Puttalam Online
social

இலங்கை இனவாதம் தீப்பற்றமுன் சில தீர்மானங்கள்..!!

  • 9 June 2017
  • 179 views


இன்று அதிகாலை 10-06-2017 பற்றி எரிகின்ற இன்னொரு தொழிட்சாலையின் நெருப்பில் இலங்கை முஸ்லீம்களின் அதிகாலை விடிந்த்திருக்கிறது…!

இன்று முடியும்… நாளை தனியும்… என்ற பாமர எதிர்பார்ப்புகள் மங்கி,
இது இன்னும் பயங்கரமான – ஓர் தெளிவான கொலைக்களத்தின் ஆரம்பப்புள்ளிகள் எனும் அடையாளங்களைத் தந்துகொண்டிருக்கிறது…!

மிக அசுத்தமான, கேவலமான, தன்மானமற்ற கோழைகளின் கருத்துக் களம்…!
பணத்திற்கு பிணம் தின்னும் கூலிப் படைகளின் சுதந்திரம்…!! இன்னும் மௌனம் கலைக்காத இந்த அரசாங்கத்தின் அசமந்தம்…!!!
இந்த நெருப்பின் இலக்குகளையும், இயங்குதளத்தையும், ஓர் இரகசிய – திட்டமிட்ட வலையமைப்பு சந்தேகத்திட்கு இடமின்றி வரைந்திருப்பது தெரிகிறது…!

அழுதுகொண்டிருக்கிறோம்… பொறுமையுடன் இருக்கிறோம்.. அல்லாஹ்விடம் முறையிட்டுக் கொண்டிருக்கிறோம்…
சிவில் சமூக நிறுவனங்கள் அறிக்கைகள் விடுகின்றன…
அரசியல் தலைமைகள் உறக்கம் கலைந்த உரைகளை பாராளுமன்றத்தில் வைக்கிறார்கள்…
அல்லாஹ் அந்த முயற்சிகளுக்கு விளைவுகளையும் கூலிகளையும் வழங்கப்போதுமானவன்…

எனினும் இந்த நெருப்பு அழுகைகளால் மட்டும் அணையக்கூடியதல்ல,
திட்டமிடல்கள் திட்டமிடல்களால் எதிர்கொள்ளப்படல்வேண்டும், பிரச்சினைகளின் ஆணிவேர்கள் அறிவால் அறுத்தெறியப்படவேண்டும்.
அடுத்த கட்டங்கள் பற்றி சிந்திக்கப்படவேண்டும்…

சில முன் மொழிவுகள்:

A. ஆய்வு

1. சிறந்த புத்திஜீவிகள் ஒன்றிணைந்த, சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன்கூடிய அவசர ஆய்வொன்றினூடாக இந்த பிரச்சினையின் மூலத்தை, கிளைகளை ஊகங்களுக்கு அப்பால் மிகத் தெளிவாக கண்டறிதல் வேண்டும்.
2. இலங்கை முஸ்லீம் தலைமைகள், நிறுவனங்கள் அறிவூட்டப்பட்டு தனது அணைத்து முயற்சிகளையும் அந்த மூலத்தை குறிவைத்து திருப்புதல் வேண்டும்.
3. இந்த பிரச்சினையின் நிஜங்களை, பின்னணியை மூன்றாம் நிலை பௌத்த சமூகம் வரை வினைத்திறன் மிக்க முறையில் வெளிப்படுத்த ஆவண செய்யப்படல் வேண்டும்.
4. காலத்தின் தேவைகருதி முஸ்லீம் சமூகம் தனது ஸதகா மற்றும் சகாத் அடங்களாக இப்பணிக்கான நிதியம் ஒன்றை நிறுவுதல் வேண்டும்.

B. உடனடி பாதுகாப்பு ஏற்பாடுகள்

1. தகவல்கள், கேள்விகள் மட்டுமல்லாது அரசாங்கத்தில் / பாராளுமன்ற உரைகளில் தீர்வுகளை முன்வைத்து demand செய்தல் வேண்டும்.
2. இதுவரை தொடரும் பொலிஸாரின் இயலாமைகள் சுட்டிக்காட்டப்பட்டு, ஊர்மட்டங்களிலான முஸ்லீம் ஊர்காவல்படை/ காவல் குழுக்களை உருவாக்குதல் வேண்டும்.
3. அவற்றுக்கான உத்தியோகபூர்வ அரச அனுமதி, ஊதியம் மற்றும் பயிற்சிகளை பெற்றுத்தரால் வேண்டும்.
4. பிரபல முஸ்லிம் வர்த்தக நிறுவனங்கள் பட்டியல் படுத்தப்பட்டு குறைந்த பட்சம் அவற்றுக்கான உத்தியோகபூர்வ பாதுகாப்பை அரசாங்கத்திடம் முன்கூட்டியே உறுதிசெய்தல் வேண்டும்.
5. இதுவரை எரியூட்டப்பட்ட முஸ்லீம்களின் நிறுவனங்களுக்கான கூடியபட்ச இழப்பீடுகளை மீளத்தருவது காக்கத்தவறிய அரசின் கடமை எனப் பேசப்படவேண்டும்.
6. சிங்கள சமூகத்திற்கு உள்ளிருந்து, நாசகார சதிகள்/முயற்சிகளில் ஈடுபடுவோர்பற்றிய தகவல்களை பெறுவதட்கான வழிவகைகள் பற்றி சிந்தித்தல் வேண்டும்.

C. மேலும்

1. அனர்த்த தவிர்ப்பு, கண்காணிப்பு என்பவற்றிற்கான உயர்ந்த தொழில்நுட்ப ஆலோசனைகளை சமூகத்திட்கு பெற்றுக்கொடுத்தல் வேண்டும்.
2. எரியூட்டப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மஸ்ஜித்களுக்கான சில நிமிட ஆவணப்படங்கள் சிங்கள மொழியில் தயாரிக்கப்பட்டு அம்மக்களை விரைவாக சென்றடையச் செய்தல் வேண்டும்.
3. முஸ்லீம் நிறுவனங்களுக்கான காப்புறுதி பற்றி அறிவூட்டுதல் வேண்டும்.

D. விஷேடமாக முஸ்லீம் அமைச்சர்கள் மற்றும் மார்க்க தலைமைகள் ஒழுங்கு படுத்தப்பட்ட சர்வதேச பயணங்களை மேட்கொண்டு அரச மட்டங்களில் இலங்கை நிலவரத்தை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி தவிர்க்க முடியா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.

இம் முன்மொழிவுகள் ஒரு சிறு ஆதங்கம் மாத்திரமே…
சிலபோது பிழையான அணுகுமுறைகளாகக் கூட இருக்கக்கூடும்…
பொருளாதாரத்தில் வைக்கப்பட்டிருக்கும் கரம் எம் உயிர்களை நோக்கி நீளும் முன் நாம் முந்திக்கொள்ள வேண்டும் என்பதும்,
தேசத்தில் எரியும் தீ எம் தேகத்தில் எரியும் வரை காத்திருந்துவிடக் கூடாது என்பதுமே இந்த எழுத்தின் நோக்கமாகும்.

வல்ல நாயன் எம்முடன் இருப்பானாக,
அவனது அருள்களால் எம்மை சூழ்ந்துகொள்வானாக,
அநியாயத்தின் ஆணிவேரையும், அந்த அசிங்கமான மறை முகங்களையும் அம்பலப்படுத்துவானாக..!

எமது சந்ததிகள் சுதந்திரமாய் ஸுஜூது செய்யும்
இனிய பூமியாய், இந்த மண்ணை மீண்டும் தூய்மைப்படுத்துவானாக..!

Br. Marikkar

Kingdom of Bahrain
10-06-2017


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All