Puttalam Online
art-culture

கந்த ஷஷ்டி விரதம்

  • 10 October 2017
  • 345 views

கந்தனுக்கு உகந்த விரதங்கள் மூன்று செவ்வாய்க்கிழமை வருவது வார விரதம் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தில் வருவது நட்சத்திர விரதம்.ஐப்பசி மாத சுக்கில பட்ச திதியில் வருவது ஷஷ்டி விரதம்.கந்த ஷஷ்டி விரதம் மிகவும் சிறப்புடையதாகவும் இந்து மக்களால் போற்றி பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும் ஓர் விரதமாகும்.ஐப்பசி மாத பூர்வபட்ச அதாவது அமாவாசைக்கு அடுத்த நாளாகிய பிரதமை தொடக்கம் ஷஷ்டி ஈறாகவுள்ள ஆறு நாட்களும் அனுஷ்டிக்கப்படுவது கந்த ஷஷ்டி விரதமாகும்.

சரியான விதிப்படி இவ்விரதத்தை மேற்கொள்வோர் ஆலயம் சென்று தர்ப்பை அணிந்து காப்புக்கட்டி இவ்விரதத்தைப் பிடிக்கத் தொடங்க வேண்டும்.இவ்விரத காலங்களில் முருகப் பெருமானின் புகழை எடுத்துக் கூறும் நூல்களான கந்தர் அலங்காரம் கந்தர் அனுபூதி கந்தர் கலி வெண்பா திருப்புகழ் திருமுருகாற்றுப்படை கந்த ஷஷ்டி கவஷம் போன்ற நூல்களைப் பாராயணம் செய்தல் வேண்டும்.

மாலையில் தீபாராதனை முடிவில் வழங்கப்படும் சர்க்கரை இளநீர் தேசிக்காய் முதலியன கலந்து தயாரிக்கப்படும் பானகத்தை மட்டும் அருந்தி விரதமிருக்க வேண்டும்.

இவ்விரதத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க இயலாதவர்கள் ஐந்து நாட்களும் இரவில் பால் பழம் உண்டு ஆறாவது நாள் உபவாசம் இருக்கலாம்.அதுவும் இயலாதவர்கள் பகல் ஒரு பொழுது அன்னமும் ஆறாவது நாள் உபவாசம் இருந்து இரவு பால் பழம் உண்டு மறுநாள் காலை பாரணை செய்யலாம்.

கலியுகக் கடவுளாகிய கந்தப் பெருமான் வேண்டுவார் வேண்டுவன கொடுப்பவன்.அவனை ஆறு நாட்களும் உள்ளன்போடு வழிபட்டு சூரசங்காரம் முடிந்து விரதத்தை முடித்தவுடன் காப்பை அவிழ்த்துத் தர்ப்பையுடன் தட்சணையோடு கோயில் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆறாம் நாள் மாலை நடைபெறுவது சூரசங்காரம்.பிரம்மதேவனின் புதல்வனான காசிபனுக்கும் மாயைக்கும் சூரபன்மன் சிங்கமுகன் தாரகன் என்பவர்களும் அசமுகி என்னும் மகளும் பிறந்தனர்.தாயின் சொற்படி சிவனை நினைத்து தவமிருந்து 1008 அண்டங்களையும் 108யுகங்கள் ஆண்டு வந்தனர்.உடல் அழிவின்றி இருக்கின்ற வரத்தைப் பெற்ற மமதையில் தேவர்களையும் தவசிரேஷ்டர்களையும் துன்புறுத்தி வந்தனர்.இதனை ஒரு முடிவுக்குக் கொண்டுவர சிவபெருமான் எண்ணினார்.தனது நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை வெளியேற்றினார்.

அவை சரவணப் பொய்கையில் விடப்பட்டன.கார்த்திகைப் பெண்கள் அறுவரும் குழந்தைகளை வளர்த்தனர்.

பரம்பொருளின் ஆறு குணங்களே முருகனின் ஆறுமுகங்கள்.அன்னை அக்குழந்தைகளை ஒரு சேர அணைத்த பொழுது பன்னிரு கைகளும் ஆறுமுகங் கொண்ட ஆறுமுகக் கடவுளாக கந்தன் தோன்றினான்.
அருவமும் உருவுமாகி
அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனி யாகக்
கருணை கூர் முகங்கள் ஆறுங்
கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒரு திருமுருகன் வந்தாங்கு
உதித்தனன் உலகம் உய்ய
“எல்லாம் வல்ல இறைவனே முருகனாக வந்து தோன்றியவா”;  என்று கச்சியப்பர் கூறுகின்றார்.முருகப் பெருமான் தேவர்களை துன்புறுத்தாது விட்டு விடும்படி வீரபாகு தேவரை சூரபன்மனிடம் தூது அனுப்பினார்.ஆனால் சூரன் கந்தனைச் சிறுவன் என இகழ்ந்து சொல்லி அனுப்பினான்.

முருகப் பெருமான் போர் புரியப் புறப்பட்டார்.தேமரம் கொடி வில் வாள் குலிசம் அம்பு அங்குசம் மணி தாமரை தண்டம் மழு ஆகிய படைக்கலங்களையும் தாயாகிய பார்வதி கொடுத்த சக்தி வேலையும் எடுத்துக் கொண்டு பதினொரு உருத்திரரையும் நவ வீரரையும் தம்மோடு அழைத்துக் கொண்டு போர்க்களம் சென்றார்.போர்க்களத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானை தாரகன் கண்குளிரக் கண்டான்.இதனைக் கச்சியப்பர் ,இ
முழுமதி யன்ன ஆறு
முகங்களும் முந் நான்காகும்
விழிகளின் அருளும் வேலும்
வேறுள படையின் சீரும்
அழகிய கரமீர் ஆறும்
அணி மணித்தண்டை ஆர்க்கும்
செழு மலர் அடியும் கண்டான்
அவன் தவம் செப்பற் பாற்றோ.
என்று பாடுகின்றார்.வட மொழிக் கந்தபுராணத்துச் சங்கர சங்கிதையில் சிவரகசிய காண்டத்தில் வரும் ஆறு காண்டங்களை மொழி பெயர்த்து பெருங்காப்பிய நடை தழுவி தமிழிலே பாடப்பட்டது.இந்த கந்த புராணத்தைப் பாடியவர் காஞ்சிக் குமரக் கோட்டத்தில் பூசகராக இருந்த கச்சியப்ப சிவாச்சாரியார் என்பவர்.இறைவனாகிய முருகனே “திகடசக்கர”என்று அடியெடுத்துக் கொடுத்த பெருமை இந்நூலுக்கு உண்டு.திகடசக்கரம் என்ற சொற் புணர்ச்சிக்கு முருகப் பெருமானே புலவராக வந்து வீரசோழியம் என்ற இலக்கண நூலை சான்று காட்டிய திவ்விய நூல் கந்த புராணம் இந்நூல் உற்பத்தி காண்டம் அசுரகாண்டம் மகேந்திர காண்டம் யுத்த காண்டம் தேவ காண்டம் தட்ச காண்டம் என ஆறு காண்டங்களை உடையது.இதனுள் பத்தாயிரத்து முந்நூற்று நாற்பத்தாறு (10346)விருத்தப்பாக்கள் உண்டு.

கந்தப் பெருமானின் அவதார மகிமையை விபரித்து பதினெண் புராணங்களில் ஒன்றாக விளங்குகின்றது.இதில் வருகின்ற யுத்த காண்டப் பகுதியே சூரசங்காரம்.தாரகன் முருகனின் திவ்விய தோற்றத்தைப் பார்த்தாலும் அவனது ஆவணம் அவன் கண்ணை மறைத்து போர் செய்யத் தூண்டியது.முருகன் ஞான சக்தியாகிய வேலாயுதத்தால் தாரகா சுரனையும் கிரௌஞ்ச மலையையும் அழித்தான்.தாரகன் மனைவி அசுரி மகன் அசுரேந்திரன் அழுது புலம்பினர் சூரன் அடங்கா கோபங்கொண்டு ஆர்ப்பரித்து எழுந்து போரிட்டான்.

ஐந்து நாட் போரில் முருகப்பெருமான் சிங்க முகாசுரனையும் ஏனைய அசுரர்களையும் அழித்தார்.இறுதியில் ஆறாம் நாள் கடலில் மரமாக உருமாறி நின்ற சூரபத்மனை வேலினால் இரண்டாகப் பிளந்தார்.சூரனின் அகந்தையும் ஆணவமும் அழிந்தது.அவன் உடலில் ஒரு பகுதி மயிலாகியது.மயிலைத் தனது வாகனமாக்கினார் முருகப் பெருமான்.மற்றப் பகுதி சேவலாகியது.சேவலைக் கொடியாக ஏற்று ஆட்கொண்டார்.

சூரனை ஆட்கொண்டது போலவே சிங்கமுகன் தாரகன் என்போரின் ஆணவம் அழிக்கப்பட்டு அவர்கள் முறையே அம்பிகையினதும் ஐயனாரினதும் வாகனமாக விளங்கினர்.ஒவ்வொருவரது உள்ளத்திலும் எழுகின்ற காமம் குரோதம் உலோபம் மதம் மோகம் மாச்சரியம் ஆகிய ஆறு உட்பகைகளையும் வென்று இறைவனை அடைய வேண்டும் என்பதே இவ்விரத தாற்பரியம்.மும்மலங்களே அசுரர்கள்.அசுரர்களின் அசுர இயல்பை ஞானமாகிய வேலினால் அழித்து ஆட்கொண்ட நிகழ்வே சூரசங்காரம் பிரபஞ்ச வாழ்வு ஒரு போராட்டம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் அசுர குணங்களும் தேவ குணங்களும் மாறி மாறி எழுந்து எம்மை அலைக்கழிக்கின்றன.

அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞ்ஞானத்தைத் தரும் விரதமே கந்த ஷஷ்டி விரதமாகும்.சூரனுடன் போர் புரிந்த இடம் திருச்செந்தூர் எனக் கூறுவர்.கந்த ஷஷ்டி விரதம் தொடர்ந்து ஆறு வருடங்கள் அனுஷ்டிக்க வேண்டும்.இதனால் கந்த பெருமானின் கடாட்சத்தையும் கருணையையும் பெற விரும்புபவர்கள் இவ்விரதத்தைக் கட்டாயம் கைக் கொள்வர்.சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி.ஷஷ்டியில் விரதமிருந்தால் அகப்பை என்னும் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்று வாரியார் கூறுவார்.

நதிகளில் புனிதமானது கங்கை.மரங்களில் சிறந்தது கற்பகம் மலைகளில் சிறந்தது கைலைமலை மலர்களில் சிறந்தது தாமரை பசுக்களில் சிறந்தது காமதேனு விரதங்களில் சிறந்தது கந்த ஷஷ்டி என ஆன்றோர் கூறுவர்.முருகப் பெருமான் மும்மூர்த்திகளின் அடக்கம் முகுந்தன் ருத்ரன் கமலோத்பவன் என்பவற்றின் முதல் எழுத்துக்கள் மு10ரு10க எனக் கொண்டு முருகன் ஆயிற்று. ஷஷ்டி விரதமிருந்து முருகனிடம் வேண்டிக் கொண்டால் உடன் வரம் தருபவர் முருகன்.முருகன் அருள் பெற்றவர்கள் பலர்.

அகத்தியர் ஒளவையார் நக்கீரர் அருணகிரிநாதர் கச்சியப்பர் இராமலிங்கசுவாமிகள் முருகம்மையார் பாம்பின்;சுவாமிகள் குமரகுருபர சுவாமிகள்.வேலுண்டு வினை தீர்க்க மயிலுண்டு எனைக்காக்க என்று முருக பக்தர்கள் பாடுவார்கள்.சேவற் கொடி பிரணவ தத்துவத்தை விளக்குகின்றது.

இரு புறமும் வீற்றிருக்கும் தெய்வானை வள்ளியம்மை இச்சா சக்தியும் கிரியா சக்தியும் எனக் கூறுவர். கையிலிருக்கும் வேல் ஞான சக்தி.ஜீவன்மாவைப் பீடித்திருக்கும் மும்மல நீக்கமே சூரசங்காரம்.ஆணவம் சூரபன்மன் கன்மம் சிங்கமுகன் மாயை தாரகன் என்ற மும்மலர்களும் பரம் பொருளால் அழிக்கப்பட்டு ஆன்மா முத்தியடைதலே இதன் கருத்தாகும்.

கந்த புராணத்தில் சைவ சித்தாந்த உண்மைகள் உருவகப்படுத்தப்பட்டுள்ளன. குமரக் கடவுளின் மூர்த்தங்கள் குமார தந்திரம் என்னும் வடமொழி ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது.சேயோன் மேய மைவரை உலகம்”என்கின்றது தொல்காப்பியம்.மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி.முருகன் குறிஞ்சிக் குமரன் அழகன்.என்றோ ஒரு நாள் அழியும் உடம்பில் சூட்சுமமாக இருக்கும் ஆன்மாவுக்கு கவசமாக விளங்குவதே கந்த ஷஷ்டி கவஷம்.இதனை தேவராய சுவாமிகள் பாடியருளினார்.இதன் காப்புச் செய்யுள்.
‘‘துதிப்போர்க்கு வல்லினை போம் துன்பம் போம்
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்து
கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும்
நிமலனருள் கந்த ஷஷ்டி கவசந்தனை’’

  (சாமஸ்ரீ-க.மகாதேவன்-உடப்பூர்)

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All