Puttalam Online
other-news

கரையோர மாவட்டம், தென் கிழக்கு அலகு சாத்தியமாகுமா?

  • 10 October 2017
  • 249 views

அமைச்சர் ஹக்கீமிடம் வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றி ஏதாவது கேட்டுவிட்டால் அது சாத்தியமற்ற ஒன்று என கூறியே அனைவரையும் தனது சாணக்கியத்தால் அடக்க முனைவார். இதில் அவர் முன் வைக்கும் பிரதானமான விடயம் “ இதற்கு பெரும்பான்மையின மக்கள் ஆதரவளிப்பார்களா?” என்பதாகும். 1987ம் ஆண்டு வடக்கையும் கிழக்கையும் பெரும் பான்மையின பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இணைத்தவர்களுக்கு இன்று இணைப்பதென்பது இயலாத காரியமாக கூறக்கூடியதல்ல.

சரி, தமிழர்கள் கோரும் வடக்கு மற்றும் கிழக்கை இணைத்தல் எனும் விடயத்துக்கும் முஸ்லிம்கள் கோரும் கரையோர மாவட்டம், தென் கிழக்கு அலகு என்பவற்றுக்கும் இடையில் பெரிதான வேறுபாடுகளில்லை. அவர்கள் தமிழர்களை மையப்படுத்திய நிலப் பிரதேசத்தை கோருகிறார்கள். நாம் முஸ்லிம்களை மையப்படுத்திய ஒரு நிலப் பிரதேசத்தை கோருகிறோம். அவ்வளவு தான். இவைகளை உருவாக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையாகும். வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமற்றதென அமைச்சர் ஹக்கீம் கூறுவாராக இருந்தால் தென் கிழக்கு அலகு, கரையோர மாவட்டம் என்பவற்றையும் சாத்தியமற்றதென கூற வேண்டும்.

சாத்தியமற்றது என அறிந்ததால் தான் என்னவோ  அமைச்சர் ஹக்கீம் இவற்றை பெரிதாக தூக்கி பிடிப்பதில்லை. அவர் மாத்திரம் தான் புத்திசாலியல்லவா? அன்று மு.காவின் செயலாளராக இருந்த ஹசனலி அக் கோரிக்கை மரிக்காமல் அறிக்கை விட்டு தூக்கி பிடித்திருந்தார். அவரால் வேறு என்ன செய்ய முடியும்? அப்போதும் அமைச்சர் ஹக்கீம் பெரிதான ஈடுபாடு காட்டவில்லை. ஹசனலி  இன்று தூக்கி வீசப்பட்டதால் அக் கட்சியின் மிக நீண்ட நாள் கோரிக்கையான கரையோர மாவட்டம் இம் முறை இடம்பெற்ற பேராளர் மாநாட்டின் போது நீக்கப்பட்டிருந்தது. அதனை தூக்கிப் பிடித்திருந்தவர் யாரென்று இப்போது புரிகிறதா?

இருந்தாலும் அவர் விட்ட இடத்தை மிக உறுதியோடு பிரதி அமைச்சர் ஹரீஸ் பிடித்துள்ளார். தனது பிரதி அமைச்சையும் அதற்கு பணயம் வைத்துள்ளார். இவர்கள் தான் அமைச்சர் ஹக்கீமுக்கு சவாலாக உள்ளனர். இக் கோரிக்கையை அமைச்சர் ஹக்கீமால் ஒரு போதும் உறுதியாக தூக்கி பிடிக்க முடியாது. அவரது சிங்கள வாக்கு வங்கியில் அது பெரும் தாக்கத்தை செலுத்தும். அமைச்சர் ஹக்கீமே, முஸ்லிம்களின் உரிமைகளை நீர் பெற்றுத் தருவாயாக இருந்தால் உன்னை முஸ்லிம் சமூகம் பாராளுமன்றம் அனுப்புவது கடமை. அது கிழக்கில் உன்னை போட்டியிடச் செய்தாவது. இதனை சிந்தனையில் வைத்துக் கொள்.

அமைச்சர் ஹக்கீம் கரையோர மாவட்டம் பற்றியோ தென் கிழக்கு அலகு  பற்றியோ கதைக்க மாட்டார். அது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விருப்பமில்லை. அதாவது தமிழ் புலம்பெயர் அமைப்புக்களுக்கு விருப்பமில்லை. அவர்கள் நினைத்துள்ள  தமிழீழத்தில் பங்கு கேட்கும் விடயம் தான் இவைகள். அப்படி இருக்க எப்படி கதைத்திட முடியும். என்ன?  என்ன? டயஸ்போராவுக்கு விரும்பமில்லை என்றால் இவருக்கென்ன என்ற வினாவில் அதற்கான விடை உள்ளது.

இருந்த போதிலும் அண்மையில் கரையோர மாவட்டம் தொடர்பில் இடைக்கால அறிக்கைக்கு, தான் யோசனை முன் வைத்தும் அதனை அக் குழுவினர் சேர்க்கவில்லை என பாராளுமன்றத்தில் மிக கடுந் தொனியில் அமைச்சர் ஹக்கீம் பேசியிருந்தார். இது முக நூலில் பணம் செலுத்தப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுமிருந்தது. மு.காவின் ஆதரவாளர்கள், தங்களது தலைவர் வழங்கியுள்ளார். இவர்கள் தான் வேண்டுமென சேர்க்கவில்லை என மனதை ஆற்றுப்படுத்தி கொள்ள ஏதுவாக அமைந்திருக்கும். அமைச்சர் றிஷாதின் யோசனையில் அவ் விடயம் உள்ளடக்கப்பட்டு இருந்ததால் அது தொடர்பில் மு.காவின் போராளிகளை ஆற்றுப்படுத்த அமைச்சர் ஹக்கீம் ஏதாவது செய்தாகவே வேண்டும்.

என்னடா? பேசினாலும் குற்றம் பேசாவிட்டாலும் குற்றம் என நீங்கள் கேட்பது விளங்குகிறது. இடைக்கால அறிக்கையில் கரையோர மாவட்டம் உள்ளடக்கப்படாதது தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் யாரிடம் பதில் கேட்கின்றார் என எனக்கு விளங்கவில்லை. அவ் வழிப்படுத்தல் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் தான் இவர். இவர் அதன் உள்ளடக்கம் தொடர்பான ஏனையோரின்  வினாக்களுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டவர். அவர் வினா எழுப்புவதை பார்த்து சிரிப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. நீங்களும் அக் குழுவின் உறுப்பினர் என யாராவது கேட்டிருந்தால் அமைச்சர் ஹக்கீம் அவ்விடத்தில் அம்மணமாகி இருப்பார்.

இப்போது ஒரு விடயத்தை அறிந்து கொள்ளலாம். கரையோர மாவட்டம் அமைச்சர் ஹக்கீமின் கொள்கையில் ஒன்று என்பதாகும் (அவர் நிர்பந்தத்தால் பேசியதை வைத்து). இதனை எப்படி மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டு அமைச்சர் ஹக்கீம் வெற்றிகொள்ளப் போகிறார்? அது சாத்தியமா? பெரும்பான்மையின மக்கள் ஆதரிப்பார்களா? இப்படித் தானே அமைச்சர் ஹக்கீம் வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றிக் கேட்டால் சாணக்கியமாய் தப்பிக்கின்றார். நன்கு சிந்திப்போர்  இதில் தெளிவை பெற்றுக்கொள்ள முடியும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுத்து வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றால் கரையோர மாவட்டமும் சாத்தியமில்லை தான். அமைச்சர் ஹக்கீம் கூறினால் அது சாத்தியமாகிடுமா? சாத்தியமாகும். அவர் மாத்திரம் தான் சாணக்கியனல்லவா? இங்கு அமைச்சர் ஹக்கீம் கரையோர மாவட்டம் சாத்தியமல்ல என்ற விடயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும்.

அதனை வெளிப்படையாக அவரால் கூற முடியாது. கடந்த மாகாண சபைத் தேர்தலின் பின்னர்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் இணைந்து ஆட்சியமைத்த போது கரையோர மாவட்டத்தை முன்னாள் ஜனாதிபதி தருவதாக ஒப்புக்கொண்டதாக மு.காவினர் பிரச்சாரம் செய்திருந்தனர். இவ்வாறு ஒப்பந்தம் செய்ததாக மு.காவின் செயலாளர் ஹசனலி அந் நேரத்தில் விட்ட பல அறிக்கைகள் உள்ளன. அவ் ஒப்பந்தத்தின் படி அவர்கள் பெற்றுக்கொண்டது முதலமைச்சரை மாத்திரமாகும். அதனையே பிரதானமாக பிடித்திருந்தார்கள். கரையோர மாவட்டத்தை விட முதலமைச்சே அவர்களுக்கு பெரிது. இங்கு நான் கூற வரும் விடயம் மு.கா கரையோர மாவட்டத்தை வைத்து முஸ்லிம்களிடம் அரசியல் செய்துள்ளது என்பதாகும். இது சாத்தியமல்ல என கூறினால் இதுவரை காலமும் மு.கா மக்களை ஏமாற்றி அரசியல் செய்ததாக பொருள்படும்.

கரையோர மாவட்டம் சாத்தியம் என மு.காவின் தலைவர் ஏற்றுக்கொள்வாராக இருந்தால் வடக்கு, கிழக்கு இணைப்பும் சாத்தியமென ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லாது போனால் சாத்தியமல்ல என அறிந்து கொண்டு முஸ்லிம்களை ஏமாற்றும் அரசியலை மு.கா மேற்கொள்வதாக கூறலாம். அமைச்சர் என்ன சொல்லப் போகிறார்? எது சொன்னாலும் அவரது தலையில் அவரே மண்ணை அள்ளிப் போடுவதாக அமையும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All