Puttalam Online
art-culture

அரசியல் பேசும் இரத்தங்களே உங்களைத் தான்..!

  • 17 July 2017
  • 511 views

இம்தாத் பசர்

புள்ளிவிபரங்களை அள்ளி வீசும் நீங்கள்
புத்தாக்க சிந்தையையும் அள்ளி வீசுங்கள்
அடுத்தான் அசிங்கம் பேசாமல்
அடுத்தென்ன செய்வதென யோசியுங்கள்
அரசியல் தோற்றதும் அடுத்தவனை ஏசியே
மக்களை ஏய்ப்பதும் அயல் குறை பேசியே
அதுவே நமக்கும் ஆகுமென்றால்
அயலவன் மாற்றிடுவான் நம் இருப்பை
படைத்தவன் குறுக்கி விடுவான் அவன் அருளை

வந்ததும் வீசிடாது வாக்குகளை
அதிர்ந்திட பேசாது வசனங்களை
பேசட்டும் உங்கள் சாதனைகள்
போற்றட்டும் மாந்தர் உம் பாதங்கள்

கட்சியும் நிறங்களும் குடல்களைப் போல்
கழுவி வைத்தால் பளபளக்கும்
காலம் செல்ல நாற்றமடிக்கும்
காசுகள் வீசினால் நிறம் மாறும்
கூட்டுச் சேர்ந்தால் களவெடுக்கும்
அரசியலில் உத்தமன் யாருமில்லை
அறிந்திடாதவர் ஆரும் இங்கு இல்லை

கொள்கை கோட்பாடு விஞ்ஞாபனமெல்லாம்
நாம் சிக்கிட விரிக்கும் சொல்லேடுகள்
கோஷமெழுப்பிடும் குர்ஆன் வசனங்களும்
பாமரர் இடரும் படிக்கட்டுகள்
பழையவன் பழுத்த கள்ளன்
புதியவன் பழக வந்தவன்
புரியாமலில்லை நமக்கிதெல்லாம்
புரிந்து தான் என்ன செய்திட
பாம்பட்டை விளையாட்டை பார்த்திருப்போம்
புறக்கிட எலும்புகள் காத்திருப்போம்
எச்சில் வடியும் நாய்களைப் போல்
கிடைத்தது தின்றுவிட்டு குறைத்திருப்போம்

மேடைப்பேச்சுக்களும் மெகா சீரியலும்
ஒற்றை வயிற்று இரட்டையர் போல்
முடிந்து பார்த்தால் ஒன்றுமில்லை
எடுத்துச்செல்ல செய்தியுமில்லை
மூட்டி மூட்டியே சண்டைகளை
முடிவில் சம்பாதிப்பது நடிகர் கூட்டமே
முட்டாள் நாமிழப்பது நேரத்தையே

இருந்தவன் எம்மை ஏய்த்துச் சென்றான்
புதியவனும் புழுகியே வாக்குப்பிரித்தான்
உருக்குலைந்த ஊருக்கு உருப்படியாய்
நமக்கு முடிந்ததை நாம் செய்வோம்
அடுத்தவன் மண்டையை உடைக்காமல்
அழுக்கடைப் பேச்சுக்கள் பேசாமல்
ஆறுதலாகவே ஓடி வெல்வோம்
ஓடு போர்த்திய ஆமையைப் போல்..

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All