Puttalam Online
other-news

ஒமான் நாட்டு வழியாக சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்கியது கத்தார்

  • 13 June 2017
  • 386 views

BBC

வாரம் மும்முறை ஸோஹார் மற்றும் சலாலாவுக்கு நேரடி சேவைகள் இயக்கப்படும் என்று கத்தார் துறைமுகங்கள் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுவாக கத்தார் நாட்டுக்கு கொண்டு செல்லப்படும் பொருட்கள், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள துறைமுகங்களில் வைக்கப்பட்டு, பின்னர் அவை சிறிய கப்பல்களில் ஏற்றப்படும்.

ஆனால், கடந்த வாரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்டுகள், சௌதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் பயங்கரவாத குழுக்களுக்கும், இரானுக்கும் ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டி கத்தார் மீது பொருளாதார தடைகள் விதித்து, கத்தாருடனான ராஜ்ய உறவுகளையும் துண்டித்து கொண்டன.

தங்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள கத்தார் , தங்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சர்வதேச சட்டத்தை மீறுவதாக உள்ளது என்று தெரிவித்தது.

உள்நாட்டு தேவைகளுக்கு இறக்குமதி பொருட்களை சார்ந்துள்ள கத்தார்

27 லட்சம் மக்கள் தொகை கொண்ட, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம் மிக்க சிறிய வளைகுடா நாடான கத்தார், தனது நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளை சமாளிக்க நிலம் மற்றும் கடல் வழியாக வரும் இறக்குமதி பொருட்களை சார்ந்து உள்ளது.

கடந்த ஜூன் 5- ஆம் தேதியன்று, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் பஹ்ரைனை சேர்ந்த கடல்சார் அதிகாரிகள் கத்தார் நாட்டு கொடியுடன் வரும் கப்பல்களுக்கு அனுமதி மறுத்து தங்களின் துறைமுகங்களை மூடிவிட்டதாக கூறினர்.

துபாயின் மிகப்பெரிய துறைமுகமான ஜெபேல் அலி துறைமுகம் மற்றும் அபுதாபி துறைமுகம் ஆகியவையும் கத்தாரில் இருந்து வரும் மற்றும் கத்தாருக்கு செல்லும் கப்பல்களை தாங்கள் அனுமதிக்கப்போவதில்லை என்று தெரிவித்தன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில், கத்தார் துறைமுகங்கள் மேலாண்மை நிறுவனமான எம்வானி, கத்தார் வரும் மற்றும் போகும் கப்பல்கள், ஐக்கிய அரபு எமிரேட்டுகளை தவிர்த்து ஓமான் வழியாக தற்போது செல்லவுள்ளதாக அறிவித்தது.

இது குறித்து அல்-ஜசீரா ஊடகம் தெரிவிக்கையில், ”இந்த பிராந்தியத்தில் நடந்த அண்மைய நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, எம்வானி கத்தார் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்கள், கத்தார் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் நாட்டின் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் பாதிக்கப்படுவதை குறைக்க, தங்களின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து செயல்பாடுகள் தொடர உறுதி செய்துள்ளன” என்று குறிப்பிட்டுள்ளது.

ஓமானின் பங்கு

கத்தாருடனான உறவுகளை துண்டித்த அரபு நாடுகளின் பட்டியலில் ஓமான் இல்லை. மேலும், கடந்த காலத்தில் இரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட இடைத்தரகராக ஓமான் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஓமான் வழியாக தற்போது இந்த புதிய வழி உருவாக்கப்பட்டுள்ள போதிலும், உலகின் நான்காவது பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனமான சீனாவின் காஸ்கோ நிறுவனம், திங்கள்கிழமையன்று கத்தாருடனான கப்பல் போக்குவரத்து சேவைகளை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்தது.

கடந்த வாரத்தில் கத்தாரை தனிமைப்படுத்தும் நடவடிக்கை தொடங்கிய போது, தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்துக்கு மத்தியில், மக்களில் பலர் பல்பொருள் அங்காடிகளில் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

ஆனால், சென்ற வார இறுதியில் துருக்கியை சேர்ந்த தயாரிப்பாளர்கள் அனுப்பிய பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் மற்றும் இரான் அனுப்பிய 5 லோடுகள் பழங்கள் மற்றும் காய்கறிகள் கத்தாருக்கு வந்தடைந்தன.

 

இதற்கிடையே, திங்கள்கிழமையன்று அபுதாபியை சேர்ந்த செய்தித்தாளான தி நேஷ்னல், தங்கள் நாட்டினரை திருமணம் செய்து கொண்ட கத்தார் மக்களை, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் நாடு கடத்தப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All