Puttalam Online
historical-notes

அப்பாஸ் மரிக்கார் சமுக நலனுகக்காக அர்ப்பணம் செய்த ஒரு முதுசம் – தைக்காப் பள்ளி -02

  • 24 April 2017
  • 825 views

Newton Isaac

புத்தளம் இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள ”தைக்காப் பள்ளி” யை மையமாக வைத்து சில வாரங்களுக்கு முன்னர் நான் எழுதிய ஆக்கம் வெறுமனே இனிமையான ஒரு அந்த நாள் ஞாபகம் மட்டும்தான்.

புனித குர்ஆனின் அட்சரங்களை பிள்ளைகளுக்கு புரிய வைப்பதற்காக அந்த நாட்களில் நம் மூத்த மக்கள் கையாண்ட ஒரு பொறி முறைதான் ”கீரை, மீசை, மஸ்கத், கிஸ்மிஸ்…” போன்ற ஓசை நயங்கள்.

அந்த இனிமையான நினைவுகளை மீண்டும் அசை போட்டு இளம் தலை முறையினருடன் பகிர்ந்து கொண்டு நாம் பெற்ற இன்பமெல்லாம் பெறுக நம்மவரெல்லாம் என்ற எண்ணத்தோடு மட்டுமே அது எழுதப்பட்டது.

அந்தக் காலத்து பள்ளி மாமாக்கள், பள்ளிக் கண்ணாக்கள் நடாத்திய குர்ஆன் பள்ளிகள் எல்லாம் காலப் புயற் சுழிக்குள் சிக்கி மறைந்து போயின் மிச்ச சொச்சமாக இருப்பது அந்த ”தைக்காப் பள்ளி” மாத்திரம்தான் என்பதால் அதை எனது ஆக்கத்தின் கருப்பொருளாகப் பாவித்திருந்தேன்.

அந்த ஆக்கம் வெளிவந்த இரண்டொரு தினத்தின் பின்னர் அந்த தைக்காப் பள்ளிக் கட்டிடம் உணர்வு பூர்வமான வரலாறுகளைத் தனது அத்திவாரத்தின் கீழ் புதையல் போல புதைத்துக் காத்து வரும் தகவல் அதன் பெருமைக்குரிய உரிமையாளர் நெயினா முகம்மது லெவ்வையின் மரபுரிமையாளர்களில் ஒருவரான ஹயருன் டீச்சரிடம் இருக்கும் தகவல் கிடைத்தபோது அவருடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு அவரையும், அவரின் சகோதரிகள், சகோதரிகளின் பிள்ளைகளை சந்திப்பதற்கான ஏற்பாடு செய்து கொண்டேன்.

நேற்றைய பின்னந்திப் பொழுதில் முன்னாள் ஆசிரியர் கற்பிட்டி செல்ல மரிக்கார் அவர்களின் துணைவியார் வீட்டு முற்றத்தில் ‌நெயினா முகம்மது லெவ்வையின் வாரிசுகள் சகிதம் வட்டமாக அமர்ந்திருந்து பேசி மகிழ்ந்த சம்பவம் அலுத்துச் சலித்துப்போன வாழ்வு ஓட்டத்தில் ஒரு இனிமையான பொன் மாலைப் பொழுதாக அமைந்திருந்தது.

ஹைருன் டீச்சரிடம் ஒரு தகவல் சுரங்க‌மே இருப்பதைக் கண்டபோது அந்தத் தகவல்களை வைத்து இன்னும் பல மாதங்களுக்கு இனிமையான பழங்கால நினைவுகள் பற்றி எழுதலாம் என்ற நம்பிக்கை என்னுள் பிறந்தது.

Hayarun Teacher

இந்த படத்தில் ஹைருன் டீச்சரின் குடும்பப் படத்துடன் இருக்கும் அடுத்த படத்தில் இருப்பவர் இந்த நகரத்தில் எங்கோ ஓடிப்போய் ஒழிந்து கொண்ட இனிமையான நாட்களில் நமது நகரத்தின் கலை, கலாசார, பண்பாடுகளில் அக்கரை கொண்டு அவற்றைப் பாதுகாப்பதற்காக தம்மை அர்ப்பணித்த மூத்த மக்களில் ஒருவரான நெயினா முகம்மது லெவ்வை அப்பாஸ் மரிக்கார்.

Abbas Marikkar

தைக்காப் பள்ளி இப்போது ஒரு சிறு பிரதேசத்துக்குள் மட்டுப்பட்டுக் கிடந்தாலும் அதன் பரப்பளவு நீண்டு புத்தளத்தின் பிரபல குள்ளப் புளிய மரத்தை உள்ளடக்கி அந்த நாள் ”பானா அப்பா” க‌டை வரை செல்வதாக ஹைரூன் டீச்சரின் கோவைகளில் தகவல்கள் இருக்கின்றன.

எனவே தைக்காப் பள்ளியின் நிலம் சிறிது சிறிதாக நிலக் கையாடலுக்கு உட்பட்டிருப்பது அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அதைப் பற்றியோ, தைக்காப் பள்ளியின் தற்போதைய உரிமை பற்றியோ அப்பாஸ் மரிக்காரின் வாரிசுகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அந்த நாட்களிலே தம் முன்னவர்கள் சமுக நனலுக்காக அர்பணித்த அந்த நிலமும், கட்டிடமும் சமுக நலனுக்காக இன்னும் பல்லாண்டுகள் நிலைத்திருக்க வேண்டும் என்பதில் இந்த குடும்பத்துக்கு இரண்டாம் கருத்து இல்லை.

இஸ்லாமிய வரலாற்றில் ஒரு கறை படிந்த அத்தியாயமான கர்பலா நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு இந்த தைக்காப் பள்ளியிலும் அந்த நாட்களில் ”பஞ்சா” எடுத்தல் உள்ளடங்கிய பல ஒவ்வாத செயற்பாடுகள் நீண்ட காலமாகவே நடந்திருக்கிறது.

அந்த வரலாற்றில் சடுதியான ஒரு திருப்பம் நிகழ்ந்துள்ளதை ஹைரூன் டீச்சர் தனது பதிவுகளில் இருந்து சுட்டிக் காட்டினார். தனது அன்புத் தந்தையான அப்பாஸ் மரிக்கார் தனது 18 வது வயதில் ஒரு வைகறைப் பொழுதில் பஞ்சாப் பெட்டியைத் தலையில் சுமந்து சென்று புத்தளம் ஏரிக்குள் வீசி விட்டு அந்த அநாச்சாரங்களில் இனிமேல் ஈடுபடக் கூடாது என தனது அன்புத் தந்தை நெயினா லெவ்வை மரிக்காரிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டாராம். நல்ல வேளை நெருப்புக் குழிக்குள் வீசிப்படும் சம்பவம் போன்று ஒரு கறை படிந்த வரலாறு அமையவில்லை.

அந்த இடத்தில் ஒரு குர்ஆன் மத்ரஸா அமைய வேண்டும் என்பது அப்பாஸ் மரிக்காரின் கனவு. அந்தக் கனவு மத்ரஸத்துல் ஹஸனைன் என்ற குர்-ஆன் மத்ரஸாவாக உருவானாலும் அந்த இடம் இன்று வரையில் ”தைக்காப் பள்ளியோதான்”

இந்த நாட்களைப் போல நகர மண்டபம், அல்லது சன சமுக நிலையம் என்றெல்லாம் இல்லாத அந்த நாட்களில் தேர்தல் கால வாக்களிப்பு நிலையமாக செயற்படல் உட்பட எல்லா விதமான பொதுச் செயற்பாடுகளுக்கும் இது ஒரு பொதுக் கட்டடிமாகவே திகழ்ந்துள்ளது.

என்றாலும் தைக்காப் பள்ளி தொடர்ந்தும் இந்தக் குடும்பத்தின் சொத்தாகவே இருந்து வந்துள்ளது. இடை நடுவே ஹைரூன் டீச்சரின் சகோதரர் நிஜாம் மாஸ்டர் இந்த ஆதனம் பிழையான கைகளில் விழுந்து விடாது சமுகத்தின் எதிர் கால நலனுக்காக பயன் படவேண்டும் என்ற நன் நோக்குடன் தன்னிடமிருந்த ஆவணங்களை அகில இலங்கை ஜம்யத்துல் உலமாவின் புத்தளம் கிளைத் தலைவர் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களிடம் கையளித்திருக்கிறார்.

அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா இந்த இடத்தில் மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றை அமைக்க உள்ளதாக அண்மையில் ஒரு கட்டிட நிருமானத் துறை நிறுவனத் திறப்பு விழாவின்போது அஷ்-ஷெய்க் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அறிவித்திருந்தார்.

தமது அன்புத் தந்தை சமுக நலனுகக்காக அர்ப்பணம் செய்திருந்த இந்த ஆதனம் சமுகத்தின் நலனுக்காக நிலைத்திருந்து அது கொண்டு வரும் நன்மைகள் அப்பாஸ் மரிக்கார் அவர்களை அடைய வேண்டும் என்பதே அப்பாஸ் மரிக்காரின் மக்கள், பேரப்பிள்ளைகளின் ஆசையும் கூட .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All