Puttalam Online
historical-notes

19. குஞ்சாலி அப்பா குளம்

  • 16 May 2017
  • 358 views

இக்குளம் கொழும்பு வீதிக்குக் கிழக்கே புத்தளம் மார்பு நோய் வைத்திய சாலைக்கு முன்னே வெளிப்புற வட்ட வீதிக்குத் தெற்கிலே அமைந்துள்ளது.மலையாளப் பகுதியைச் சேர்ந்த “குஞ்சாலி “என்ற பெயரைப் பெற்ற இறை நேசச் செல்வர் ஒருவர் இக்குளப் பகுதியில் வாழ்ந்து மறைந்தமையால் இக்குளம் இப்பெயரைப் பெற்றது.பரம்பரை பரம்பரையாக வழங்கி வந்துள்ள இப்பெயர் மறைக்கப்பட்டு இன்று பால்குளம் என்றும், சிங்களத்தில் கிரிவெவ என்றும் அழைக்கப்படுவதைக் கேட்கிறோம்.இப்பெரியாரை மக்கள் மிகவும் மதித்துப் போற்றினர். இப்பெரியாரின் அடக்கத்தலம் குளத்துக்கு வடக்கே இப்போது குடியிருப்புப் பகுதிக்குள் அமைந்துள்ளது. வங்கி ஊழியர்கள் தங்கியிருக்கும் சிங்கள சகோதரர் ஒருவரின் வீட்டு வளவிலே இவ்வடக்கத்தலம் இன்றும் இருந்து வருகின்றது.கருங்கல்லாலான “மீசான்”  பலகைகளும் சமாதியில் நடப்பட்டுள்ளன.இது ஆராய்வுக்குட்படுத்தப்பட    வேண்டும். குடியிருப்புக்கள் தோன்றுவதற்கு முன்பு முஸ்லிம்கள் இச்சமாதியை தரிசித்து நேர்த்தி நிய்யத்துக்கள் வைத்து ஓதிக் கொண்டாடியுள்ளனர்.இத்தகைய சமாதி ஒன்று இன்று ரத்மல்யாய என்று அழைக்கப்படும் குடியிருப்புக்கு முன்பாக புகையிரதப் பாதைக்கு மேற்கே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இதையும் மக்கள் மதித்துப் போற்றிக் கொண்டாடினர்.அதன் பக்கத்திலேயே கொம்பிமுனை உப்பளமும் அமைந்திருந்தது.

சிங்கள மன்னர்களின் ஆட்சியின் போது குறிப்பாக மாயாதுன்ன மன்னரின் காலத்தில் புத்தளம் பகுதியில் நடைபெற்ற அந்நியர்களின் படையெழுச்சியின் போது அதை எதிர்த்து சிங்கள மன்னர்க்கு ஆதரவளிக்க மலையாளப் பகுதியிலிருந்து முஸ்லிம்களின் படைப் பிரிவொன்று இங்கு வந்துள்ளது.இப்பிரிவுக்குத் தலைமை தாங்கி வந்த தளபதி குஞ்சாலி மரைக்கார் என்ற பெயரைப் பெற்றவராவார்.இவ்வடிப்படையில் நோக்கும் போது அவ்வாறு வந்தவர்களில் சம்பந்தப்பட்டவராக குஞ்சாலி அப்பா சமாதியில் அடக்கம் செய்யப்பட்டவரும் இருக்கலாம் என்பது ஆய்வுக்குரிய விடயமாகும்.அவ்வாறே மற்ற சமாதியில் அடக்கம் செய்யப்பட்டவரும் போர் வீரர்களுள் ஒருவராக மதிப்பிற்குரியவராக இருக்கலாம் என்பதும் ஆய்வுக்குரியதாகும்.

இக்குளத்தின் நீர், மக்களின் தேவைக்காக உபயோகிக்கப்பட்டது.அத்துடன் குளத்துக்கு மேற்கேயும் சுற்றியுமிருந்த வயல்களுக்கு நீர் அளித்தும் உதவியது.இன்றும் மக்கள் இதை நீராடுவதற்குப் பாவிக்கின்றனர்.ஆனால் வயல்கள் இன்று குடியிருப்புகளாக மாறியுள்ளன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All