது

இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்
இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்
எவ்வளவுதான் இருந்தாலும்
எப்படித்தான் பார்த்தாலும் இவ்வளவுதான்……


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All