Puttalam Online
uncategorized

பேலியோ டயட் அறிமுகம்

  • 4 May 2017
  • 1,106 views

1. பேலியோ டயட் என்றால் என்ன?

பெலியோலிதிக் என்பதின் சுருக்கமே பேலியோ. பேலியோலிதிக் காலம் என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய, விவசாய கால கட்டத்துக்கு முந்தைய கற்காலத்தை குறிக்கும். கற்காலத்தில் அரிசி, பருப்பு, காபி, பீன்ஸ், உருளைகிழங்கு, சோயா, சோளம், கோதுமை, சிறுதானியங்கள், எண்ணெயில் பொறித்த உணவுகள் இல்லை. மக்களின் உணவு சுட்ட இறைச்சியும் சில காய்கறிகளுமே.

images (2)

தானியம், சர்க்கரை அற்ற இந்த உணவு தான் பேலியோ டயட். இதை உண்ட மக்களுக்கு டயபடிஸ், பிளட்பிரஷர், மாரடைப்பு, சைனஸ், ஆஸ்துமா, – ஹைப்போதய்ராய்டிசம், காக்கை வலிப்பு, சொரியாசிஸ், விடில்கோ (வெண்திட்டுக்கள்), கான்சர் முதலான நகர்ப்புற மனிதனின் வியாதிகள் இல்லை. தானிய உணவை உண்டபின்னரே இவ்வியாதிகள் மனிதரை சூழந்தன‌.

2. கொழுப்பு எப்படி சேர்கிறது?

ஒரு எளிய உதாரணத்திலிருந்து ஆரம்பிக்கலாம். மது அருந்த ஆரம்பிக்கும் ஒருவனுக்கு ஆரம்பத்தில் இரண்டு பெக் போட்டாலே போதை ஏறிவிடுகிறது. அதுவே சில வருடங்கள் கழிந்த பிறகு அதே போதையை அந்த இரண்டு பெக் தருமா? நிச்சயம் தராது. இரண்டு குவார்ட்டர் ஆகும், குவார்ட்டர் ஹால்ஃப் ஆகும். ஏன்? அவனது உடம்பின் செல்கள் ஆல்கஹாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

அதே நிலைமை தான் கார்போஹைட்ரேட்டுக்கும். நாம் கார்போஹைட்ரேட் உட்கொள்ள அது க்ளூகோஸாக மாறுகிறது. க்ளூகோஸை பார்த்தவுடன் கணையம் இன்சுலினைச் சுரக்கிறது. இன்சுலின் எல்லா க்ளூகோஸையும் எனர்ஜியாக எடுத்துக்கொள் என்று செல்களுக்கு கட்டளை இடுகிறது. செல்களும் அதை எடுத்துக்கொள்கின்றன. நமக்கு எனர்ஜி கிடைக்கிறது. நாம் ஃபிட்டாக இருக்கிறோம்.

images

இது சிறு வயதில் ஓகே. நன்றாக ஆடி ஓடி விளையாடினோம். ஆனால் வயது ஆக ஆக நமது உடலுழைப்பு குறைகிறது. ஆனால் உட்கொள்ளும் கார்போஹைட்ரேட்டின் அளவு குறைவதில்லை. இதனால் செல்கள் இன்சுலின் பேச்சைக் கேட்பதில்லை. இந்த நிலைமைக்குப் பெயர் இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ். கொஞ்சம் க்ளுகோஸ் எனர்ஜியாக கன்வெர்ட் ஆகிறது. மீதி அப்படியே ரத்தத்தில் இருக்கிறது. அதைச் சரி செய்ய கணையம் அதிக இன்சுலினை அனுப்புகிறது. இப்பொழுது எனர்ஜியாக கன்வெர்ட் ஆகாத க்ளுகோஸை எல்லாம் கொழுப்பாக மாற்றி உடலில் சேமிக்க வைத்து விடுகிறது இன்சுலின்.

ஆக, நமக்குப் பிரச்சினை இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ். அதை உருவாக்கியது கார்போஹைட்ரேட், சுருக்கமாக கார்ப்ஸ். எனவே, கார்ப்ஸைக் கட்டுப்படுத்தினால் உடலில் கொழுப்பு சேர்வதைக் கட்டுப்படுத்தலாம்.

3. கார்ப்ஸைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் முதலில் என்ன செய்ய வேண்டும்?

முதலில் சிம்ப்பிள் கார்போஹைட்ரேட் என்று சொல்லப்படும் சர்க்கரை, சீனி, கருப்பட்டி, வெல்லம், பனங்கற்கண்டு, தேன், கூல் ட்ரிங்க்ஸ், எல்லா வகையான பழங்கள், இனிப்பு சுவை உள்ள எல்லா பண்டங்கள், ஜங்க் உணவு என்று சொல்லக்கூடிய பீட்ஸா, பர்கர், ஐஸ் க்ரீம், கே எஃப் சி மற்றும் நொறுக்குத்தீனி என்று சொல்லப்படுகிற மிக்சர், பக்கடா, சேவு, வடை முதலிய அனைத்தையும் நிறுத்த வேண்டும்.

4. மற்ற எது எதெல்லாம் கார்ப்ஸ்?

நாம் இதுவரை நல்லது என்று நினைத்து சாப்பிட்டு வந்த தானியங்கள் எல்லாம் கார்ப்ஸ். ஆமாம், அரிசி, கோதுமை, பருப்பு, பயறு, சுண்டல், பட்டாணி, மைதா, ரவை, கம்பு, கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம், ஓட்ஸ் இவை அனைத்தையும் சாப்பிடக்கூடாது.

5. வேறு எதையெல்லாம் உண்ணக்கூடாது?

உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற எல்லா கிழங்கு வகைகளையும் உண்ணக்கூடாது.

paleo-diet_0பீன்ஸ், அவரைக்காய், சீனி அவரைக்காய், நிலக்கடலை போன்ற legume வகைகளையும் நிறுத்த வேண்டும்.

சோயா, டோஃபு, மீல் மேக்கர் என சோயா எந்த வடிவத்திலும் ஆகாது.

பனங்கிழங்கு, பலாக்காய், வாழைக்காய் ஆகியவைகளையும் நிறுத்த வேண்டும்.
லோ ஃபேட் (Low Fat), ஸ்கிம்டு (Skimmed) என்று சொல்லப்படுவன எதுவும் ஆகாது. உதாரணம் ஸ்கிம்டு மில்க், லோ ஃபேட் மில்க், லோ ஃபேட் யோகார்ட், லோ ஃபேட் சீஸ் – இது எல்லாம் கூடாது.
6. தானியங்கள், பழங்கள் இவை எல்லாம் நல்லது என்று தானே இது வரை கேள்விப்பட்டோம்?

பழங்கள் சாப்பிட்டால் இன்சுலின் ஸ்பைக் ஆகும். அதாவது நிறைய இன்சுலின் ஒரே நேரத்தில் வந்து விடும். அப்படி வந்தால், உடம்பு ஃபேட் பர்னிங் மோடுக்கு போகவே போகாது. ஆகவே, நம்முடைய டார்கெட் எடை வரும் வரை பழங்கள் சாப்பிடக்கூடாது. டார்கெட் எடை வந்த பின் மெயிண்ட்டனஸ் டயட்டில் பழங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.

தானியங்களைத் தானே இதுவரை சாப்பிட்டு வந்தீர்கள். அவைகள் உடம்புக்கு நல்லது எடை கூட்டாது என்றால் இதை ஏன் நீங்கள் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் உடம்புக்கும் தானியத்துக்கும் ஒத்து வரவில்லை. உங்கள் உடம்புக்கு தானியம் அலர்ஜி. தானியம் ஒரு கார்ப் கிட்டங்கி. இரண்டாவதாக அதன் அவுட்டர் மோஸ்ட் லேயரில் இருக்கும் ஃபைட்டிக் ஆசிட் உங்கள் உணவில் இருக்கும் மற்ற நல்ல சத்துகளை உடம்பில் சேர விடாது.

தானியங்களிலிருந்து கிடைக்கும் புரதங்கள் நல்ல புரதங்கள் இல்லை. தானியங்கள் உங்கள் குடலுக்கு நிச்சயம் நல்லது அல்ல. சாப்பாடு சாப்பிட்ட பின் வயிறு தொம் என்று டைட்டாக அடைத்துக் கொண்டிருப்பது போல் இருப்பதற்கும், சிலருக்கு acid refulx என்று சொல்லக்கூடிய உணவுக்குழாய் வழியே பித்த நீர் மேலேறி தொண்டை வரை வந்து நிற்பதும் தானியங்களால் தான். இதை நிப்பாட்டினால் உடம்பு நன்றாக இருக்கும்.

07. அப்போ கார்ப்ஸ் சுத்தமா சாப்பிடவே கூடாதா?

ஒரு நாளில் உட்கொள்ளும் கார்போஹைட்ரேட்டின் அளவு 50 கிராமுக்குள் இருக்க வேண்டும். அந்த 50 கிராமும் முன்பு சொன்ன தானியங்களிலிருந்து வராமல் Glysemic Index / load கம்மியாக உள்ள நல்ல கார்பிலிருந்து வர வேண்டும். அந்த நல்ல கார்போஹைட்ரேட்களின் சோர்ஸ் என்ன? கத்தரிக்காய், வெண்டைக்காய், காலி ஃப்ளவர், ப்ரோக்கலி, பீர்க்கங்காய், புடலங்காய், சவ் சவ், பூசணிக்காய், சுரைக்காய், எல்லா விதமான கீரைகள், காரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், சுண்டைக்காய், பாகற்காய், முள்ளங்கி, தக்காளி, வெங்காயம், வாழைத்தண்டு, வெள்ளரி, அஸ்பராகஸ், செலரி, குடை மிளகாய், காளான், பச்சை, சிகப்பு மிளகாய், எலுமிச்சை, பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, பூண்டு, மஞ்சள்கிழங்கு, அவகேடா, ஆலிவ் போன்ற காய்கறி, மசாலா வகைகள்.

பீன்ஸ், அவரைக்காய், கொத்தவரங்காய், வேர்க்கடலை போன்றவை legumes வகைகளில் வருவதால் அவை பேலியோவில் சேர்ப்பு அல்ல.

8. வெறும் 50 கிராம் கார்ப் எடுத்தால் பசிக்காதா?

நாம் ஒரு நாள் உட்கொள்ளும் கார்பின் அளவு 50 கிராமுக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் உடம்பு நாம் உட்கொள்ளும் கொழுப்பு மற்றும் ப்ரோட்டீனிலிருந்து க்ளூகோஸைத் தயார் செய்து கொள்ளும். இந்த டயட்டில் நாம் 50 கிராம் கார்போடு சேர்த்து ப்ரோட்டீன் மற்றும் நல்ல கொழுப்பு வகை உணவுகளை எடுக்கப்போகிறோம். கொழுப்பு + புரோட்டீன் உள்ளே போகும்பொழுது வயிறு நிறைவாக இருக்கும். கார்ப் சாப்பிட்ட போது இருப்பது போல் பசிக்காது.

9. நல்ல கொழுப்பு என்றால் எவை எவை?

நல்ல கொழுப்பு முதலில் எண்ணெயிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். நாம் உபயோகிக்கும் வெஜிடபிள் ரீஃபைண்ட் எண்ணெய்கள் எல்லாமே உடல்நலத்திற்குக் கேடானவை. ஆகவே, ஹைட்ரஜனேட் செய்யப்பட்ட எண்ணெய்கள், சன்ஃப்ளவர் ஆயில், ரைஸ் ப்ரான் ஆயில், காட்டன் சீட் ஆயில், சஃபோலா, கனோலா, வனஸ்பதி போன்ற எண்ணெய்களை உபயோகிக்கக்கூடாது.

செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், வெண்ணெய், நெய் – இதெல்லாம் உடம்புக்கு மிகவும் நல்லது. உங்கள் சமையல் இதில் ஏதாவது ஒன்றில் செய்யப்பட வேண்டும். 100% தேங்காய் எண்ணெய் என்று கடைகளில் விற்கும். அதுவும் நல்லது அல்ல.

வர்ஜின் தேங்காய் எண்ணெய் அல்லது எக்ஸ்ட்ரா வர்ஜின் தேங்காய் எண்ணெய் தான் நல்லது. வேறு வழியே இல்லை என்றால் செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் ஓகே, அதையும் தவிர்ப்பது நல்லது. எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலின் ஸ்மோக் பாயிண்ட் மிகவும் கம்மி என்பதால் அது சமையலுக்கு உகந்தது அல்ல. சலாடின் மேல் கோல்ட் ட்ரெஸ்ஸிங்கிற்காக உபயோகித்துக்கொள்ளலாம் முட்டை மிகவும் நல்லது. அதுவும் நாட்டுக்கோழி முட்டை என்றால் மிக மிக நல்லது. முட்டையை முழு முட்டையாக மஞ்சள் கருவோடு சேர்ந்து சாப்பிட வேண்டும். ஒரு நாளுக்கு மூன்று அல்லது நான்கு முட்டைகள் சாப்பிடலாம்.

ஆடு, மாடு, கோழி, மீன் மிகவும் நல்லது. அதுவும் புல் தின்று வளர்ந்த ஆடு, மாடு மிக மிக நல்லது. நாட்டுக்கோழி மிகவும் நல்லது. சிக்கன் தோலில் தான் கொழுப்பு உள்ளது. ஆகவே தோலோடு சிக்கனை உண்ண வேண்டும். பண்ணையில் வளர்க்கப்படாத, ஆற்றில், கடலில் பிடிக்கப்பட்ட மீன்கள் மிகவும் நல்லது. ஆடு மாடுகளின் உள்ளுறுப்புகளான இதயம், மூளை, லிவர், போன்றவைகள் மிகவும் நல்லது. ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ள மத்தி, சால்மன், டுனா போன்ற மீன்கள் மிகவும் நல்லது.

தேங்காயை அப்படியே சாப்பிடலாம். அதில் இருப்பது நல்ல உறைகொழுப்பு. தேங்காய்ப் பாலை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். பனீர் சாப்பிடலாம். முழுக்கொழுப்புள்ள சீஸ் சாப்பிடலாம். முழுக்கொழுப்புள்ள பால், தயிர் குடிக்கலாம். காபி, டீ பொதுவாக உடம்புக்கு டாக்ஸின் என்றாலும் சர்க்கரை சேர்க்காமல் முழுக்கொழுப்புள்ள பாலில் தயார் செய்த காபி, டீ ஒரு நாளுக்கு ஒரு கப் குடிப்பதால் பெரிய பாதகமில்லை.

பாதாம், பிஸ்தா, வால்நட், மகடாமியா நட்ஸ், பிரேசில் நட்ஸ், முந்திரிப்பருப்பு போன்ற நட்ஸ்களைச் சாப்பிடலாம். முந்திரிப்பருப்பில் கார்ப் கொஞ்சம் அதிகம் என்பதால் கொஞ்சம் கம்மியாகச் சாப்பிடலாம். பாதாம், முந்திரி இவைகளை நெய்யில் வறுத்தும் சாப்பிடலாம். இது போன்ற நட்ஸ்கள் சாப்பிடும்பொழுது நட்ஸ்களை மட்டும் தனியாகச் சாப்பிட வேண்டும். வேறு எதையும் இதனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் இரண்டு மணி நேரம் இடைவெளி இருப்பது மிகவும் நல்லது.

வெஜிடேரியன்கள் ஃப்ளாக்ஸ் ஸீட் வாங்கி அதை பவுடராக்கி, ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் அளவு தினமும் சமையலில் தூவி சாப்பிடலாம்.

அவகேடா, ஆலிவ் பழங்கள் சாப்பிடலாம்.

10. கொழுப்பு சாப்பிடலாம் என்கிறீர்களே, கொலஸ்ட்ரால் கூடாதா, இதயத்திற்கு ஆபத்து இல்லையா?

ஆக்சுவலா பாத்தீங்கன்னா கொலஸ்ட்ரால் ஒரு பிரச்சினையே இல்லை. நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பும் சரியா வேலை செய்யணும்னா கொலஸ்ட்ரால் அவசியம் தேவை.

இங்கே பிரச்சினை என்பது உள்காயம் என்று சொல்லப்படும் inflammation. இது எதனால் ஏற்படுது? சுகர், கார்ப், ஒமேகா 6 வெஜிடபிள் ஆயில்களான சன்ஃப்ளவர் ஆயில், சோயாபீன் ஆயில், கார்ன் ஆயில் இவைகளால் தான். Inflammation எப்படி இருக்கும்னா ரத்த நாளங்களின் உள்பகுதியில் சேண்ட்பேப்பரை வச்சு உரசினா என்ன மாதிரி உள்காயங்கள் வரும் அது தான் Inflammation. இதைச் சரி பண்ண கொலஸ்ட்ரால் போய் அதன் மேல் படிகிறது. Inflammation இல்லை என்றால் கொலஸ்ட்ரால் சுதந்திரமா போய்க்கிட்டு வரும்.

பேலியோ லைஃப்ஸ்டைலினால் இந்த உள்காயங்கள் ஏற்படுவதில்லை. அடுத்து ட்ரைக்ளிஸரைட்ஸ் 100 க்கு கீழே வந்திரும். ஹெச் டி எல் கொலஸ்ட்ராலின் அளவு கூடும், அது மிகவும் நல்லது. எல் டி எல் கொலஸ்ட்ரால் இருக்கும். ஆனால் அவை அளவில் பெரிய fluffy ஆக இருக்கும். அதனால் இதயத்திற்கு ஆபத்தில்லை.

நான்கு முட்டைகள் வரை சாப்பிடுகிறோம். அவ்வாறு முட்டைகள் நாம் சாப்பிடாவிட்டால் லிவரே கொலஸ்ட்ராலை உற்பத்தி பண்ணிக்கொள்ளும். நாம் முட்டைகள் சாப்பிடுவதால் அது கொலஸ்ட்ரால் உண்டாக்குவதை குறைத்துக்கொள்கிறது.

11. இந்த டயட்டில் அதிகப்படியான கொழுப்பு எப்படி கரைகிறது?

நாம சாப்பிடுகிற உணவிலிருந்து உருவாகும் க்ளுகோஸ் எனர்ஜியாக மாறியது போக மீதம் இருக்கும் க்ளுகோஸ் லிவர் மற்றும் மஸில்ஸ்ல க்ளைகோஜனாக சேமிக்கப்படுகிறது.

எப்பொழுதாவது நாம் விரதம் இருக்கும்பொழுது உடம்பில் க்ளுகோஸ் இல்லாமல் போகும். அந்நேரம் இந்த க்ளைகோஜன் க்ளூகோஸாக மாறி ஆற்றல் கொடுக்கும்.

நீங்கள் பேலியோவிற்கு மாறி கார்ப் 50 கிராமுக்கு கம்மியாக எடுக்கும்பொழுது இது தான் ஆரம்பத்தில் நடக்கும். கார்ப் கம்மியாக, ஆனால் நல்ல ஃபேட், புரதம் உள்ள உணவாக நாம் சாப்பிடுவதால் நமக்கு பசி இருக்காது, ஆனால் க்ளூகோஸ் உடம்பில் இல்லாமல் போகும். கார்ப் சாப்பிட்டு பழக்கப்பட்டு விட்ட உடம்பு எனக்கு கார்ப் கொடு என்று கேட்டு அழும். அதை எப்படித் தெரிவிக்கும்? தலைவலி மூலமாக. அதை நீங்கள் நிறைய தண்ணீர் குடித்தோ, இல்லை உப்புப்போட்ட லெமன் ஜூஸோ குடித்து கட்டுப்படுத்தி விட்டால், க்ளைகோஜனிலிருந்து க்ளூகோஸ் ரிலீஸாகி, உடம்புக்கு எனர்ஜி கிடைத்து விடும்.

ஆக, டயட் ஆரம்பத்தில் நாலைந்து நாட்களுக்கு அதாவது கொழுப்பு + புரத உணவுக்கு உங்கள் உடம்பு பழக்கப்படும் வரை அவ்வப்பொழுது தலைவலி வரலாம். அதைத் தாண்டி வந்து விட்டால், அப்புறம் தலைவலி இருக்காது. பசியும் குறையும். காலையில் 100 பாதாம் சாப்பிட்டாலே மதியம் வரை பசிக்காது. கார்ப் உணவு எடுப்பது போல் சீக்கிரம் பசி எடுக்காது. வயிறும் தொம்மென்று இருக்காமல், லேசாக இருக்கும். பசியும் இருக்காது.

முன்பு க்ளூகோஸ் சேமிக்கப்படும்பொழுது அதன் எடைக்கு பல மடங்கு நிகரான நீர் எடையும் சேர்த்து க்ளைகோஜனாக உடம்பில் சேமித்து வைக்கப்படுகிறது. க்ளைகோஜன் காலியாக ஆக, அந்த நீரும் காலியாகும். ஆரம்ப காலத்தில் மூன்றிலிருந்து நான்கு கிலோ வரை சீக்கிரமாக எடை இழப்பும் நேரும். அது நீர் எடை தான். அதன் பின், அதாவது உங்கள் க்ளைகோஜன் ஸ்டாக் முழுவதும் தீர்ந்த பிறகு தான் உங்கள் உடம்பில் ஏற்கெனவே சேர்த்து வைத்திருந்த கொழுப்பு கரைந்து எனர்ஜி கொடுக்க ஆரம்பிக்கும். இப்படித்தான் அதிகப்படியான கொழுப்பு கரைந்து உங்கள் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

12. பேலியோ டயட் ஆரம்பித்த பின், எனக்கு பழைய உணவு

சாப்பிடவேண்டும் போல் ஆசை வருகிறது. அப்பொழுது என்ன ஆகும்?டயட் ஆரம்பித்து நன்றாகச் சென்று கொண்டிருக்கும்போது ஒரு நாள் ஒரு அன்லிமிடெட் மீல்ஸ் – ஒரு தட்டு சாம்பார் சாதம், இன்னொரு தட்டு ரசம் சாதம், அடுத்த தட்டு வத்தக்குழம்பு சாதம் அடுத்த தட்டு தயிர்சாதம் கடைசியில் பாயாசம் (எழுதும்போதே எப்படியோ இருக்கிறது இப்படியா சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்) என்று ஃபுல் கட்டு கட்டுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். என்ன ஆகும்? இன்சுலின் ஸ்பைக் ஆகும். உடம்பு என்ன செய்யும்? ஆகா, இதுவரை கார்ப் கிடைக்காத ஏதோ பஞ்சத்தில் அடிபட்ட ஊரில் இருந்திருக்கிறான் போல, இன்று மீண்டும் நல்ல இடத்திற்கு வந்து விட்டான், இன்று உடனடியாக கொழுப்பைச் சேமிக்க வேண்டும் இல்லையேல் இவனுக்கு தேவைப்படும் நேரத்தில் நாம் எப்படி கொழுப்பு சப்ளை பண்ண முடியும் என்று நினைத்து அன்று உடனடியாக ஃபேட் ஸ்டோரிங் மோடிற்கு வந்து எவ்வளவு சேமிக்க முடியுமோ அவ்வளவும் சேமித்து விடும். கவலைப்பட வேண்டாம், அது பெரும்பாலும் க்ளைகோஜனாகத்தான் இருக்கும்.

ஒரு நேரம் அல்லது மேக்ஸிமம் இரு நேரங்கள் இது போல் சாப்பிட்டு விட்டு உடனே திரும்பவும் பேலியோ டயட்டிற்கு வந்தால் ஆரம்பத்தில் கூறியது போல் இப்பொழுது உருவாகி இருந்த க்ளைகோஜன் ஸ்டாக்கை முதலில் காலி செய்த பின் தான் உடம்பு மறுபடியும் ஃபேட் பர்னிங் மோடிற்கு வரும். இதற்கு நான்கைந்து நாட்கள் ஆகலாம்.

ஆகவே ஒவ்வொரு வாரமும், வார இறுதியில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாளும் எனக்குப் பிடித்த உணவை சாப்பிட்டுக் கொள்கிறேன் என்பதெல்லாம் கதைக்காகாது. ஒரு மாதமாவது தொடர்ந்து பேலியோ டயட்டில் இருக்க வேண்டும்.

டயட்டில் தொடர்ந்து இருக்கும்பொழுது, சில பல கிலோக்கள் குறைந்த பிறகு, எடை இழப்பு சில வாரங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். அந்நேரம் உடம்பு தன்னை அட்ஜஸ்ட் செய்து கொள்கிறது. மீண்டும் எடை இழப்பு ஆரம்பிக்க சில வாரங்கள் ஆகலாம். இந்த நேரத்தில் உடம்பின் சிஸ்டத்தை செயற்கையாக மாற்ற, ஓரிரு நேரங்கள் அதிக கார்ப் நிறைந்த உணவை உண்டு உடம்பை “cheat” செய்யலாம். ஒரு நாளில் அதிக பட்சமாக இரு நேரங்கள் அவ்வாறு சாப்பிட்ட பின், மறுபடியும் பேலியோ டயட்டை ஆரம்பித்தால், நின்று போன எடை இழப்பு திரும்பவும் ஆரம்பிக்க வாய்ப்புகள் உண்டு.

13. என்னுடைய டார்கெட் வெயிட் வந்து விட்டால் இந்த டயட்டிலிருந்து விலகி நார்மல் உணவை சாப்பிட ஆரம்பிக்கலாமா?

எது நார்மல் உணவு? உங்களுக்கு இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ் தந்து, இன்ஃப்ளமேஷன் தந்து, சர்க்கரை நோய் தந்து, அல்சர் தந்து, acid reflux தந்து, சுமக்கவே முடியாத தொப்பையையும் கொடுத்த அந்த உணவா நார்மல் உணவு?

என் நண்பன் தினமும் நன்றாக சோறு சப்பாத்தி சாப்பிடுகிறானே அவனுக்கு ஒன்றும் ஆகவில்லையே? அவர் உடம்பு வேற உங்க உடம்பு வேற அவருக்கு மெட்டாபாலிஸம் சரியாக இருந்தால் மகராஜனாக சாப்பிடட்டும் நன்றாக இருக்கட்டும், உங்களுக்கு கார்ப் அலர்ஜி, தானியம் அலர்ஜி, உங்களுக்கும் தானிய வகை சாப்பாடுகளுக்கும் ஒத்துக்கொள்ளவில்லை அதனால் தான் இந்தப் பக்கம் வந்திருக்கிறீர்கள் ஆகவே நீங்கள் தொடர்ந்து இந்த லைஃப் ஸ்டைலில் இருங்கள். ஆறு மாதங்கள் இருந்தாலே எது நார்மல் உணவு எது உங்கள் ancestors சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் இருந்த உணவு என்பது உங்களுக்கே தெரிய வரும்.

உங்கள் எடை குறைந்திருக்கலாம். சர்க்கரை அளவுகள் கூட கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கலாம். ஆனால் இன்சுலின் ரெஸிஸ்டன்ஸை ரிவர்ஸ் செய்வதற்கு சில வருடங்களாவது டயட்டில் இருக்க வேண்டியது அவசியம். இண்டெர்மிட்டெண்ட் ஃபாஸ்ட்டிங் என்று சொல்லப்படும் விட்டு விட்டு விரதம் இருக்கும் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இதற்கெல்லாம் சில வருடங்கள் ஆகலாம்.

டார்கெட் எடை வந்த பின், சர்க்கரை அளவுகள் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின், மெயிண்ட்டனஸ் டயட்டாக சிலவற்றை தளர்த்தலாம். நல்ல கார்ப் சோர்ஸ்களான ஆப்பிள் போன்ற பழங்களைச் சேர்க்கலாம். கொஞ்சம் சோறு, உருளைக்கிழங்கு ஆகியவைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த டயட்டை தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் பின்பற்றினாலே, உங்கள் வாழ்க்கையில் நல்லவிதமான ஒரு பெர்மனெண்ட் லைஃப் ஸ்டைல் மாற்றம் ஏற்பட்டு, எது நல்ல உணவு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்கிற புரிதல் கிடைத்து விடும்.

நன்றி – GOKUL KUMARAN


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All