Puttalam Online
star-person

25. “ஓடி‌ப்போன துண்டு……..” கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது இல்லை‌யா…..?

  • 30 May 2017
  • 1,511 views

Newton isaac

” ஓடி‌ப்போன துண்டு……..” கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது இல்லை‌யா…..? இந்த ” ஓடிப்போன துண்டு” பற்றி எழுதலாம் என இரண்டொரு நாட்களாக முயன்று கொண்டிருக்கிறேன். ஆனால் மூத்தவர்கள் எல்லோரையும் ஆளுக்கொரு தேதி வைத்து அல்லாஹ் அழைத்துக் கொண்ட பின்னர் அந்த மூத்தவர்களில் இளையவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிலரை நேற்ற மாலை முழுவதுமாகத் தேடினேன்.

ஹுதாப் பள்ளிப் பக்கமாக கடை நடாத்தும் காஸிம் மரிக்கார், முபாரக் மாஸ்டர் இப்படி பலரையும் சந்தித்து ஆளுக்கு ஆள் காட்டிய அடுத்வர்களைத் தேடிப் போய் கடைசியில் ”தேவ் கண்ணா” வைச் சந்தித்தபோது இரவு எட்டு மணிக்கும் பிந்திவிட்டது.

பாவம் 97 வயதில் செம்புக்குளம் பக்கமாக தனக்கே உரிய தனிமையைின் சுவை‌யை அனுபவித்து உறங்கிக் கொண்டிருந்த சுல்தான் ரைஹானா உம்மாவை எழுப்ப வேண்டிய நிலை. ரைஹானா உம்மாவின் பேரன் எனது உறவு மகளின் உதவியோடு போயிருக்காவிட்டால் அது கூட கைகூடாமல்தான் போயிருக்கும்.

எல்லாவற்றுக்கும் முதலாக இந்த ”துண்டு” என்ற நமது புத்தளம் வழக்கு மொழியின் அர்த்தம் என்ன என இளைய தலை முறைக்குச் சொல்ல வேண்டுமே. ”காலம்” என்பதை இச் சொற் தொடர் (Phrase) குறிக்கும். உதாரணத்துக்கு ”வெள்ளம் வந்த காலம் ” என்று சொல்வதை ”வெள்ளத் துண்டு” என்று சொல்வார்கள். எனவே ”ஓடிப்போன துண்டு” இரண்டாம் மகா யுத்தகாலத்தில் ஜப்பான் காரன் குண்டு போடப் போகிறான் என்று பயந்து அந்தக் கால புத்தளத்து சனங்கள் எல்லாம் நகர மத்தியில் இருந்து கொஞ்சம்  காட்டுப் பாங்கான பிரதேசத்துக்கு ஓடி ஒழிந்து கொண்டிருந்த காலத்தைக் குறிக்கும். புத்தளம் நகரத்தின் வரலாற்றின் முதல் அத்தியாயங்களில் ஒன்று.

இரண்டாம் உலக மகா யுத்தம் உச்ச கட்டத்தை அடைந்தபோது ஜப்பான்காரன் வெள்ளையன் ஆட்சியில் இருந்த பிரதேசங்கள் மீதும் குண்டு வீசத் தொடங்கினானாம். கொழும்பில் ”ரெக்கலமேசன் ரோட்டில் ஒரு பெரிய கட்டத்தில் குண்டு விழுந்து அதை எரித்துப் போட்டது” இது 85 வயதான காஸிம் மரிக்கார் சொன்ன தகவல். அப்போது அவருக்கு 5 அல்லது ஆறு வயததான் இருக்குமாம். சரியான நினைவு இல்லை என்று சொல்கிறார்.

அந்த சம்பவத்தைத் தொடர்ந்து புத்தளத்திலும் ஒலி பெருக்கி மூலம் அறிவித்தல் கொடுத்தார்களாம். நகர மத்திய பிரதேசத்தில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு போகுமாறு. அவ்வளவுதான் . சனங்கள் எல்லாம் மூட்டை முடுச்சுகளை அள்ளிக் சுருட்டிக் கொண்டு பாதுகாப்பான இடம் தேடி ஓடிப் போயிருக்கிறார்கள். பாதுகாப்பான இடம் எனச் சொன்னால் ஒரு வேளை இந்தக் காலத்தவருக்கு  சிரிப்பு வரலாம். மணல் குண்டு பகுதிதான் அந்தப் பாதுகாப்பான இடம். அந்த நாட்களிலே அது ஒரு காட்டுப் பகுதியாம்.

வேறு ஒரு தகவலும் கிடைத்தது. அப்போது பெரிய பள்ளிவாசலின் கோபுரத்தை அகற்றுமாறு வெள்ளைகார அதிகாரிகள் சொன்னார்களாம். அதற்கு மக்கள் உடன்படாததால் அந்தக் கோபுரத்துக்கு கருப்பு நிறம் தீட்டும் மாற்றுத் திட்டம் வகுக்கப்பட்டதாம். அது அப்படி நடந்ததா இல்லையா எனத் தெரியாது . ஆனால் இது பற்றி முபாரக் மாஸ்டரிடம் கேட்டேன். அப்போது அவரும் சிறு பிள்ளை என்பதால் சரியாகத் தெரியவில்லை என்றார். ஆயினும் இராக் காலங்களில் வீடுகளில் மின் விளக்கு எற்றாமல் குப்பி லாம்புகளைப் பாவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டதாம். அந்தக் கால யுத்த பாதுகாப்பு முறைகள்.

”ஓடிப் போன துண்டு” பற்றிச் சொல்லுங்களேன் என ”தேவ் கண்ணாவிடம் கேட்டேன். மணுஷி கொஞ்சம் ஓர்மை காரி. பெரிதாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு இப்படிச் சொன்னார்

” எங்கே ஓடிப்போக. நாங்கள் ஓடிப் போக இல்லே. எல்லோரும் ஓடிப் போனாங்கள். நாங்கள் பானா கடை முடுக்கில்தான் இருந்தோம்.”

இதற்கு மேல் ”ஓடிப் போன துண்டு” பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. எனவே “தேவ் கண்ணா” பற்றிப் பேசலாம் என நினைக்கிறேன்.

 

“தேவ் கண்ணா” வுக்கு இப்போது 97 வயது. இந்த வயதில் கூட இன்னும் பழைய ஓர்மை அப்படியேதான் இருக்கிறது. உடல் தளர்வும் இல்லை. ஞாபக மறதி மட்டும்தான். பேரன் பேத்திகள், கொள்ளுப் பேரப் பேத்திகளுடன் வாழ்ந்தாலும் மனுஷி தனது இருப்பிடத்தை தனியாகவேதான் இன்னும் வைத்திருக்கிறார். யாரின் நிழலிரும் வாழப் பிடிக்காத பிடிவாதம் . என்ன துணிவு.

10 பிள்ளைகள் பெற்று, நான்கு தலைமுறைகள் கண்டு, பேரப் பிள்ளைகளின் பேரப் பிள்ளைகளையும் கண்டு பெரு வாழ்வு வாழும் “தேவ் கண்ணா” வின் பேத்தி புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி உயிரியல் பிரிவு மாணவி ”ரிபாத்”.  சிரமம்பட்டு “தேவ் கண்ணா” வின் பிச்சடங்கள் பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளார். அதன் பிரகாரம் “தேவ் கண்ணா” வின் பேரப் பிள்ளைள் 53 பேராம்.

நாம் அந்த வீட்டுக்குப் போன நேரம் பாவம் செல்வி ”ரிபாத்” படித்த களை, நோன்புக் களை . அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவ‌ரின் படுக்கை அறைக் கதவைத் தட்டித்தான் அவரின் உம்மா எழுப்பி எடுத்து அந்த கணக்கைச் சொன்னார். ஆனால் பேரப் பிள்ளைகளுக்கும் பேரப் பிள்ளைகள் இருப்பதால் அது தனது சக்திக்கு அப்பாற்பட்ட விடயம் என்பதாலும், அதைத் தேடப் போனால் தனது பரீட்சைக்கு அது தடையாக இருக்கக் கூடும் என்பதாலும் அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டார் போலும்.

இந்தப் பேரம் பேத்தி வரிசையில் செய்னப் அதிபர் பெலிஜியா வருகிறார், பாத்திமாவின் ஓய்வு பெற்ற அதிபர் சுமையாவின் கணவர் ரிஸ்வான் வருகிறார். டொக்டர், எதிர்கால டொக்டர் என்று துறை சாந்தவர்களுக்கும் தேவ் கண்ணாவின் பரம்பரையில் குறைச்சல் இல்லை.

நூறுகளை எட்டிப் பிடிக்க இன்னும் மூன்று ஆண்டுகள் மாத்திரமே முன்னால் இருக்கிறது. நோய் நொடி என்று படுத்துக் கொள்ளாமல், அடுத்தவர்களின் நிழலில் வாழாமல் தனக்கென ஒரு வழியை சமைத்துக் கொண்டு பெரு வாழ்வு வாழுதல் என்பது எல்லோருக்கும் கிடைக்கும் பாக்கியமும் இல்லையே. ”தேவ் கண்ணா” நூறுகளைத் தாண்டியும் வாழ வேண்டும் என்பதே எமது பிரார்த்தனை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All