Puttalam Online
other-news

ஏறாவூர் படுகொலையும் படிப்பினைகளும் – ஜுனைட் நளீமி

  • 12 August 2017
  • 133 views


இன்று போஸ்னியா படுகொலை தொடர்பான பிலிம் பெஸ்டிவல் நிகழ்வு போஸ்னியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1995 ஜூலை 11ல் போஸ்னியா இறுதி யுத்தத்தின் பொது 8000 முஸ்லீம் இளைஞர்கள் செர்பிய படைகளினால்  கொல்லப்பட்ட நாள். ஐ.நா.வினால் பாதுகாப்பு பிரதேசம் என அழைக்கப்பட்டு எஞ்சிய முஸ்லிம்கள் அடைக்கலம்  புகுந்திருந்த பகுதி ஐ.நா. படைகளினால் கைவிடப்பட்டு செர்பிய படைகளினால் இனச்சுத்திகரிப்புக்கு இலக்காக்கப்பட்ட நாள். பொஸ்னியாவின் சேர்பானிக்கா பிரதேச 85% மான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் பல தரப்பிலும் முன்வைக்கப்பட்டுள்ளன. 22வருடங்கள் கடந்தும் போஸ்னியா மக்களால் எதனையும் மறக்க முடியாத நினைவுகள்.

இதேபோன்று 1990 ஓகஸ்ட் 12ம் திகதி ஏறாவூர் படுகொலை நாள். புலிகளின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கம். அப்பாவி பொதுமக்கள் பெண்கள், சிறுவர்கள், கருவில் இருந்த சிசுக்கள் என அனைத்தும் கோரமாக புலிகளின் பாசிச பசிக்கு தீனியாக்கப்பட்ட நாள்.

வருடங்கள் 27 கடந்தும் வருடா வருடம் ‘மன்னிப்போம் மறவோம்’ என்ற கோசத்தில் சம்பிரதாயமாக நினைவு கூறப்பட்டு வருகின்றது. உரிமைப்போராட்டத்தில் கைகோர்த்த சகோதர இனத்தினை குறுந்தேசியவாத அதீத கற்பனைகளின் மற்றும் மேற்கின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் அடிப்படையில் தமது தாயக பூமி என புலிகள் கருதிய பிரதேசங்களில் இருந்து இனச்சுத்திகரிப்பு செய்யும் திட்டத்தின் விளைவாக வடக்கில் இருந்து முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டனர். கிழக்கில் அவ்வாறான புலிகளின் திட்டம் சாத்தியமற்றதாகிப்போனதுடன், ஆயுத முனையில் இனத்துவம்சம் செய்ய முற்பட்டனர்.

காத்தான்குடி, ஏறாவூர், பங்குரான பள்ளித்திடல், என படுகொலைகள் நீண்டு சென்றன. வெட்கிக்கத்தக்க விடயம் அப்போது புலிகள் அமைப்பில் இருந்த முஸ்லீம் போராளிகளும் புலிகளின் உத்தரவுக்கமைய சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் நீட்சி அப்பாவி தமிழ் முஸ்லீம் உறவில் பாரிய விரிசலை ஏற்படுத்தியதுடன் ஆங்காங்கு முஸ்லீம், தமிழ் சகோதர இனங்களுக்கிடையில் இழப்புக்களையும் ஏற்படுத்தியது என்பதில் கருத்து வேறுபாடில்லை.

இந்த பின்னணியில் எமது வருடாந்த நினைவுகூரல் எதனை இலக்காக கொண்டுள்ளது என்பதனை வரையறுக்க வேண்டிய தேவை முஸ்லீம் சமூகத்துக்குள்ளது. இவற்றினை சுருக்கமாக நோக்குதல் பொருத்தமாக அமையும்.

தீர்வு முயற்சியில் முஸ்லிம்களுக்கான நியாயங்களும் கிடைக்கப்பெறவேண்டும்.

கடந்த கால உள்நாட்டுப்போரில் தமிழ் சமூகத்தினைப்போன்று முஸ்லிம்களும் பாரிய இழப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். ஆனால் திட்டமிட்டு அவ்வுண்மைகள் மறைக்கப்பட்டு சர்வதேசத்தில் இரண்டாம் தரப்பாக அங்கீகாரம் இன்றி வெறுமனே ஒரு இனக்குழுமமாக சித்தரிக்கப்படும் நிலை காணப்படுகின்றது. முஸ்லிம்களுக்கான தனிக்கட்சி சிந்தனை உருவாக்கத்தின் பின்னரே முஸ்லிம்கள் மீதான தமிழ் ஆயுதக்குழுக்கள் அத்துமீறல்கள் தாண்டவமாடின. ஆனால் சுமார் கால் நூற்ராண்டை தொட்டுவிடும் நிலையில் உள்ள முஸ்லீம் தனிக்கட்சி சிந்தனை குறைந்தது முஸ்லிம்கள் ஒரு தனியான தேசியம் என்ற கருத்தை சர்வதேசத்தில் விதைக்க தவறியுள்ளது என்பதனை ஏற்றுக்கொண்டாக வேண்டும். இத்தகைய அரசியல் வறுமைக்கு பாரம்பரிய வெற்றுக்கோஷ அரசியலில் முஸ்லீம் சிவில் சமூகம் சிக்கித்துக்கிடப்பதே காரணமாகும்.

சர்வதேச சமூகத்துடன் முஸ்லிம்களது தொடர்பு குறித்த மீள்பரிசீலனை.

போஸ்னியா இனச்சுத்திகரிப்பு, யூதர்கள் மீதான ஹொலாகோஸ்ட், இறுதிப்போர் முனையில் புதுக்குடியிருப்பு சாட்சியங்கள் என ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் நினைவு கூறல்களில் அச்சமூகங்கள் பல அடைவுகளை பெற்றுள்ளன. பொஸ்னியாவில் 1995 வரை இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் அப்போதைய செர்பிய இராணுவத்தளபதி குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றில் அறிவிக்கப்பட்டு  பல ஆண்டுகள் கடந்த பின்னும்  ஐ.நாவினால் ‘பாதுகாப்பு வலயம்’ என குறிப்பிடப்பட்டு எஞ்சிய முஸ்லிம்கள் அடைக்கலம் பெற்ற பின்னர் எவ்வித அறிவித்தலுமின்றி ஐ.நா படையினர் வாபஸ் பெற்றபோது 8000க்கும் மேற்பட்ட முஸ்லீம்   இளைஞர்கள் கொல்லப்பட்ட   மோசமான படுகொலைக்கு 2017 பெப்ரவரி 26ம் திகதி சர்வதேச நீதிமன்றினால் ஐ.நாவின் அப்போதைய டச் துருப்புக்கள் பொறுப்புக்கூறவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதும், இறுதி யுத்தம் குறித்து அரசு பொறுப்புக்கூறவேண்டும் என ஐ. நா மனித உரிமைகள் அமைப்பு கூறியிருப்பதும், ஐரோப்பாவில் நாசி படைகளால் 1940களில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்புக்கு சர்வதேச அனுதாபம் கிடைக்கப்பெற்றதும் இத்தகைய நினைவுகூர்தல்களினாலாகும்.

ஆனால் அவற்றிக்காண அழுத்தம் உள்நாட்டிலும் சர்வதேச டயஸ் போராக்களினாலும் அழகாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை கிழக்கு முஸ்லிம்கள் விடயத்தில் உள்நாட்டு அழுத்தக்குழுக்களோ, வெளிநாட்டில் வசிக்கும் முஸ்லீம் டயஸ்போறாக்களோ இல்லாமை முஸ்லீம் சமூகத்தின் ராஜ தந்திர வறுமையினை காண்பிக்கின்றது.

முஸ்லிம்களது இழப்புக்குறித்து ஆவணப்படுத்தல் வேண்டும்.
கிழக்கில் முஸ்லிம்கள் மீதான தமிழ் ஆயுதக்குழுக்கள் குறிப்பாக புலிகளின் தாக்குதல்கள் இழப்புக்கள் குறித்து சரியான ஆவணப்படுத்தல் மேற்கொள்ளப்படவில்லை. உயிரிழந்த, காணாமல் போன, அங்கவீனமானவர்களின் விபரத்திரட்டு முழுமை வடிவம் பெறவில்லை. தமது உறவுகளை இழந்து கண்ணீர் வடிக்கும் குடும்பங்களது தற்கால நிலை குறித்து ஆராய்ந்து தீர்வு வழங்குவதற்கான குறைந்த பட்ச பள்ளிவாசலை மையமாக கொண்ட அமைப்புக்களாவது முன்வராமை கவலையளிக்கும் விடயமாகும். இது முஸ்லிம்கள் குறித்த பொதுவான குறைபாடாகவே காணப்படுகின்றது. வரலாற்றுத்துறையில் கற்கும் மாணவர்களுக்கு அவர்களது ஆய்வுக்கட்டுரைத்தலைப்புக்களாக அவற்றினை மேற்கொள்ள வழிகாட்டுவதற்கு எமது கல்விசார் மற்றும் பல்கலைக்கழக சமூகம் தவறியுள்ளமை அவதானிக்கத்தக்கது.

இழப்புக்கள் குறித்த கலை படைப்புக்களை கோர்வை செய்தல்.
முஸ்லிம்கள் தமிழ் ஆயுத குழுக்களால் குறிப்பாக புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இனச்சுத்திகரிப்பு தாக்குதல்கள் குறித்த கலைப்படைப்புகள் கோர்வை செய்யப்பட்ட வேண்டியுள்ளது. அவை வரலாற்று ஆவணங்களாக நிலப்படுத்தப்படவேண்டியவையே. போஸ்னியா இனச்சுத்திகரிப்பு குறித்த டேவிட் ரொட் இன் கலை விவரணம் பின்னர் சர்வதேசத்தின் நீதிக்கண்களை திறக்க வாய்ப்பாக அமைந்தது. ரோமியோ டெல்லரின் புத்தக குறிப்பு ருவாண்டா பற்றி சர்வதேசத்தின் பார்வையை திருப்பியது. இத்தகைய முயற்சியினை சமூகத்தின் கலைத்துறை சார்ந்தவர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

உள்ளக நீதித்துறையின் தீர்ப்பினை பெற முயற்சித்தல். ஆயுதக்குழுக்களால் குறிப்பாக புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், நாசகார நடவடிக்கைகள் குறித்து முறையான உள்ளக நீதித்துறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. குறைந்தது குருக்கள் மட ஹாஜிகள் படுகொலை சம்பவங்கள்கூட அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குள் நசுங்கிப்போனது. தீர்வுப்பொறிமுறையின் அடிப்படையில் ஆகக்குறைந்தது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நஷ்ட்டஈட்டையாவது பெற்றுக்கொள்ளும் வழிவகை இதனுடாக அமையும். இதனைக்கூட அரசியல் தலைமைகள் செய்ய தவறியுள்ள நிலையில் உள்ளூர் பொது நிறுவனங்கள் இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

தமிழ் சகோதர இனத்துடனான உரையாடலை தொடர்வது. திட்டமிட்டு துருவமயமாக்கப்பட்ட தமிழ் முஸ்லீம் உறவு குறித்த மீள்வாசிப்பிற்கான முயற்சிகள் குறைந்தது கிராம மட்டங்களில் ஏற்படுத்த வேண்டும். ஆயுத இயக்கங்களால்  மேற்கொள்ளப்பட்ட இத்தகைய மிலேச்சத்தனமான படுகொலைகள் ஆட்கடத்தல்கள் சகோதர இனமான தமிழ் சமூகத்தின் மீதும் எதிர்வினையினை உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்ட சிலரினால் ஏற்படுத்தியிருந்தது மறுப்பதற்குமில்லை. ஒப்பீட்டளவில் முஸ்லிம்கள் மீதான இழப்பு ஈடுசெய்ய முடியாததாக அமைந்துள்ளதை நேர்மையான உள்ளம் கொண்ட தமிழ் சகோதரர்கள் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்த்தக்க அம்சம். எனவே தமிழ் சகோதர இனத்துடனான உரையாடல் தொடரவேண்டிய காலத்தேவை இருக்கத்தான் செய்கின்றது. பிரச்சினைகளின் பின்னால் பேச்சுவார்த்தை மேசைகளை தேடுவதை விடுத்து முன்னேற்பாடான கலந்துரையாடல்கள் ஆரோக்கியமாக அமையும்.

இத்தகைய விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்ட வேண்டிய நிகழ்வாகவே ஹதாக்கள் நினைவுகூரல் நாள் ஒழுங்கு செய்யப்பட்ட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய நிகழ்ச்சி நிரலில் முன்னேற்றங்கள் இடர்பாடுகள் குறித்து ஆராயப்படவேண்டும். தவிர ‘மறவோம் மன்னிப்போம். என்ற வெற்றுக்கோஷம் உள்ளத்தில் ஆறிக்கிடக்கும் வேதனைகளை இழந்துவிட்ட குடும்பங்களின்  மீது புத்துயிர்ப்பு செய்வது மாத்திரமே பிரதி பலனாக அமையும்.

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

போதை

  • Wednesday,11 Jul 2018
சுவடிக்கூடம்View All