Puttalam Online
other-news

முஸ்லிம் கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கு தேவையா ?கீழ்

  • 17 July 2017
  • 264 views

 

எமது நாட்டில் மிகநீண்ட வரலாற்றை கொண்ட ஒரு இனம் என்றால் அது முஸ்லிம்களாகும். என்றாலும் தொடர்ச்சியாக தாக்கப்படும் இனம் என்றாலும் அது முஸ்லிம்களே என்பது வேதனையான ஒன்றாகும். இதில் நாம் சிங்கள அடக்குமுறைகளில் தொடங்கி விடுதலை புலிகளின் அட்டூழியங்கள் வரை பட்டியல் படுத்தலாம். தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படியில் முஸ்லிம் தலைவர்கள் தமிழ் தலைவர்களோடும்,சிங்கள தலைவர்களோடும் மிக நெருங்கிய உறவை காலாகாலத்திற்க்கும் ஏற்படுத்தி வந்திருப்பதை வரலாறுகள் தெளிவாக சொல்லிவருகிறது. என்றாலும் அப்போதிலிருந்து இந்த நொடிவரை முஸ்லிங்கள் நிம்மதியாக வாழ்கின்றார்களா என்ற கேள்விக்கு பதிலாக இல்லை என்பதே வரும் என்பது கசப்பான உண்மை.

ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்கும் அபிவிருத்திக்கும் குரல்கொடுக்க பல அரசியல்வாதிகள் இருந்தாலும்,அத்துடன் பலமிக்க அரசியல் சாராத இயக்கங்களும்,அமைப்புக்களும் இருந்தாலும் அந்த மக்களின் ஜனநாயக உரிமைக்குரலாக ஒலிப்பதும்,தமிழ் மக்களில் அதிகமானவர்களின் நம்பிக்கையை பெற்றதும் தமிழ் தேசிய கூட்டமைப்பே. இந்த கூட்டமைப்பில் அரசியல் சார்ந்த கட்சிகளும் போராட்ட குணமிக்க சில இயக்கங்களும் இருப்பதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. வடக்கிலும் கிழக்கிலும் செறிந்து வாழும் தமிழர்களின் ஏகோபித்த தெரிவு தமிழ் கூட்டமைப்பே. அதே போன்று மலையகத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கிளின் குரலாக ஒலிக்க அமைச்சர் மனோவின் தலைமையில் மலையகம் சார் கூட்டமைப்பு ஓன்று உருவாக்கப்பட்டு இருளடைந்து கிடந்த அந்த மக்களின் வாழ்வில் இப்போது மெழுகுவர்த்தி அளவு வெளிச்சமாவது வர காரணமாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

இலங்கை தாய் நாட்டை யாருக்கும் காட்டிகொடுக்கவோ அல்லது அரசை எதிர்த்து கிளர்ச்சிகள் ஏதும் செய்யாமல் தாய்நாட்டை நேசித்து வாழும் ஒரு இனம் என்றால் அது முஸ்லிங்களே !! கருப்பு ஜூலை, காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை, வடமக்களின் வெளியேற்றம் என பல சிவப்பு கறைபடிந்த வரலாற்றை இதயத்தில் சுமந்து வாழும் இனம் முஸ்லிங்களே…

அசாதாரண சூழ்நிலையில் தனது வீட்டை இழந்த எம்.எச்.எம்.அஸ்ரப் எனும் ஒருவர் ஏன் இந்த அநீதி என சிந்தித்ததன் விளைவே முஸ்லிம்களின் தலைஎழுத்தை மாற்றியமைத்தது. அந்த மனிதர் தான் முஸ்லிங்களின் முகவரியை மாற்றியமைக்க தனியடையாளத்தை உருவாக்கி இலங்கையில் வாழும் முஸ்லிங்களின் பெறுமதியை ஆட்சியாளர்களுக்கும் உலக நாட்டுக்கும் காட்டியவர் அதனாலையே அவர் மரணித்தும் இலங்கையர்களின் மனங்களில் வாழ்ந்துவருகிறார். மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் வழியில் வந்த கட்சி தலைவர் உட்பட ஏனைய சகலரும் அந்த இடத்தை சரியான முறையில் தக்கவைக்க தவறியதன் விளைவாகவே . அவரின் இழப்பின் பின்னர் முஸ்லிம் சமூகம் பாரிய சிக்கல்களை அனுபவிக்கிறது என்பது எதார்த்தம். பாராளுமன்றத்தில் கர்ச்சிக்கும் ஆளுமை கொண்ட அஸ்ரப்பின் இடத்தை நிரப்ப தகுதியானவரை இன்னும் இந்த சமூகம் அடையாளம் காணவில்லை என்பதே கவலையான கசப்பான உண்மை. 

சாணக்கியமாக காய்நகர்த்தி ஆட்சிகதிரையில் யாரை அமரச்செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருந்த இனம் இன்று சிதறுண்டு கிடக்கிறது.

சிதறிய சகல அரசியல் ஆளுமைகளும் ஒரே குடையின் கீல் ஒன்றுதிரள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. அரசியல் அந்தஸ்தை இழந்திருக்கும் முஸ்லிம் சமூகம் இன்று சிதறிய சில்லறைகளாக இருப்பதை மாற்றியமைத்து பெறுமதிமிக்க நோட்டாக மாறவேண்டியுள்ளது. அதனால் காலத்தின் கட்டாயமாக ஐக்கிய முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டியுள்ளது.

ஐக்கிய முஸ்லிம் கூட்டமைப்பின் தலைமைக்கு  தகுதியானவர் இவரா ?

சனத்தொகையில் அதிகமாக வாழும் சிங்கள மக்களை விட, தமிழ் மக்களை விட அதிகளவிலாலான தலைவர்களையும் கட்சிகளையும் கொண்ட முஸ்லிங்களிடமிருந்து ஒருவரை தலைவராக்குவது என்பது மாட்டை மலை ஏற்றுவது போலான ஒரு விடயம். என்றாலும் முஸ்லிங்களிடத்தில் அதிக மதிப்பை பெற்ற சிலர் உள்ளதால் அவர்களை நாம் இங்கு நன்றாக அவதானிக்க வேண்டியுள்ளது. அதில் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம்,மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுத்தீன்,தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் போன்றோரை குறிப்பிடலாம். இவர்கள் ஒருபுறமிருக்க மு.காவில் செயலாளராக இருந்த ஹசனலி,தவிசாளராக இருந்த பசீர் சேகுதாவூத், ம.கா செயலாளர் (நீதிமன்ற தீர்ப்பு இன்னும் நிலுவை.) வை.எல்.எஸ்.ஹமீது போன்றோரும் பட்டியலில் இல்லாமலில்லை. 

இதில் பதவியிழந்து நிற்க்கும் முன்னாள் அமைச்சர்களான அதாவுல்லாஹ்,ஹசன் அலி, பசீர் சேகுதாவூத்.வை.எல்.எஸ்.ஹமீது போன்றோர்களே மீண்டும் பதவியை பெற்றுக்கொள்ள மக்களை திசை திருப்புவதாகவும், பேரின சக்திகளின் கைக்கூலியாக செயற்பட்டு மு.காவையும் ம.கா ஐயும்  அழிக்க திட்டம் தீட்டுவதாகவும், இதே போன்று இன்னும் பல குற்றச்சாட்டுக்கள் மு.கா மற்றும் ம.கா போராளிகளால் முன்வைக்கப்பட்டு வருகிறதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியதே. என்றாலும் மேலே கூறப்பட்ட நபர்களின் ஆளுமைகளை மக்கள் நன்றாக அறிவர்.

முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கினால் அதன் தலைமை பதவி மு.கா தலைவருக்கே வழங்கப்பட வேண்டும் அவரே அரசியலில் சாணக்கிய வியூகம் வகுக்கக் கூடியவரும் அரசியல் முதிர்ச்சியும் உள்ளவர் என்பதுடன் அஸ்ரப் ஆரம்பித்த கட்சியை வழிநடத்துவர் என்பது மு.கா ஆதரவாளர்களின் வாதம். இல்லை இளமையும்,துடிதுடிப்பும்,சத்திய மும்,சேவை மனப்பாங்கும் கொண்ட மக்கள் காங்கிரசின் தலைவரே அந்த தலைமை பதவிக்கு தகுதியானவர் என்பது அமைச்சர் ரிசாத்தின் ஆதரவாளர்களின் வாதம். இல்லை தலைவர் அஸ்ரபின் பாணியில் பயணிக்கும் அரசியல் முதிர்ச்சி பெற்ற தூர நோக்கு சிந்தனை கொண்ட சிறந்த ஆளுமை கொண்ட மு.அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களே தலைமைக்கு தகுதியானவர் என்பது தே.காங்கிரஸ் தொண்டர்களின் வாதம். முஸ்லிங்களின் தேவைகள் பற்றியதும் அரசியல் முதிர்ச்சியும் பெற்ற தூர நோக்கு சிந்தனை கொண்ட சிறந்த ஆளுமை கொண்ட இ.அமைச்சர் ஹிஸ்வுல்லாஹ் அவர்களே தலைமைக்கு தகுதியானவர் என்பது ஒரு சாராரின் வாதமாகும் இந்த வரிசையில் ஹசன் அலி,பசீர் சேகுதாவூத், வை.எல்.எஸ்.ஹமீது,அப்துர் ரஹ்மான் (NFGG) போன்றோர்களின் பெயர்களும் தலைமை பதவிக்கு விரும்பப்படுகிறது.

இவை எல்லாம் ஒரு புறமிருக்க புதிய ஒருவரை அலசி ஆராய்ந்து தலைவராக நியமிக்க வேண்டும் என்பதும் வலுப்பெற்று வரும் ஒரு சாராரின் வாதமே. இவை சகலதையும் பார்க்கின்ற போது தெளிவாக ஒன்றை புரிந்து கொள்ள முடிகின்றது. என்னவென்றால் சகலருக்கும் அந்த தலைமை நாற்காலி தேவை.

தலைமைத்துவ சபையே தீர்வு !!

ஐக்கிய முஸ்லிம் கூட்டமைப்பை நிறுவி அதன் தலைமைத்துவத்தை தனி ஒருவரின் கையில் வழங்குவதன் மூலம் அதன் செயற்பாடுகள் திசை மாறிச்செல்வதுக்கான வாய்ப்புக்கள் நிறையவே உள்ளதை யாரும் மறுக்க முடியாது. இந்த கூட்டமைப்பை உருவாக்கிய பயனை முழுமையாக அடைய தலைமைத்துவ சபை ஓன்று நிறுவப்பட வேண்டும். அந்த சபையில் அரசியல் தலைவர்கள்,ஜம்மியத்துல் உலமா பிரதிநிதி , இஸ்லாமிய சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பல்கலைகழக பேராசிரியர்கள்,  வர்த்தக பிரதிநிதிகள் அடங்கிய ஒரு சபையாக இருக்கவேண்டும். அதில் நம்பிக்கையான இணைத்தலைமைத்துவம் உருவாக்கப்பட்டு செயலாற்றப்படல் வேண்டும்.அப்போதுதான் முஸ்லிங்களின் சகல இன்னல்களையும் தீர்ப்பதுக்கான ஒரு சந்தர்ப்பம் கிட்டும்

இந்த தலைமைத்துவ சபையின் சகல தீர்மானங்களும் முஸ்லிம் மக்களிடம் நேரடியாக சென்றடைய வழிவகுப்பதன் மூலம் எமது பிரச்சினைகளின் தீர்வுகள் நேரடியாக எந்தவித ஒளிவுமறைவுமின்றி நடைபெறும். இஸ்லாம் கூறும் மசூறா அடிப்படையில் அமைப்பெறும் எந்த முடிவும் பாரிய பக்கவிளைவுகளை எதிர்மறையாக தரமாட்டாது என்ற வகையில் இந்த தலைமைத்துவ ஆசனம் தனிப்பட்டவறிடமிருக்காது ஒரு தலைமைத்துவ குழுவிடம் இருப்பது சிறந்தது.

இந்த தலைமைத்துவ சபைக்கு சகல அரசியல் வாதிகளும்,அரசியல் கட்சிகளும்,பொதுநல இயக்கங்களும் தமது முழு ஆதரவை வழங்குவதன் மூலம் முஸ்லிங்களின் பிரச்சினைகளுக்கு ஆளும் தரப்பிடமிருந்து விரைவாக பதில் கிட்டும் என்பது மக்களின் நம்பிக்கை.

ஐக்கிய முஸ்லிம் கூட்டமைப்பின் மூலம் முஸ்லிங்களுக்கு என்ன இலாபம் ?  

சகலரும் ஒரே குடையின் கீழே அணி வகுப்பதனால் பெரும்பான்மை கட்சிகளின் ஆதிக்கம் குறைவடைந்து முஸ்லிங்களின் கை ஓங்கும். அதனால் தமது ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் எனபதை உணர்ந்து இனவாத செயற்பாடுகள் அடக்கப்பட்டு முஸ்லிங்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் பதில் கிட்ட வழியேற்படும். 

எல்லோரும் ஒரே அணியில் இருப்பதனால் தேசிய தலைவர் யார் என்கிற போட்டி நிகழாது.அத்துடன் தலைவரின் பிழைகளை சுற்றிக்காட்டும் அரசியல் பிரமுகர்கள் ஓரங்கட்டுவது இங்கு நடக்காது,தலைவருக்கு வாழ்த்துப்பாடி சாதிப்பவர்களால் எதையும் இந்த கூட்டமைப்பில் நடத்த முடியாது… கட்சி சண்டைகள் இடம்பெறாமல்,ஊழல்கள் இல்லாமல் இயங்கவேண்டிய நிர்பந்தம் உள்ளதால் இஸ்லாம் விரும்பும் சகோதரத்துவம் ஓங்கும், ஆகவே இந்த நாட்டில் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது இருப்பதை இல்லாதொழிக்க சகலரும் கசப்புணர்வுகள் மறந்து ஒரே குடையின் கீழே ஒன்றிணையவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்

இந்த ஐக்கிய முஸ்லிம் கூட்டமைப்பினை சிறப்புற இயங்கச்செய்ய பெரிய,சிறிய கட்சிகளும்,கட்சி தலைவர்களும்,மக்கள் நலம் விரும்பும் போது அமைப்புக்களும் முஸ்லிம் உம்மத்துக்காக ஒன்றிணைந்து குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்பது மக்களின் அவா….

படுமோசமாக சகல ஆட்சியிலும் அடிவாங்கும் எமது முஸ்லிம் சமூகத்துக்கு மீண்டும் விடிவு கிடைக்காதா என ஏங்கும் முஸ்லிங்களுக்கு இந்த முஸ்லிம் கூட்டமைப்பும் முஸ்லிங்களின் தலைவர்களின் இணைவும் ஒரு திடமான நம்பிக்கையை கொடுக்கும் என ஒவ்வொரு காலையும் புதிய நம்பிக்கையுடன் உதயமாகிறது அந்த கனவை மெய்ப்படச்செய்ய ஹசனலி,பசீர் வெளியாகி விட்டனர் மற்றவர்களின் வரவை எதிர்பாத்திருக்கும் மக்களுக்கு தலைவர்களின் மௌனம் நீடிக்குமா என்பதை காலமே சொல்லும் …….

நூருல் ஹுதா உமர்

மாளிகைக்காடு 

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

போதை

  • Wednesday,11 Jul 2018
சுவடிக்கூடம்View All