Puttalam Online
historical-notes

29. ஐயாவின் டயரி – 02 இடை நடுவில் கைவிடல், முதுகில் குத்தல் எல்லாம் அரசியலுக்கே உள்ள பண்புகள் தானே

  • 30 May 2017
  • 214 views

Newton issac

அரசியல் என்பது எப்போதும் அப்படித்தான். மலைபோல நம்பியவரை அம்மோ என்று இடை நடுவில் கைவிடல், முதுகில் குத்தல் எல்லாம் அரசியலுக்கே உள்ள பண்புகள் தானே. அது எந்தக் காலமாக இருந்தாலும் சரி. இஸ்லாமிய வரலாற்றைக் கூட அது விட்டு வைக்கவில்லை என குறிப்பிட்டுக் காட்ட வேண்டிய தேவை ஒன்று உள்ளதா என்ன? எனவே இஸ்மாயில் ஐயாவும் அதில் இருந்து விதி விலக்காவது எப்படி?

அரசியல் கற்பித்த பாடத்தின் அடிதாங்க முடியாமல் ஒப்பாரி வைத்து அழுதவர்கள் எத்தனை பேர்? கோவெனக் கதறி அழ முடியாது நெஞ்சறைக்குள் தேக்கி வைத்து எரிமலையைப் போல உள்ளுறக் குமுறிக் குமுறி சாகாமல் செத்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்? அப்படியான ஒரு நிலை இஸ்மாயீல் ஐயாவின் டயரியில் காண முடிகிறது.

அது 1956 றில் நடை பெற்ற பொதுத் தேர்தல். இஸ்மாயில் ஐயா இதில் கடும் போட்டியை எதிர்கொண்டிருந்திருக்கிறார். லங்கா சமசமாஜக் கட்சி மக்கொணயைச் சேர்ந்த ஏ.வை.எம். மன்சூர் என்பவரை புத்தளத்துக்கு இழுத்து வந்து புத்தளம் தொகுதியில் இஸ்மாயீல் ஐயாவை எதிர்த்துப் போட்டியிட களம் இறக்கியிருந்தது.

அந்த நாட்களில் எஸ்.டப்ளியு. ஆர்.டீ பண்டார நாயக்காவின் தனிச் சிங்கள மசோதா பிரச்சினையால் முஸ்லிம்கள் கலவரமடைந்திருந்த தருணம் அது. இஸ்மாயில் ஐயாவைப் பொறுத்தவ‌ரையில் தனது கொள்கையில் கடும்போக்கைக் கடைபிடித்துள்ளதாக ஆதாரங்கள் இருக்கின்றன.

அதில் கோட்டிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒன்றுதான் ஆங்கில மொழியை போதனா மொழியாகக் கொண்டிருந்த புத்தளம் சாகிரா ஒரு தமிழ் மொழிப் பாடசாலையாக மாற வேண்டிய நிலை. இஸ்மாயீல் ஐயா போன்றோரைக் கொண்ட முகாமைத்துவத்தின் கீழ் சாகிரா இருந்த நாட்கள் அது. இந்தக் காலத்திலே ஒரு ஆங்கில ஆசிரியராக இருந்த எட்வகெட் பாக்கிர் அவர்களின் தலைமையில் இஸ்மாயீல் ஐயாவைச் சந்திதுப் பேச சாகிராவின் ஆசிரியர் குழு ஒன்று சென்ற போது இஸ்மாயீல் ஐயா ‌வெட்டு ஒன்று துண்டு ரென்டு என பேசியுள்ளார்.

” நான் பார்லிமென்டில் இருக்கிறேன் உங்களை விட நாட்டு நடப்பு எனக்கு அதிகம் தெரியும். விரும்பமாக இருந்தால் வேலை செய்யுங்கள் . இல்லாவிட்டால் ரிசைன் பண்ணிவிட்டு போங்கள்” என காட்டமாகச் சொன்னாராம்.

இந்த கரடு முரடான பதிலால் ஏமாற்றடைந்த பாக்கிர் அவர்கள் ஆசிரியர் தொழிலைத் தூக்கி எறிந்துவிட்டு புத்தளத்தை விட்டு வெளியேறி கொழும்பு போய் அதன் பின்னர் சட்டம் படித்து எட்வகேட் ஆன வரலாறு பெரிதாக அறியப்படாத ஒன்று. இதற்கான கொடுப்பனவை இஸ்மாயில் ஐயா 56 தேர்தலில் செலுத்த வேண்டி இருந்தது.

கலாநிதிகளான என்.எம். பெரேரா, கொள்வின் ஆர்.டி. சில்வா ஆகிய இடதுசாரி பெரிய தலைகள் மன்சூரை ஆதரித்து களம் இறங்கிய தகவல்கள் எல்லாம் உள்ளன.

அந்த நாள் கற்பிட்டி பட்டின சபைத் தலைவர் காதர் இப்ராகீம் தீவிரமாக இஸ்மாயீல் ஐயாவுக்கு எதிராகப் பிரசாரம் செய்திருக்கிறார். இல்லாதோர், இயலாதோருக்கும் உள்ளவர்கள் உயர்ந்தேருக்குமான ஒரு மல்யுத்தமாக அந்த தேர்தல் நடைபெற்றுள்ளது. தொன்ணூற்றி ஒப்பதில் ஒரு அரும் தப்பு என்று சொல்வார்ககளே. அப்படியான ஒரு அருந் தப்பு தப்பிப் பிழைத்திருக்கிறார் இஸ்மாயீல் ஐயா. அவர் போட்ட கணக்கொண்று, ஊர் போட்ட கணக்கொண்று இரண்டுக்கும் இடையில் இறைவன் போட்ட கணக்கொண்று.

தனது டயரியில் 4.5.56 இல் இஸ்மாயீல் ஐயா இப்படி எழுதியிருக்கிறார்.
”…………………………எங்கும் எனது ஆதரவாளர்களையே காண முடிந்தது. எனது ஆதரவாளர்களின் வாகனங்களில்தான் எல்லா வாக்காளர்களையும் ஏற்றிப் போனார்கள். மன்சூர் 1500 வாக்குகளைத் தானும் பெறுவார் என்று நான் நம்பவில்லை. ஆனால் தேர்தல் முடிவு பிரச்சினை தந்தது.  5000 வாக்காளர்கள் எமக்கு ஆதரவான வாகனங்களில் சென்று மன்சூருக்கு வாக்களித்துள்ளார்கள். எனது வெற்றி வெற்றியே இல்லை. சொல்லப் போனால் நான் தோற்றேவிட்டேன்…………………”

ஆள் அம்பு சேனை என்று எதுவுமே இல்லாமல் மன்சூர் வெறுமனே 1000 வாக்குகளால் பெற்ற தோல்வியை இஸ்மாயீல் ஐயா ஒரு மாபெரும் வெற்றியாகக் கருதினார்.

இந்த இடத்தில் எனது நினைவுகள் கடந்த பொதுத் தேர்தல் நோக்கி ஓடுகிறது. அம்மோ என்று அந்தரத்தில் கைவிடல், முதுகில் குத்தல் எல்லாம் நடந்து முடிந்த பின்னர் அவனால்தான் நான் தோற்றேன், இவனால்தான் நான் தோற்றேன் என்று திட்டித் தீர்க்கும் வசை மொழிகளையெல்லாம் அதன் பின்னர் நாம் கேட்டோம். தேர்தலில் போட்டி போட எனக்கு இருக்கும் உரிமைதான் அடுத்தவனுக்கும் இருக்கிறது என்பதை யாரும் சிந்திக்கவில்லை.

ஆனால் அரசியலில் தான் விட்ட பிழையே தனது பின்னடைவுக்குக் காரணம் என்பதை தாராள மனத்தோடு இஸ்மாயீல் ஐயா ஏற்றுக் கொண்டதை இஸ்மாயீல் ஐயா இப்படிக் குறிப்பிட்டார்

”…………………… இது காலத்தின் அடையாளம். இது ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி…………………………”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All