Puttalam Online
regional-news

விமரிசனம் என்று வரும்போது சிம்மக் கர்ஜனை செய்வார்! சிம்மக் கர்ஜனைக்கும் அவரது ‌செயற்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது

  • 15 September 2017
  • 938 views

Newton Isaac

பிறக்கும்போதே இறக்கும் தேதியை ஒவ்வாெரு ப‌டைப்புக்கும் படைத்தவன் எழுதிவிட்டான். எனவே சங்கைக்குரிய ஆலிம் அர்ஹம் அப்துல் ரஸ்ஸாக் அவர்களின் பிரிவு வாழ்கை ஓட்டத்திலே ஒரு அத்தியாயத்தின் முடிவுரையாக இருக்கலாம். ஆனாலும் கூட பிரிவு என்னமாய் தேவனை தருகிறது. இன்று காலையில் சங்கதி என்னை வந்தடைந்தபோது ஒரு கனம் இயக்கமற்றுப் போய்விட்டேன்.

ஒவ்வொரு மனிதரையும் சக மனிதன் நோக்கும் கோணங்கள் வேறு. சிறந்த சன்மார்க்கப் போதகராக, சண்டமாருதப் பேச்சாளராக, ஒரு அமைப்பின் தலைவராக, இப்படி பல கோணங்களில் அவரை இந்த நகரம் கணிசமான காலத்துக்கு கண்டு வந்துள்ளது. ஆனாலும் வேறொரு வடிவில் அ‌வரை நான் பார்கிறேன் : பழக்கத்துக்கினிய , அதி மென்மையான மனிதர். இதுதான் அவரைப் பற்றிய எனது ஒட்டு மொத்தமான மதிப்பீடு. காய்தல் உவத்தலுக்கப்பால் எனது கருத்துக்கு ஒட்டு மொத்தமான உடன்பாடு இருக்கும் என்பது எனது நம்பிக்கை.

விமரிசனம் என்று வரும்போது சிம்மக் கர்ஜனை செய்வார். ஆனால் அந்த சிம்மக் கர்ஜனைக்கும் அவரது ‌செயற்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. யாரை விமரித்தாலும் அவரை தனது பரம எதரியாகக் கொள்ளும் மனப்பாங்கு இந்த கௌரவமிக்க ஆலிம் இடம் இருக்கவே இல்லை. சந்திக்கும் போதெல்லாம் ” அஸ்ஸலாமு அலைக்கும் ” என்று மொழியும் வார்த்தையில் ஒரு நழினம் இருப்பதை நான் எப்போதுமே கண்டு வந்துள்ளேன். அந்த நளினம் ஒரு காந்த சக்தியுள்ள முக மலர்சியுடன் பின்னிப் பிணைந்து வரும்போது ஸலாம் சொல்லப்பட்டவரின் மனதில் அது நெகிழ்வை ஏற்படுத்தும். எல்லாவற்றிற்கும் மேலாக சக மனிதர்களுக்குக் கொடுக்க வேண்டிய கௌரவத்தைக் கொடுப்பதில் அவர் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டிருந்தார்.

பெரும்பாண்மையான ஆலிம்களிடம் இல்லாத ஒன்று இவரிடம் இருந்தது. அதுதான் வாசிபின் மூலம் தன்னை தற்காலத்துடன் இசைவாக்கமுள்ள மார்க்க அறிஞராக ஆக்கிய நிலை. அவரது உரைகளில் எழுந்தமானமான கருத்துக்கள் பிரதிபலிக்காது. அதுதான் அவரது ஆழமான வாசிப்பின் பிரதிபலனாக இருக்க வேண்டும். தத்ருபமாகச் சொல்லவந்த கருத்துக்களை முன்வைப்பார். அது அவருக்கே உரிய பாணி.

இந்த நகரத்தில் நாம் கண்டு வந்துள்ள மதிப்புக் குரிய மனிதர்களின் இழப்புக்கள் உணரப்பட்ட விதத்தில் உணரத் தக்க ஒரு இடை வெளியை மர்ஹும் அர்ஹம் அப்துல் ரஸ்ஸாக் விட்டுச் செல்கிறார். இதயம் கனக்கிறது.

மென்மையான இளந் தென்றலின் வருடலுடன் சுவனத்து பூங்காவில் அவர் சுகம் காண வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All