Puttalam Online
international-affairs

வடகொரியாவுடன் இராணுவப் பேச்சுவார்த்தைக்கு முன்மொழிவு

  • 18 July 2017
  • 388 views

தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில், இராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டுமென, தென்கொரிய அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில், தேவையற்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கைகயை இல்லாது செய்வதற்காகவே, இந்தப் பேச்சுவார்த்தைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

புதிதாகப் பதவியேற்ற ஜனாதிபதி மூன் ஜே-இன்னின் அரசாங்கம், வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்பில், ஆரம்பத்தில் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அதன் பின்னர் வடகொரியாவால் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைச் சோதனைகளைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தைக்கான சூழல், இல்லாது செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.

குறிப்பாக, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை விருத்தி செய்துள்ளதாகவும், அதன் முனையில், அணுகுண்டைக் கொண்டுசெல்ல முடியுமெனவும், வடகொரியா தெரிவித்ததைத் தொடர்ந்து, பதற்றம் அதிகரித்திருந்தது.

இந்நிலையிலேயே, இந்த வார இறுதியில், இந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியுமென, தென்கொரியா தெரிவித்தது. இதற்கு, வடகொரியாவிடமிருந்து, உடனடியான பதிலேதும் கிடைக்கவில்லை.

“கொரிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளுக்கும் வடகொரியாவின் அணுகுண்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், இரண்டு கொரியாக்களுக்கும் இடையில் பதற்றத்தைத் தணித்தலும் சமாதானத்தைக் கொண்டுவருவதற்கும், பேச்சுவார்த்தைகளும் கூட்டுறவும் அவசியமானவை” என, தென்கொரியாவின் ஒற்றுமைப்படுத்தல் அமைச்சர் சோ மியோங்-கியோன் தெரிவித்தார்.

எல்லையில் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை என இதை வர்ணித்த தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு, தொங்கில்கக்-இல், ஜூலை 21ஆம் திகதி, இப்பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு முன்மொழிந்துள்ளது.

தொங்கில்கக் என்பது, பன்முன்ஜொம் சமாதானக் கிராமத்தில் காணப்படும், வடகொரியக் கட்டம் ஆகும். இந்தக் கட்டடத்திலேயே, இரு நாடுகளுக்கும் இடையிலான முன்னைய பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டிருந்தன.

இதேபோன்று, எல்லைகளைத் தாண்டி, அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்குமான அவசர அழைப்பு இலக்கங்களை மீண்டும் செயற்படுத்துவதற்கும், தென்கொரியாவால் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது, வடகொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து, வடகொரியாவால் நிறுத்தப்பட்டிருந்தது.

தவிர, இரண்டு நாடுகளின் செஞ்சிலுவைச் சங்கங்களும், மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிப்பது தொடர்பாக, வேறு தனியான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமெனவும், தென்கொரியா முன்மொழிந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில், இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தை, 2015ஆம் ஆண்டு டிசெம்பரில் இடம்பெற்றிருந்தது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All