Puttalam Online
art-culture

நெஞ்சில் நிறைந்த ஸாஹிரா – கனவுகள் தந்த என் கவிதை பூமி…

  • 5 July 2017
  • 787 views

நெஞ்சில் நிறைந்த ஸாஹிரா
கனவுகள் தந்த என் கவிதை பூமி…
———————————

ஜனாஸாக்கள் உறங்கும்
சமாதிகளின் அருகில்…

என்னை
இரண்டாம் முறை பெற்றெடுத்த – என்
தாயின் மடியில்

நானும் எனது பேனாவும்
சுவாசிக்க
இரண்டு நிமிடம் தந்த
அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்
அல்ஹம்ஹுலில்லாஹ்

*
சிறகு வலிக்கும் வேளைகளில்
மனது கனக்கும் மாலைகளில்
என் பள்ளிகூடக் கூரையில் பரந்தமர்ந்து
இளைப்பாரிச் செல்லும்
என் இதயப் பறவை…

நினைவுகளில் நடப்பது – ஓர்
நித்திய சுகம்…

அப்போது அழுதவைக்கு
இப்போது சிரிப்பு வரும்..
அப்போது சிரித்தவைக்கு
இப்போது கண்ணீர் வரும்..

*

ஓ Zahira..
சாரலடிக்கும் கவிதை பூமியே

என்
இரண்டாம் கருவறையே

வந்தனம்…

ஞாபகம் இருக்கிறதா
இவனை..?

நீ இடுப்பிலே
சுமந்தவன்…

தோழிலிட்டுத்
தாலாட்டினாயே – அந்த
மகன்..

கண்ணையும், காதையும்
மட்டும் கொண்டுவந்த
சிறுவன் – என்
இதயத்துள் பால்வார்த்த தாயே..

இதோ..
மீண்டும் வந்திருக்கிறேன்…

சில நரைத்த மயிர்களோடு…
என் மனதின்
மழைக்காலத்தை
காண வந்திருக்கிறேன்…

*

கட்டிடங்களே…
உங்கள்
ஒவ்வோர் கல்லிலும்
நான் வாழ்ந்திருக்கிறேன்…

ஏ மரங்களே..
உங்கள் அடிகளில் விளையாடி
கிளைகளில் தூங்கியிருக்கிறேன்…

இரவில் படித்த
Ismail – Block

நின்று தொழுத
Co-operative Block

முத்தமிட்டுப் பிரிந்த
main hall – எல்லாம்
என்னோடு வளர்ந்த
சகோதரங்கள் தானே…

*

ஓ.. Zahira
வாழ்வின் மலர்ப் பள்ளத்தாக்கே

நீ தந்த – ஓர்
ஆசிரியரின் அன்பில்
அழுதிருக்கிறேன்…

அந்த நல்லவர்களின் நாவால் – நான்
வளர்ந்திருக்கிறேன்..

கந்தசாமி Sir – Zarook sir – VTR sir.. – நேரம் பெயர் தடுக்கும்..
இன்னும் பல இமயங்களே…
உங்களுக்கு – என் இதயத்தில்
கல்வெட்டுக்களை வைத்திருக்கிறேன்…

தமிழ் தினப் போட்டி- நினைவுகளோடு..
Rafeek sir இன்
ஜனாஸாவில் நணைந்திருக்கிறேன்..

*

ஓ Zahira
சாரலடிக்கும் – என்
கவிதை பூமியே…

மனதும் உடையும் வெள்ளையாய்
ஓடித்திருந்த ஓவியம் நீ..

பிஞ்சு வயதின் – அந்த

பரீட்சை நேரம்..
Report தரும் நேரம்..
பிரம்பு வரும் நேரம்…
விடுமுறை மழை நாள்..

அவை – இதயத்தின்
எடுக்க முடியாத பிரதேசத்தில்
விழுந்தவை…!!

அந்தக் காட்சிகள் வந்து
கண்களில்
பூக்களை சிந்தும்..!

அந்தவானம்
அந்த canteen
அந்த bell சப்தம்
School இன் உள்ளிருந்துபார்த்தால்
வழமை..
பிரிந்திருந்து பார்த்தால்
கவிதை..

*

என் நினைவுகள்
நீள்கின்றன..

அர்த்தமில்லாத நட்பு
அர்த்தமில்லாத அழுகை..
அர்த்தமில்லாத சண்டை..
அது – ஓர்
கவிதை வாழ்க்கை..

என் மனதின்
ஈரப்பிரதேசங்களில்
இன்னும் இருக்கிறது..,

அ,ஆ
கற்ற நாட்கள்

அழுதுகொண்டு
வீடுபோன நாட்கள்..

தண்ணீர் போத்தல்
தொலைந்த நாட்கள்..

என் நினைவுகள்
நீள்கின்றன..

*

ஓ Zahira
நீதான் – எனக்கு
மனித வர்த்திகளை
அறிமுகம் செய்தாய்

வெண்கட்டி பிடித்த
வெள்ளி தீபங்களை
அறிமுகம் செய்தாய்

இதயம் எங்கும்.
இறைவனை வைத்தாய்..

13
வருடங்கள் சுமந்தாய்…

இலக்கியத்தை
குயிலோசையை
சோடியத்தை
அன்பை – நீதான்
கரும்பலகை – ஒற்றை முளையால்
ஊட்டினாய்..

*

Senior-Prefect ஆய்
சிறகு தந்தாய்..

பத்திரிகை ஆசிரியனாய்
பரிணமித்தாய்..

A/L union leader ஆய்
அழகுபார்த்தாய்..

கவிதையின், விவாதத்தின் – தேசிய விருதை
சுவைக்கச் செய்தாய்…!!

என்னை செதுக்கினாய்..!! – II

ஓர் நல்ல விதையாய்
இந்த
பூமி உருண்டைக்கு
என்னையும் பரிசளித்தாய்…

நீதான் உளி
நான் செதுக்கப்பட்டேன்..

நீதான் தூரிகை..
நான் வரையப்பட்டேன்..

நீதான் பேணா
நான் எழுதப்பட்டேன்..

ஓ Zahira
நீதான் ..
கனவுகள் தந்த – என்
கவிதை பூமி..

இந்த நிலத்தில்
விதைக்கப்பட்ட – உயிர்
விதைகளே…

அன்றொரு நாள்..
இந்தக் – கட்டிடக் கிளைகளில்
கூடுகட்டிய
கீதப் பறவைகளே…

Zahira வின்
பழைய ரத்தங்களே..

கொழும்பு என்னும்
கட்டிடக் காட்டுக்குள்
தொலைவதற்கு முன்னால்…

” வளர்த்த பூமியே..,
வாழ்த்திய வானமே..
போய்வருகிறேன்.. – என்று
புலம்பிப் புலம்பிப் புறப்பட்டவர்களே…

உலகையே மறந்து…
come on thariq
come on jinnah
come on iqbal
come on kamal…

என்ற ஓசைகளால் – இந்த
பாடசாலையின்
பள்ளத்தாக்குகளை நிரப்பியவர்களே…!

ஒரு தாயைப் பிரியும்
சோகத்தோடு..- வகுப்பறை விட்டு
வெளியேறியவர்களே..

அது ஒரு காலம்..

மேகங்களுக்குள்..
துளிகளாய் இருந்தோம்..
பொலிந்து சிதறுகையில்..
எங்கெங்கோ வீழ்ந்தோம்…

மறந்தோம்.. – முற்றாக
மறந்தோம்…

இறந்தோம் – தொடர்புகளால்
இறந்தோம்…

மரணம் என்பது
மண்ணுக்குள் போவது மட்டுமல்ல
மறதியும் தான்..!!

தோழர்களே…

இந்த
தளத்தில் வளர்ந்த
தாவரங்களே…

zahira – சந்ததிகள்
சுமந்த மண்..

உங்களை
உற்பத்தி செய்த மண்..

உங்கள்
இலைக்கும் கிளைக்கும்
காய்க்கும் கனிக்கும்
காரணமாய் இருந்த மண்….!

உங்கள்
தலையை தரப்படுத்த – கையில்
பிரம்பெடுத்த மண்..

1 அங்குளமாவது
உங்களால் உயர்வோம் – என்ற
நம்பிக்கையில்
வழியனுப்பி வைத்தமண்..

கனவுகளோடு
கையசைத்த மண்..

காத்திருக்கிறது.

இன்றுவரை
கண்ணீரோடு காத்திருக்கிறது…

பற்றாக்குறைகளால் – அது
பாதிக்கப் பட்டிருக்கிறது…

பாரம் சுமந்து..
பாரம் சுமந்து.. – அதன்
குதூகலத்தில் கூன் விழுந்திருக்கிறது..

சாதனைகளில்
சரிவு தெரிகிறது…

பால்குடி மறந்தவர்களே..
உங்கள் தாயின்
புடவை கிழிந்திருக்கிறது…

நினைவுகள்
நரைத்துப் போனதால்…

விழுதுகள்
சருகானதால்…

பர்ளுகிபாயா
பார்வை இழந்ததால்..

தொலைவில் போன
zahira வின் சிசுக்கள்.. – தன்
தொப்பூழ் கொடியை
மறந்துபோனதால்…

இந்த விபத்து
நிகழ்ந்து போனது..!

நண்பர்களே…

இந்த அரங்கம்…
அழைப்பு விடுக்கிறது..

நினைவு தின
மலர்வலையங்களை அல்ல..

வெளியில் திரியும்…
விமர்சன வீரர்களை அல்ல..

ஒரு பண்பாட்டு எழுச்சிக்கான
பசியை
அழைப்பு விடுக்கிறது..

zahira வை சரிசெய்ய
உங்கள்
சத்தியங்களை அழைப்பு விடுக்கிறது..

ரத்தமும் சதையுமாய்
கல்லூரிக்கு
கையொப்பங்களை அழைப்பு விடுக்கிறது..

அல்ல அல்லக் – குறையாத
அமுத சுரபிகளை
அழைப்பு விடுக்கிறது..

தன் உடலால்
வேய விரும்பும்..
வேலிகளை அழைப்பு விடுக்கிறது..

பல நிறப் பூக்கள் தந்து
புத்தளத்தை பூங்காவாக்கிய Zahira

ஊரின் உயிரோட்டமாய்..
இஸ்லாமிய இயக்கங்கள் தந்த zahira

விஞ்ஞானக் கல்லூரியின்
தந்தையை தந்த zahira

ஊரில் உயிர்காக்கும்
மருத்துவர்கள் உயிர்த்த Zahira

எங்கள் நகருக்கு
Engineers முளைத்த Zahira

கணக்காளரும் – சட்ட
வல்லுனரும் வருஷித்த Zahira

PULSED ஐ
PHD ஐ
POWER ஐ
PYRAMID ஐ
FOCUS ஐ
Jamiyyah வை
SYNDICATE ஐ
SILENT Volunteers ஐ – சமூகத்திற்கு
பெற்றெடுத்த Zahira

பல நிறப் பூக்கள் தந்து
புத்தளத்தை பூங்காவாக்கிய Zahira

இந்த அமரதீபம்
அணையாது பாதுகாக்க
அழைப்பு விடுக்கிறது..

இந்த அரங்கம்…
அழைப்பு விடுக்கிறது..

வாரம் ஒரு நாள்..
இந்த வாசலுக்கு வருவோம்..

பாதணிகள் கழட்டிவிட்டு.. – இந்த
வெறுந் தரையில் நடப்போம்.

மனதுக்கு – வெண்
உடை அணிந்து…
மறந்தவைகள் நினைப்போம்…

கல்லூரியின் கனவுகளுக்கு – இரு
கண்களாய்
இருப்போம்..

மழை கேற்கும் – இந்த
மண்ணுக்கு – ஒரு
வானமாய் வருவோம்..

கல்விக்கான கண்ணீர்
உலகை விடப் பெரியது…

zahira வின் கண்ணீர்
சூரியனை விடாய் பெரியது.

Br. Marikkar
Puttalam
27-06-2017


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All