Puttalam Online
politics

நகர சபைக்கு பட்டியல் நியமணம் வழங்கப்படும் நிறம் மாறாத “பச்சைப் பூ” – மொகிதீன் பிச்சை..?

  • 21 September 2017
  • 1,060 views

எம்.எஸ். அப்பாஸ்

மின்னாமல், முழங்காமல் அரசியல் செய்யும்  ஒரு “சாமானியம்….”,  “சேர்….”, “தொர….”  என்ற வரட்டுக் கௌரவங்களுக்கு அப்பால் வெறுமனே “மொகிதீன் பிச்சை” என்று பெயர் ‌சொல்லப்பட்டதுமே  ஒரு நொடிக்குள்  இனங் காணப்படும் நிறம் மாறாத “பச்சைப் பூ”.

 

ஏணியாய் இருந்து இவர் ஏற்றிவிட்ட நகர அரசியல் பிரபல்யங்கள் அனேகம். ஆனாலும் மேலேறிப் போகாது பச்சை ஏணியின்  முதற் படியில் தானும் கால் வைக்காது சற்றேறத்தாள அரை நூற்றாண்டு காலமாக   பச்சைக் கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் நன்றியுள்ள சீவன் – A Silent Politician.

யானை எப்போது தனது சுய பலத்தை உணருவதில்லையாம்.  அதனால்தான் பென்னம் பெரிய அந்த மாமிச மலை சின்னஞ் சிறிய மனிதனிடம் அடிமைப் பட்டுக் கிடக்கிறது.  அது போலத்தான் போலும்  இந்த மொகிதீன் பிச்சை என்னும் பச்சை யானையும்.  பட்டங்கள்,  பதவிகள்  என்று யாரிடமும் கேட்கவும் இல்லை, கேட்காமல் யாரும் தரவும் இல்லை.

மர்ஹூம் எம்.எச்.எம். நயினா மரிக்கார் அவர்கள் அரசியலில் காலடி எடுத்த வைத்த காலத்தில் ‌வெறுமனே 15 வயது “பொடியனாக” இருந்து  பசை வாளியோடும்,  போஸ்டர்களோடும்  தனது அடிமட்டக் கட்சிப் பணியைத்  தொடங்கிய   மொகிதீன் பிச்சை,  பச்சைக் கட்சிக்குத் தொண்டு செய்யத் தொடங்கிய காலம் தொட்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு 14 செயலாளர்கள் வந்து போகக் கண்டவர். அவர்கள் அனைவருடனும் நெருக்கமான உறவை வைத்துக் கொண்டவர் என்று சொன்னால் எல்லோருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.  ஆனால் மொகிதீன் பிச்சையின் அரசியலில் ஒவ்வொரு அசைவும் ஆச்சரியமாக இருப்பதைத்தான் என்னால் காண முடிந்தது.  குறைந்தபட்சம் நேற்று முன்னிரவு நேரத்தில் அவரது வீட்டில்  அவரைப் போய்ச் சந்தித்த தருணத்திலிருந்து.

கட்சியின் அந்த 14 செயலாளர் நாயகங்களோடும் சரி, காலஞ்சென்ற அமைச்சர்களான  காமினி திஸாநாயக்க, லலித் அத்துலத் முதலி, காலஞ்சென்ற  ஜனாதிபதி ரணசிங்ஹ பிரமதாஸ ஆகியோடும் சரி  இந்த மொகிதீன் பிச்சைக்கு First Name Terms அதாவது   பெயர் சொல்ல அழைக்கும் நெருக்கம் இருந்திருக்கிறது என்பது ஒரு புறம் இருக்கட்டும் இந்த நால்வரும் படுகொலை செய்யப்பட்ட தருணத்தில் அவர்களுடன் உடனிருந்து மயிரிழையில் உயிர் தப்பியவர் என்றால் ஒரு சாமானியராகக் காணப்படும் அதி முக்கியத்துவம் மிக்கவர் என்று சொன்னால் என்ன பிழை இருக்க முடியும்?

அடுத்த உள்ளூராட்சித் தேர்தலில்  மொகிதீன் பிச்சைக்கு விகிதாசாரப் பட்டியல் மூலம் பிரதிநிதித்துவம் வழங்கப்பட உள்ளதாக எனக்கு எட்டிய ‌தகவலின் உண்மை நிலையை அறிந்து வரத்தான்  அவரை அவரது இல்லத்தில் போய் அந்த முன்னிரவு நேரத்தில் சந்தித்தேன்.

ஒரு பெரிய அமைச்சரின் வீட்டில்  இருப்பது போல படித்தவர்கள், படிக்காதவர்கள் என ஒரு இளைஞர் பட்டாளம் அவரைச் சூழ்ந்திருந்தது. “இவருமா…..” என்று ஆச்சரியப்படத் தக்க ஒரு மிக முக்கியஸ்தரின் முகங் கூட அங்கு தெரிந்தது. வீட்டின் முன் புற சுவரில் 4×4 அளவிலான புகைப்பட காட்சிப் பலகை  தொங்கியது.  அதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த படங்கள் ஒன்று கூட சிங்கள மொழியில் சிலேடையாகச் சொல்லப்படுவது போல “ஆவாட்ட……கியாட்ட…” படங்கள் இல்லை.  அனைத்தும் பெரிய பெரிய மனிதர்களுடன் மொகிதீன் பிச்சை  நெருக்கமாக, மிக நெருக்கமாக, அனேகமாக தோழோடு தோழ் உரச நிற்கும் படங்கள் தான்.   யார்தான் இல்லை.  ஒரு ஆபிரிக்க நாட்டு  VIP ஒருவருடன் கூட நிற்பதைக் காண முடிந்தது.

நகர சபைக்கு பட்டியல் நியமணம் பற்றிக் கேட்டேன்.  அடக்கமாக, மிக அடக்கமாக பதில் சொன்னார்.  “ …..காக்கா  எனக்கு அதுலெல்லாம் ஆசை இல்லை.   எனது பெயரை  நிரோஷன் பெர்னாந்து,  ஹெக்டர் அப்புஹாமி,  நிஷாந்த சிசிர குமார, ‌‌ போன்றவர்கள் கட்சியின் தலைமைத்துவத்துக்கு  சிபாரிசு செய்துள்ளதாகக் கேள்விப்பட்டேன்.   “நாம  நாமவா இருந்து மக்களுக்கு  ஏண்டியதை செய்யத்தான் ஆசை” இப்படிச் சொன்னார்.

மொகிதீன் பிச்சையின்  பூர்வீகம் கடயாமோட்டைப் பக்கமாக இருந்து தொடங்குகிறது.  என்றாலும் கூட மொகிதீன் பிச்சை பிறந்தது முதல் புத்தளம் நகர் தான் அவரை வளர்த்து ஆளாக்கியுள்ளது.   குறிப்பாக  இருபத்தாறு வருடங்கள்  நகர முக்கியஸ்தர்  முஸீன் காக்கா குடும்பம் தன்னை அன்போடு பராமரித்ததையும்,   மூஸீன் காக்கா, ஹபீல் டாக்கர் ஆகியோரின் தாயார் தனக்கு  சமைத்துப் போட்டதையும்  அன்போடு நினைவு கூருகிறார்.

மொகிதீன் பிச்சையின் வீட்டு முன்புறத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த  படங்களில் ஒரு வெளிநாட்டு ராஜ தந்திரி ஒருவருடன் அவர் நிற்பதை அவதானித்தேன்.  அந்த ராஜ தந்திரியின் உடை அவர் ஒரு ஆபிரிக்கக நாட்டவர் எனக் காட்டியது.  அது பற்றி விசாரித்தலில் அவர் உலக இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதி எனச் சொல்லிவிட்டு இலங்கை இஸ்லாமிய மையத்தின் உறுப்பினராக தான் செயற்படுவதாயும் சொன்னார்.

நிறைய நிறையவே அழைப்பிதழ்கள், சஞ்சிகைகள் எல்லாம் ஒரு மூலையில் கிடந்த புத்தக ராக்கையில் இருந்தன. தனது உதவியாளரைக் கொண்டு அவ‌ற்றில் சிலதை எடுத்து எனக்குக் காட்டினார்.  அதைப் பார்த்போது மொகிதீன் பிச்சை பற்றிய எனது முன்னைய நிலைப்பாடு கொஞ்சம் ஆட்டம் கண்டது.   உண்மையிலேயே  பேசப்பட வேண்டியவர்தான் என்ற முடிவுக்குத்தான் என்னால் வர முடிந்தது.  அப்படி என்றால்   விகிதாசாரப் பட்டியல் மூலமாகத்தானும் அல்லது வாக்காளர்களின்  தெரிவின் மூலமாகத் தானும் நகர சபையில் பிரதிநிதித்துவம் செய்ய மிகப் பாக்கியதையும், யோக்கியதையும்  மொகிதீன் பிச்சைக்கு இருப்பதை உணர முடிந்தது.

நான் அவ‌ரைச் சந்தித்தபோது  அவரை சூழ்ந்திருந்த இளைஞர் பட்டாளத்தையும், அந்தத் தருணத்தில் அவர்கள் காரசாரமாக  உரையடிக் கொண்டிருந்த விடயங்களையும் பார்க்கும்போது  தேர்தல் களத்தில்  குதித்தால் அவரது வெற்றி உறுதி செய்யப்படும் என்பது எனது அபிப்பிராயம்.

பட்டியல் மூலம் பதவி வழங்கப்பட்டால் அதை அவர் ஏற்பாரா அல்லது நிராகரிப்பாரா என்பது காலம் தீர்மானிக்க வேண்டிய ஒன்று.  ஆனாலும் காலா காலமாக நாம் இந்த நகரத்தில் பார்த்துவந்துள்ள நகர சபை பிரதிநிதிகளுடன்  ஒப்பிட்டு நோக்கினால்  திறமையான ஒரு உள்ளூராட்சி உறுப்பினராக இந்த நகருக்கு அவரால் சேவை செய்ய முடியும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All