Puttalam Online
politics

ஹக்கீம் தலைமையில் 34 எம்பிக்களுக்கு அடிபணிந்த ரணிலும், மாகாணசபை திருத்தச்சட்டமும்

முகம்மத் இக்பால் – சாய்ந்தமருது

 நாடு முழுக்க இருபதாவது திருத்தச்சட்டம் பற்றி பேசிக்கொண்டிருக்கையில், அரசாங்கமானது திருட்டுத்தனமாக முஸ்லிம்களுக்கு ஆபத்துக்கள் நிறைந்த மாகாணசபை திருத்தச் சட்டத்தினை சத்தமின்றி நேற்று பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் நிறைவேற்ற முற்பட்டது.

இருபதாவது திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றுவதில் அரசாங்கம் தோல்வி கண்டது. அதனை சமாளிக்கும் பொருட்டு அவசரமாக இந்த சட்டத்தினை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்ததனால், இந்த இரு சட்டங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை அறிவதில் மக்களுக்கு குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கமானது மக்களை குழப்புவதில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாது, சிறுபான்மை சமூகங்களின் பேரம் பேசும் அரசியல் சக்தியை அழித்து ஒழிப்பதில் சத்தமின்றி காய்நகர்த்துகின்றது.

நேற்று நிறைவேற்றப்பட்ட மாகானசபை திருத்த சட்டமானது பெண்களின் பங்களிப்பு முப்பது வீதமும், தொகுதிவாரி மற்றும் விகிதாசார கலப்பு தேர்தல் முறைமையை அறிமுகப் படுத்துவதுமாகும். இதில் இரட்டை வாக்குகள் முறைமையை அறிமுகப்படுத்தி இருந்தால் முஸ்லிம்களுக்கு அதிக சாதகம் இருந்திருக்கும்.

ஒற்றை வாக்குகள் மூலம் கலப்பு தேர்தல் முறையானது கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை பாதிக்காது. ஆனால் கிழக்குக்கு வெளியே சிதறிக்கிடக்கும் முஸ்லிம்களின் பிரதிநித்துவத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும்.

நேற்று இந்த சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்ததும், இதனால் முஸ்லிம்களுக்குள்ள ஆபத்தினை அறிந்துகொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள், அமைச்சர் மனோ கணேசன், தமிழ் தேசிய கூட்டமைப்பு, அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோர் அடங்கலாக 34 பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக்கொண்டு பிரதமர் ரணிலுடன் மிகவும் காரசாரமான முறையில் வாதிட்டார்.

சாதாரணமாக மற்றவர்களின் பேச்சுக்களை கவனயீனமாக செவி மடுக்கும் ரணில் விக்ரமசிங்க அவர்கள், நேற்று அமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையில் 34 பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றாக எதிர்கொண்டதும், செய்வதறியாது அடிபணிந்தார்.

சுமார் நாலு தொடக்கம் ஐந்து மணித்தியாலங்கள் வரைக்குமான போராட்டத்தின் இறுதியில் முஸ்லிம் மக்களுக்கான பாரிய சதி ஒன்று தடுக்கப்பட்டது. அதாவது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் திருத்தங்களை எழுத்து மூலமாக ஏற்றுக்கொண்டு சமர்ப்பிக்கப்பட்ட பின்பே பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் இந்த மாகாணசபைகள் திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதாக இருந்தால், அதனை மீண்டும் பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை பெற்றே அமுல் படுத்த வேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

எனவே சிறுபான்மை சமூகங்களின் ஒற்றுமையின் பலம் நேற்று உணரப்பட்டது. நாங்கள் பிரிந்து கிடப்பதுதான் பேரினவாத சிங்கள அரசுக்கு சாதகமாகும். நாங்கள் பிரிந்து செயல்படுவதனையே அவர்கள் விரும்புகின்றார்கள். என்ற யதார்த்தத்தினை நாங்கள் புரிந்துகொண்டு எங்களுக்கிடையில் உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து நாங்கள் ஒன்றுபடுவோம்.


One thought on “ஹக்கீம் தலைமையில் 34 எம்பிக்களுக்கு அடிபணிந்த ரணிலும், மாகாணசபை திருத்தச்சட்டமும்

  1. Mohamed SR Nisthar says:

    ஆமாங்க. ரணில் என்ன ரணில் இவரு உலகத்தையே அடிபணிய வைக்கும் வல்லமை கொண்டவர். அவர் கட்சியோ குர்-ஆன், சுன்னா அடிப்படையிலான யாப்பைப் கொண்டதால் அல்லாஹுவால் பாதுகாக்கப்படும் கடசி. இவர் கூடிய சீக்கிரம் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய , ஜனநாயகக, சோஷலிச குடியரை உருவாக்குவார். நீங்கள் மாஷா அல்லா சொல்ல தயாராகுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All