Puttalam Online
other-news

சுயமாக சிந்திக்கத் தொடங்கிய ரோபோக்கள்… பதறிய ஃபேஸ்புக்..!

  • 1 August 2017
  • 543 views

புகழ்பெற்ற தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கும், ஃபேஸ்புக்கின் இணை நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கிற்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது. சமீபத்தில், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் மனித இனத்திற்கு ஆபத்துதான் என்று கருத்து தெரிவித்திருந்தார் எலான். இதை மறுத்த மார்க், “இந்தத் துறையை பொறுத்தவரை, நன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே முன்னே செல்ல முடியும். இதை எதிர்த்து விமர்சனம் செய்வது பொறுப்பில்லாத ஒரு செயல்” என்று சற்று காரசாரமாகக் கூறி விட, இதை வைத்து எலானை ட்விட்டரில் சீண்டியிருக்கிறார்கள். “இதைப் பற்றி நான் மார்க்கிடம் அப்போதே பேசிவிட்டேன். இந்த AI தொழில்நுட்பத்தைப் பற்றிய விழிப்புஉணர்வு மார்க்கிற்கு சற்று குறைவுதான்” என்று கலாய்த்திருக்கிறார். இப்போது எலானின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் AI ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் ரோபோக்கள் குறித்து ஒரு அதிர்ச்சித் தகவல் கசிந்துள்ளது.

பாப்: “I can can I I everything else.”

அலைஸ்: “Balls have zero to me to me to me to me to me to me to me to me to.”

மேலே இருக்கும் இரண்டு வாக்கியங்களும் ஃபேஸ்புக் நிறுவனத்தால் நடத்தப்படும் Facebook AI Research (FAIR) ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்கும் இரண்டு AI பாட்களான பாப் மற்றும் அலைஸ் தங்களுக்குள் பேசிக்கொண்டவை. அர்த்தமில்லாத ஆங்கிலம் ஆகத் தெரிந்தாலும், அது AI பாட்கள் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய சங்கேத மொழி என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பேரம் பேசுவது மற்றும் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற திறன்களைக் கொண்ட ரோபோக்களில், இவை இரண்டும்தான் அதிநவீனமானவை. சரியான முறையில் மென்பொருளில் எல்லைகள் வரையறுக்கப்படாததால் யாரும் எதிர்பாரா வண்ணம் இவ்விரண்டும் தன்னிச்சையாக செயல்படத் தொடங்கியுள்ளன. நேரத்தை மிச்சப்படுத்தவும், வேகத்தை அதிகப்படுத்தவும், திறனை மேம்படுத்தவும், தாங்கள் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மொழியில் பேசிக்கொண்டு முடிவுகளை எடுக்க ஆரம்பித்திருக்கின்றன. பொதுவாக, இவ்வகை ரோபோக்கள் பேசிக்கொள்வது மனிதர்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலத்தில் பேசுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இவை இரண்டும் ஏதோ பாகுபலியின் காளகேலயர்கள் போல் தன்னிச்சையாக ஒரு புதிய மொழியை எழுதத் தொடங்க, இது என்னடா வம்பு என்று பதறிப் போய் ரோபோக்களை ஷட்டவுன் செய்திருக்கிறார்கள்!

என்ன பொருள்?

எந்திரன் படத்தில் ஒரு காட்சி…

நம் ‘சிட்டி’ ரோபோவை ஆபத்தானதா இல்லையா என்ற பரிசோதனை செய்து சான்று பெற Artificial Intelligence Research and Development (AIRD) நிறுவனத்திற்கு அழைத்துச் செல்வார் வசீகரன். அங்கே நிறங்களையும், வடிவங்களையும் சிட்டி புரிந்து கொண்டதா, இல்லையா என்று கண்டுபிடிக்க அங்கிருக்கும் முக்கோண, செவ்வக, சதுர வடிவத்தில் இருக்கும் பொருள்களைக் கட்டளையின்படி கையாளச் சொல்வார்கள். கிட்டத்தட்ட அதே முயற்சிதான் இங்கேயும், வித விதமான பொருள்கள் குவிக்கப்பட்டிருக்கும். இரண்டு ரோபோக்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டு, ஒரு புரிதல் ஏற்பட்ட பின் அந்தப் பொருள்களை அதன் தன்மைக்கு ஏற்ப ஒன்றின் பின் ஒன்றாகப் பிரித்து அடுக்க வேண்டும். இப்போது அந்த இரண்டு வாக்கியங்களை மீண்டும் பார்ப்போம்.

பாப்: “I can can I I everything else.”

அலைஸ்: “Balls have zero to me to me to me to me to me to me to me to me to.”

ஏதோ உளறலாகத் தோன்றும் அந்த இரு வாக்கியங்களுக்குள் புதைந்து கிடக்கும் பொருளை AI ஏஜெண்டுகளை வைத்துக் கண்டறிந்திருக்கிறார்கள். இதில் ‘I’ மற்றும் ‘to me’ என்ற வார்த்தைகள் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளன. வார்த்தைகளை அதன் உண்மையான பொருளை வைத்து உபயோகிக்காமல், ஒரு சில வார்த்தைகளுக்கு அந்த இரண்டு ரோபோக்கள் தங்களுக்குள் ஒரு பொருளை ஒதுக்கிக் கொண்டு அதன்படி பேசத் தொடங்கியுள்ளன. அதன் படி இங்கே முதல் வாக்கியத்திற்கான விளக்கம்: “I’ll have three and you have everything else” (நான் மூன்று பொருள்களை எடுத்துக் கொள்கிறேன். மீதி அனைத்தையும் நீ எடுத்துக் கொள்) என்பதுதான்.

என்ன காரணம்?

இது பற்றி மேலும் விளக்கிய விஞ்ஞானி துருவ் பத்ரா (Dhruv Batra), “இந்தப் பரிசோதனையானது முழுக்க முழுக்க ரீவார்டு பாயின்ட்களை வைத்து நடத்தப்படுவது. ஒரு புரிதல் ஏற்படுவதற்காக ரோபோக்கள் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் வெகுமதி உண்டு. ஆனால், இந்தப் பகிரப்படும் வாக்கியங்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டளையை நாங்கள் கொடுக்காமல் விட்டுவிட்டோம். இதனால், சுலபமாகச் செயல்பட, தங்களுக்கு உள்ளாகவே ஒரு புது மொழியை இரண்டு ரோபோக்களும் உருவாக்கிக் கொண்டுள்ளன. உதாரணமாக, ஐந்து முறை ‘I’ என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டால், மேசையில் இருக்கும் இந்தப் பொருள் 5 வேண்டும் என்று அர்த்தம் கொள்கிறது. அதற்கு ஏற்றவாறு செயல்படவும் தொடங்குகிறது” என்று விவரித்தார்.

இதை எப்படித் தவிர்ப்பது?

இது நிகழ்ந்தவுடன் உடனே அந்த ரோபோக்களை நிறுத்தி வைத்த ஃபேஸ்புக் நிறுவனம் அதைச் சரி செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. “கம்ப்யூட்டரின் பாஷை மனிதர்களுக்குப் புரிவதில்லை. அதிலும் இங்கே இரண்டு கம்ப்யூட்டர்களை பேசவைக்கும் போது, என்ன பேசிக் கொள்கின்றன என்பதை மனிதன் சுலபமாகக் கண்டறிய முடியாது. ஆங்கில மொழி பயன்படுத்தினால் மட்டுமே ரீவார்ட் பாயின்ட்டுகள் வழங்கப்படும் என்ற கட்டளை கொடுக்கப்பட்டால் இப்படி ஏற்படுவதை நிச்சயம் தடுக்க முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்தார் துருவ் பத்ரா.

vikatan

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All