Puttalam Online
historical-notes

காலத்தால் அழியாது மார்தட்டி நிற்கிறது – தைக்காப் பள்ளி – 01

  • 24 April 2017
  • 745 views

Newton Isaac

நினைவு தெரியாத நாள் முதலாய் அங்கேயேதான் நிற்கிறது. எல்லாமே மாறிப்போன பின்னரும் பெரிதாக மாறிக் கொள்ளாமலேயே நிற்கிறது. ”தைக்காப் பள்ளி” இந்த மண்ணோடு கொண்ட உறவுக்கு வயது தெரியவில்லை. ஆனால் அந்த உறவின் வலிமை தெரிகிறது. அந்த உறவின் ஆணி வேர் மிக ஆழத்தில் இருப்பது புரிகிறது.

17523563_636277509906743_6435315586961911200_n

அந்தக் காலத்திலே அருள் மறையின் ஆரம்ப எழுத்துக்களை, ஆரம்ப வரிகளை இங்கே தானே நம் அப்பாமார், கண்ணாமர், வாபிச்சாமார் படித்தார்கள். அந்த எழுத்துக்களை, வரிகளை மனதில் போட்டு மீட்டும்போது வேடிக்கையாக இருக்கும், நம்மை அறியாமலேயே சிரிப்புச் சிரிப்பாய் வரும்.

ஒரு பலகை இருக்கும். அதில் ஒரு வகை சுண்ணக் கல்லைத் தண்ணீரில் கரைத்துப் பூசி வெள்ளை நிறமாக்கி அதன் மேல் பள்ளி மாமா மார் ”கலம்” என்னும் எழுது கோல் கொண்டு அரிசியைச் காச்சிச் செய்யப்பட்ட கருப்பு சாயத்தால் முதல் பாடங்களை எழுதித் தருவார்கள். அந்தக் காலத்து சிறுசுகள் பய பக்தியோடு வாசித்துப் பழகுவார்கள். தொப்பி கூட அதிக அளவில் பாவனையில் இல்லாத அந்த நாட்களில் ஆண் பிள்ளைகள் ”கை லேஞ்சு” என்று சொல்லபடப்ட கைக்குட்டையைத் தலையில் கட்டிக் கொண்டும், பெண் பிள்ளைகள் தலை மூடி முக்காடிட்டுக் கொண்டு அந்த சொற்களை உச்சரிக்கும்போதுதான் எத்தனை பய பக்தி.

”கீரை”……, ”மீசை”…….., ”சர்வத்”……, ”மஸ்கத்”……, ”புல்புல்”…… அந்த சொற்களை மீட்டும் போது இப்போதும்தான் மனதுக்குள் ஒரு வித பயபக்கி வருகிறது. அப்துல் அப்பாக்கள், அஞ்சந்தர் மாமாக்கள், ஆனைவாய் அப்பாக்கள், பொட்டக் கண் சாரா மாமிக்களை, சல்ஹா கண்ணாக்களை நினைத்துக் கொள்ளும்போது ”கீரை, மீசை, சர்வர், மஸ்கத்” வரிகளை எப்படி மறப்பது.

யார் யாரிடமெல்லாம் ஓதினோம், எங்கெங்கெல்லாம் நமது பள்ளிகள் இருந்தன என்பதெல்லாம் மறந்து போய்விட்டது. பாடசாலை முடிந்து வந்த கையோடு ஓதல் பலகையையும், தஃலீம் குர்ஆணையும் எடுத்தக் கொண்டு ஓடிப்போய் வரி வரியாய் அமர்ந்து ஓதி மனனமிட்டு, மனனம் இல்லாதபோது பிரம்படிபட்டு அஸர் தொழுகைக்கு அதான் ஒலிக்கும் வரை மீட்டி மீட்டி மனமிட்ட காலம் மாத்திரம்தான் நினைவு வருகிறது. அத்தனைக்கும் மத்தியே காலம் என்னை எதுவும் செய்து விடவில்லை என்று மார்தட்டிச் சொல்லிக் கொண்டு நிற்கிறது இந்த தைக்காப் பள்ளி.

இதை இடித்துத் தள்ளிவிட்டு இது நிற்கும் இடத்தில் மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றை உலமா சபை நிறுவப் போவதாகக் கூட காற்றோடு ஒரு செய்தி வந்தது.

காணாமல் போகுமுன்னர் ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள். தைக்காப் பள்ளிக்கு முன்னால் நின்ற குள்ளப் புளிய மரம் போல இதுவும் காற்றோடு காற்றாக மறைந்து போய்விடும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All