Puttalam Online
historical-notes

28. ”சாரதா லோன்றி” – ஓசையின்றி ஒரு நூறு வருடங்களை கடந்து நகரத்தின் முதன் முதல் துணிச் சலவை நிலையம்

  • 30 May 2017
  • 934 views

Newton issac

முஸ்லிம்களின் பிடியில் உள்ள பூர்வீக மண் என்பதுதான் புத்தளத்தைப் பற்றிய புத்தளம் அல்லாதவர்களின் கருத்து.

ஆனால் புத்தளம் நகர மத்தியில் அந்த பூர்வீக பிடி தளர்ந்து  நாளாகிவிட்டது என்பதை விளக்கத்தான் ஒரிரு மாதங்களுக்கு முன்னர் நகரத்தில் இரண்டு தலைமுறைக்கு மேலாக மாறாமலே இருந்து வரும் ”முருகன் கபே” பற்றிய எனது ஆக்கத்தை எழுதி இருந்தேன். ஆனால் அந்த சைவ உணவகத்தை விடவும் ப‌ ழமை வாய்ந்த ஒரு தொழில் நிலையம் இங்கு இருக்கிறது என்பதை நேற்றுத்தான் அறிய முடிந்தது.

எனவே நேற்று மாலை புத்தளம் மன்னார் விதியில் அமைந்துள்ள ” சாரதா லோன்டரியைப்” பார்த்து வரப் புறப்பட்டேன்.

ஓசையின்றி ஒரு நூறு வருடங்களை கடந்து இன்னும் புத்தளம் நகரத்தின் முதன் முதல் துணிச் சலவை நிலையமான ”சாரதா லோன்றி” நிலைத்திருக்கிறது என்பதை நினைக்கையில் மலைத்துப் போகிறேன்.

புத்தளம் நகரில் பேர் சொல்லி வியாபாரம் செய்த எந்த நிறுவனமும் ஒரு தலைமுறைக்கு மேல் நிலைத்ததே இல்லை. நிலைத்ததோ, இல்லையோ இந்த நாட்களில் ஓரிரு நிறுவனங்களைத் தவிர வேறு எதுவும் புத்தளத்தவர்களின் கையில் இல்லை. பேர் மாறி, உருவாறி, உரிமையும் மாறிப் போன பரிதாப நிலை. ஆனால் புத்தளத்தில் முதன் முதல் துணிச் சலவை சேவையை நடாத்தும் ”சாரதா லோன்டரி” அதன் தாபகர் வீராசாமியிடமிருந்து அவரின் 68 வயது மூத்த மகன் சொக்கலிங்கத்தின் கைக்கு மாறி எந்த மாற்றத்துக்கும் ஆளாகாமல் அப்டியே இயங்கி வருகிறது.

சொக்கலிங்கம் எமது பிள்ளைப் பருவ பாடசாலை நாட்களில் சாகிராவின் சமகாலம். ஒரு நூற்றாண்டு கால வரலாறு கொண்ட தந்தை வழிச் சொத்தை, குலத் தொழிலை அப்படியே முன்னெடுத்துச் செல்கிறார்.

அயன் செய்த உடுப்புக்களை சேர்த்தியாக மடித்து ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்ட ராக்கைகள், சிரட்டைக் கரி சுட்டு, சூடேற்றி உடுப்புக்களை ஸ்திரி செய்ய பாவிக்கும் அந்தக் கால இரும்பு ஸ்திரி பெட்டி, எத்தனை உடுப்புக்கள் இருந்தாலும் அத்தனையும் மாறு படாமல் யார் யாருடையது என இலகுவாக அடையாளம் காண உபயோகிக்கப்படும் துணிச் சலவையாளர்களுக்கே உரிய சலவைக் குறி எதுவுமே மாறவில்லை.

சாரதா லோன்றியின் அந்தக் காலத்துக் கூரைத் தாழ்வாரம் கொஞ்சம் தாழ்வானதாக இருக்கும். உயரமானவர்கள் உள்ளே நுழைந்தால் தலை தட்டும். அந்தத் தாழ்வாரம் இப்போது கொஞ்சம்  உயர்த்ப்பட்டுள்ளது. அதுதான் உருண்டோடிவிட்ட ஒரு நூற்றாண்டு காலத்தில் ஏற்பட்ட மாற்றம்.

வீராசாமியின்  இந்த ஓரே வாழ்வாதார வழி மூலமாகத்தான் பிள்ளைகள் பிறந்து, வளர்ந்து, படித்து. கல்யாணம் செய்து, அவர்களும் பிள்ளை குட்டிகள் பிறந்து நெடிய வாழ்வுப் பாதை விரிந்து செல்கிறது.

வீராசாமியின் ஏனைய பிள்ளைகள் படித்து அரச துறைகளுக்குச் சென்று விட்ட பின்னரும் தந்தை குலத் தொழிலை விட்டு ஓடி விடாமல் தனது 67 வயதிலும் சொக்கலிங்கம் அந்தத் சலவைத் தொழிலை செயது வருகிறார். அவரைப் பொறுத்த வரையில் செய்யும் தொழிலே தெயவம், அந்த திறமைதான் அவரது செல்வம்.

அந்தக் காலத்திலே இந்த சலவைத் தொழிலில் நிறையப் பேர் இருந்தார்கள். அவர்களுக்கு வாழ்வாதார வழியாக இருந்தது புத்தளம் ” வண்ணாண் குளம்” புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் அலயத்தின் பக்கத்தில் செல்லும் பாதையில் அந்த ஆலயத்துக்குப் பின்புறமாகத் தொடங்கி சாகிராவின் ஆரம்பப் பிரிவு வரை அமைந்திருந்த நீள் வட்டமான குளம்தான் அந்த வண்ணாண் குளம்.

நிரை நிரையாக துணி சலவை செய்வோர் கரையோரமாகப் போடப்பட்டிருக்கும் பெரிய கற்களைில் ஆடைகளை அடித்து அடித்துத் துவைக்கும் காட்சியைக் கண்டு வந்தவர்களில் பலர் இன்னும் வாழ்வோர் மத்தியிலே வாழ்ந்து கொண்டிருக்கலாம். அந்தக் காட்சி ஒரு அழகு. மாலை வேளையில் அந்திச் சூரியன் அஸ்தமிக்கையில் செங்கதிர்கள் பிரதிபலிக்க அமைதியாகக் காணப்படும் வண்ணாண் குளத்தின் அழகு தனி அழகு. இப்போது அந்த நாட்களெல்லாம் பொய் பொய்யாப் போய்விட்டன.

வீராசாமியும் சரி, அவரது சமகால துணிச் சலவையாளர்களும் சரி அங்குதான் தம் வாழ்வாதரத்தைச் செய்து கொண்டிரந்தார்கள். ஆனால் காலப் போக்கிலே வண்ணாண் குளத்தைச் சுற்றியுள்ள பாடசாலைகள். அரபுக் கல்லூரிகள், தனியார் வீடுகள் என்று வண்ணாண் குளத்ததை கொஞ்சம் கொஞ்சமாக  விழுக்கிக் கொள்ள சலவைத் தொழிலாளர்களும் காணாமல் போய்விட்டார்கள். சொக்கலிங்கம் துணிகளைச் சலவை செய்ய வாகனத்தில் மன்னார் வீதியில் ஆறாம் மைல் கல் வரை பிரயாணம் செய்து மீ-ஓயா வின் ஒரு பகுதியில் துணி வெளுப்பை செய்ய வேண்டி இருக்கிறது.

நகரத்திலே ஆங்காங்கு இருந்த துணிச் சலவை நிலையங்கள் கால ஓட்டத்திலே கரைந்து கரைந்து மறைந்து போனாலும் ஒரு நூற்றாண்டு வரை தாக்குப் பிடித்த சாரதா லோன்டரி இன்னும் சில தலை முறைகளைக் காணுமா ?

நினைவுப் பகிர்வுகளைப் பொழுது போக்காகக் கொண்ட நமது எழுத்துப் பணி இது. என்றாலும் சில பல வேளைகளில் சிலர் மனதை நோகடிக்கவும் செய்கிறார்கள். முருகன் கபே ஆக்கம் 3000 அதிகமானோரைச் சென்றடைந்திருந்து. ஒரு தழிழர் இப்படி பின்னூட்டம் எழுதி இருந்தார். ” இதை எழுத எவ்வளவு பணம் பெற்றுக் கொண்டாய்…….”

ஒரு பருப்பு வடையைத்தானும் அந்த உணவகம் எனக்குத் தரவில்லை. எனவே சொக்கனிடம் எவ்வளவ பெற்றுக் கொண்டாய் என்ற கேள்வி எழுப்பப்பட மாட்டாது என நம்புகிறேன்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All