Puttalam Online
regional-news

புத்தளம் கே.கே. வீதியும் BANA அப்பாவின் கடையும்

  • 23 July 2017
  • 505 views

Newton Isaac

கே.கே. வீதி என்றுதான் பலருக்கும் தெரியும். இன்னும் கூட அந்த கே.கே என்ற இரண்டு ஆங்கில எழுத்துக்கள் எதைக் குறிக்கிறது என்று பலருக்கும், குறிப்பாக இளம் பரம்பரக்குத் தெரி‌யவே தெரியாது. கங்காணிக் குளம் என்று சொன்னால் அது எங்கே இருக்கிறது என்ற கேள்வியும் கூடவே பிறக்கும். அது தான் இப்போது “ஐபீஎம்” மண்டபமும், தாருல் கரால் பள்ளிவாசலும் நிற்கும் இடம். அது ஒரு காலத்திலே குளம். இந்த நகரத்து வரலாற்றோடு பின்னிப் பிணைந்த ஒரு குளம். பின்னர் அது ரேஸ் தரவை. அந்த ரேஸ் தரவைக்கு ”சின்னத் தரவை” என்றும் ஒரு பெயர்.

கங்காணிக் குளம் அமைந்திருந்த காரணத்தினால்தான் அதன் முன்னால் போகும் வீதி கங்காணிக் குளம் வீதி எனப் பெயர் பெற்றது. இந்த வீதிக்கும் கூட நம் நல்ல நகரத்து வரலாற்று அத்தியாயத்தில் ஒரு தனிப் பங்கு இருந்தது. குருநாக்கல் வீதியின் தொடக்கத்தில இருந்து அல்லது இரண்டாம் குறுக்குத் தெருவின் ஒரு திருப்பத்தில் இருந்து தொடங்கும் இந்த கங்காணிக் குளம் வீதி இப்போது என்னமாய் மாறிப் போய்விட்டது?

காலங் காலமாக நாம் கண்டு வந்த எல்லாமே போய்விட்டன. நகர மயமாதல் என்று சொல்வார்களே அதற்கு இந்த கே.கே . வீதி அழகான ஒரு உதாரணமாகத்தான் எனக்குத் தெரிகிறது.

அதைப் பற்றியெல்லாம் பேச வரவில்லை. கே.கே . விதி என்னும் புத்தளம் நகரத்தது அத்தியாயத்திலே எழுதப்பட்ட அத்தனையும் அழித்து , மாற்றி எழுதப்பட்டுவிட்டன. ஆயினும் இன்றய நாள் வரையில் மாற்றி எழுதப்படாமல் இருந்த அந்த அத்தியாயத்தின் கடைசிப் பந்தியின் க‌டைசி வரி அழித்து எழுதப்படுவதைக் காட்டத்தான் நேற்று மாலை இந்தப் படத்தை எழுத்துக் கொண்டேன். இன்றும் மின்சாரம் கழுத்தறுப்புச் செய்வதற்கு முன்னர் அன்பு இதயங்களுடன் பகிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பில்தான் இந்த காலைப் பொழுதின் முதற் கடமையாக இதை எழுத எனது கணினி முன் அமர்ந்தேன்.

இது BANA அப்பாவின் கடை. அந்தக் காலத்தி‌லே BANA அப்பா என்றொரு நல்ல மனிதர் இருந்தார். கொஞம் தொக்கையாக, வெள்ளரிக்காயின் உட் பக்க வெண்மை நிறம் போல நல்ல வெள்ளை நிறமாக இருப்பார். அவ்வளவு உயரமும் இல்லை, குள்ளமும் இல்லை. ஆனால் அவரது பருத்த உடல் அவரை ஒரு கட்டயைான மனிதராகத்தான் காட்டும். பெனியன், சாரம், இடுப்பில் பக்கட்டு வார். வழுக்கைத் தலை. இப்படி ஒரு கோத்தை மனத்திரையில் ஓட விடுங்கள். மனதில் ஒரு படம் உருவானால் அதுதான் BANA அப்பா.

அந்தக் காலத்திலே பிரசித்தி பெற்ற இனிப்புப் பண்டமான ” பினாட்டு” வாங்க “BANA” அப்பா கடைக்குப் போய் பக்கவாட்டில் உள்ள படியில் ஏறினால் ஒரு சுள்ளிப் பிரம்பால் சுரீர் என்று அடிப்பார். படியில் ஏறுவது அவருக்கு பிடிக்கவே பிடிக்காது. ” எறங்கு,…………எறங்கு” என்று அடித்து அடித்து இறக்கி விட்டுத்தான் ”என்னா வேணம்” என்று கேட்பார். காசைக் கொடுத்தால் அவரது பரந்த உள்ளங் கையில் வைத்து எண்ணிப் பார்த்துவிட்டு காசை மேசையில் வைத்துவிட்டு , பக்கெட்டு வாருடன் சேர்த்து சாரத்தை ஒரு உசுப்பு உசுப்ப சரி செய்து கொண்டு, மடியில் இருந்த மூக்குத் தூள் டப்பாவை எடுத்து ஒரு சிட்டை மூக்குத் தூளை எடுத்து இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக ஒரு உறுஞ்சு உறுஞ்சிவிட்டு, ஒரு கனைப்பு கனைத்துவிட்டு, தொண்டையைச் சரி செய்து கொண்டுதான் நமது தேவையை அவர் நிறைவேற்றி வைபார். Really interesting.

BANA அப்பா போய் ரெம்பக் காலம் ஆகிவிட்டது. அவரது சுற்றாடலில் இருந்த குள்ளப் புளிய மரம், ‌நெடிதுயர்ந்து பரந்த வாகை மரம், கபீர் அப்பாவின் மருந்துக் கடை, சாந்துக் காரன் அப்பாவின் கடை எல்லாமே போய் ரெம்பக் காலம் ஆகிவிட்டது.

சாந்துக்காரன் அப்பாவைப் பற்றியும் கொஞ்சம் பேசத்தான் வேண்டும். அவரும் ஒரு பாம்புக் கடி வைத்தியர். எப்போதும் எதாவது ஒரு மந்திரத்தை உச்சரித்துக் கொண்டுதான் இருப்பார். பிரசித்தி பெற்ற பாம்புப் பரியாரி ”முட்டாள் அப்பா” வுக்கும் சாந்துக் காரன் அப்பாவுக்கும் இடையில் நீண்ட கால பனிப்போர் இருந்து வந்திருக்கிறது. தொழிற் பொறாமை காரணமான அந்த பனிப்போரில் முட்டாள் அப்பாவின் மந்திரத்தை எது எதிர் மந்திரம் மூலம் Interrupt செய்வாராம் சாந்துக்காரன் அப்பா.

குள்ளப் புளிய மரத்தின் எதிரே அவரது இருள் மயமான கடை இருக்கும். அதிலே எந்த தின்பண்டத்தை எடுத்தாலும் ஒரு சதம் தான். மல் கோவா என்றொரு அந்தக் காலத்து இனிப்புப் பண்டம் இருக்கும். அது சாந்துக் காரன் அப்பா கடையின் special.
பகல் காலம் முழுவதும் வெய்யில் பட்டதால் பின்னந்திப் பொழுதிலும் BANA அப்பா கடையின் உயர்ந்த திண்ணை கணகணப்பாக இருக்கும். அந்த கணகணப்பில் அமரந்திருந்து பலதும் பத்தும் பேசி மகிழ ஒரு கூட்டம் அந்த திண்ணையில் கூடும். அகுமது அப்பா, ஒசன் அப்பா, அவர்களது பரிவாரங்கள் என்று பலரும் தவறாமல் அதில் அமர்து பேசுவார்கள். அவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள்.

எல்லோரும் போய்ச் சேரந்த பின்னரும் BANA அப்பா கடை மாத்திரம் கால மாற்றத்திற்கு ஆழாகமல் அப்படித்தான் இருந்தது. நேற்று மாலை தற்செயலாக அந்தப் பக்கம் போன போது அந்த அத்தியாம் அழித்து எழுதப்பட்டுக் கொண்டிருந்தது. கையில் கைபேசி இருக்கவில்லை. அதை உடனடியாக படம் எடுத்துக் கொள்ள வேண்டும். என வே சுமார் ஓன்று அல்லது இரண்டு கிலோ மீட்ட‌ர் தூரத்தில் உள்ள நமது இருப்பிடம் போய் கைபேசியை எடுத்துக் கொண்டு வந்த கையோடேயே படத்தை எடுத்துக் கொண்டேன்.

BANA அப்பா கடை போகிறது……..போய்க் கொண்டிருக்கிறது இன்னும் இரண்டொரு தினங்களில் அது நிரந்தரமாகப் போய்விடும். ஆனாலும் BANA கடை சந்தி என்று அந்தக் காலத்தில் இருந்து அழைக்கப்படும் அந்தப் பகுதி தொடர இருக்கும் பல தலை முறைகளுக்கு BANA கடை சந்தியாகத்தான் இருக்கப் போகிறது.

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All