Puttalam Online
star-person

உப்பு விளையும் இம்மண்ணில் சுவையான குடிநீர் வழங்கும் அமீஸ் என்னும் “சசி”

Newton Isaac

“கைத் தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல்
இருப்பதும் உனக்கு சரியாமோ…..”

எத்தொழில் எதுவும் தெரியாமல் இருப்பது சரி இல்லைதான். அது இந்த அமீஸ் என்னும் “சசிக்கும்” தெரியும்தான். அதனால்தான் தான் நகர சபையில் செய்யும் தொழிலுாளி தொழிலுக்கு மேலதிகமாக இந்த தண்ணீர் வியாபாரதைதையும் செய்து வருகிறார். அப்படிச் செய்யாவிட்டால் மூன்று பிள்ளைகளில் தகப்பனால் எப்படி வாழ்வுச் சுமையை சமாளிப்பது. இது ஒன்றும் இந்த சசிக்கு மாத்திரம் அல்ல. பெரிய பெரிய நாடுகளிலும் கூட சங்கதி அதுதான்.

உலக பிரசித்திபெற்ற ஆங்கில நாவலாசிரியர் “சிட்ணி செல்டன்” கூட ஒரு பிரசித்திபெற்ற நாவலாசிரியராக ஆகு முன்னர் பகுதி நேர ஆங்கில ஆசிரியர், பகுதி நேரடி “டோபி” இது ஒன்றும் கட்டுக் கதையல்ல அவரது வாழ்கை வரலாற்றில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்.

உப்பு விளையும் இந்த புத்தளம் மண்ணிலே சுவையான குடிநீரை பெற்றுக் கொள்வது எப்படி? எனவே இந்த சசி போன்றவர்கள் சிரமம்பட்டு வெகு தூரம் சென்று சைக்கிள் வண்டிகளில் கொண்டு வந்து ஐம்பது ரூபாவுக்கு விற்கும் தண்ணீரை அல்லது அது கூட Mega Business ஆகிப் போய்விட்ட இந்த நாட்களில் நமது வீட்டு வாசலுக்குக் சிறிய ரக ட்ரக் வண்டிகளில் கொண்டு வந்து வழங்கப்படும் தன்ணீரில்தான் தங்கி இருக்க வேண்டி இருக்கிறது.

கொஞ்சக் காலத்துக்கு முன்னர் மன்னார் விதியில் “மோயா” என்ற தனியார் நிறுவனம் பெரிய அளவில் நகர தண்ணீர் விநியோகத்தை ஆரம்பித்தது. ஆனால் கால ஓட்டத்தில் கீரைக் கடைக்கு எதிர்க் கடைகள் வந்தபோது அந்த மோயா நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. ஆனாலும் நாளுக்கு நாள் பெரிய அளவில் ட்ரக் வாகனங்களில் தண்ணீர் விநியோகம் செய்பவர்களும், கஸ்டப்பட்டு ஏற்றம், இறக்கம், எதிர் காற்று, தள்ளுக் காற்று என்பவற்றுக்கு முகங் கொடுத்து தம்பண்ணி பக்கமாகப் போய் தண்ணிர் எடுத்து வந்து விற்பவர்கள் தொகையும் நாளாந்தம் அதிகரித்துத்தான் போகிறது.

பெரிய அளவில் தண்ணீர் விநியோகம் செய்பவர்கள் வீடுகளில் பெரிய பெரிய கொள் கலன்கள், வடிகட்டும் இயந்தரங்களை வைத்து தண்ணீர் விநியோகம் செய்கிறார்கள். சசி போன்ற சைக்கிள் வியாபாரிகள் அந்தக் கவலைகள் இல்லாமல்தான் தண்ணீரை வழங்குகிறார்கள்.

இப்படி விநியோகிக்கப்படும் தண்ணீரில் கழிவறைக் கழிவுகள் கலந்திருப்பதாக சுகாதார பிரிவினர் குற்றஞ் சொன்னாலும் அதையெல்லாம் பார்த்தால் நகர மக்கள் தண்ணீர் குடித்த பாடுதான். அதுதான் எப்படிப் போனாலும் தண்ணீரைக் கொதிக்க வைத்து பருகும் கெட்ட பழக்கம் கூட நம்மவர்களுக்கு மத்தியில் இல்லை.

சரிதான் அதுதான் அப்படி என்றால் இந்த குடி நீர்விநியோகத்தில் ஈடுபடும் சசி போன்ற சிறிய வியாபாரிகள் அனுபவிக்கும் சிரிமம் பற்றி நாம் யோசிப்பதும் இல்லை. இன்று மாலை சசியை படம் எடுக்கப்போனபோது “ஒரு கேனைக் கொஞ்சம் தூக்கிப் பாருங்களேன்” என்று சொன்னார். தூக்க முயன்றேன். அப்பா ரெம்பப் பாரம். தனது கேன் கொஞ்சம் பெரிசு என்பதால் ஒன்று 24 கிலோ என்று சொன்னார்.

ஒவ்வொன்றும் 24 கிலோ எடை கொண்ட இரண்டு கேன்களில் தண்ணீரை நிரப்பி சிரமம்படப்டுத் தூக்கி சைக்கிளின் பின்னால் வைத்து சைக்கிள் டியுப்பால் கட்டி சில மைல் தூரம் எடுத்த வந்து ஒன்று ஐம்பது ரூபாவுக்கு விற்பது உண்மையிலேயே சிரமமான வியாபாரம்தான். எல்லாமே Survival லுக்காகத்தான்.

ஆனால் இதுவல்ல இங்கு நான் சொல்ல வந்த சமாச்சாரம். இந்த உப்பு மண்ணுக்கு நல்ல தண்னீர் ‌பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்த நாட்களில் இஸ்மாயீல் ஐயா கொண்டு வந்த மீ-ஓயா தண்ணீர் விநியோகத் திட்டத்தை நம்பித்தான் இது வரை இந்த முழு நகரமும் இருந்தது. கிட்டத் தட்ட அந்த நாட்களில் சர்வர் அப்பா நடாத்திய புத்தளம் ட்‌ரான்ஸ் போர்ட் நிறுவனத்தில் பழைய லொறிகளை தள்ளித் தள்ளி ஸ்டாட் செய்வது போல கொஞ்சக் காலம் நகர சபை அந்த தண்ணீர் விநியோகத்தை வைத்திருந்தது. அதன் பின்னர் National Water Supply and Drainage Board ற்கு அந்தத் திட்டத்தை எடுத்துக் கொண்டார்கள். அந்தத் திட்டத்தோடு மல்லுக்கட்டி புத்தளம் மக்களுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

எனவே பரிகாரம் ஒன்றைக் காண, கொஞ்சம் பெரிய அளவிலான பரிகாரம் ஒன்றைக் காண பாயிஸ் நகர பிதாவாக இருந்த நாட்களில் கலா -ஓயா நீர் விநியோகத் திட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்தத் தகவலையும் எத்தனை பேர் உண்மையின் இருட்டடிப்பு என்று சொல்லப் போகிறார்களோ தெரியாது.

நமது எழுத்துக்களின் நோக்கம் வாசிப்போரைத் திருப்திப்படுத்துவது. எனவே குறை காண்போரையும் திருப்திபடுத்த வேண்டிய தேவையும் எமக்கு இருக்கிறதே.

ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டத்தின் மூலம் அமுல் செய்யப்படும் அத்திட்டம் பெரும்பாலும் முடிவ‌டைந்த நிலையில் இருக்கிறது. இன்னும் இரண்டொரு மாதங்களில் கலா-ஒயா நீர் நமது உப்பு மண்ணை வந்தடையும். 24 மணித்தியாள தண்ணீர் விநியோகம் கிடைக்கப்போகிறது என்பது நகருக்கு இனிப்பான செய்திதான்.

பாவம் இந்த தண்ணீர் வியாபாரிகளின் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரப்போகிற‌தே. சமுகத்திடம் எதாவது ஒது மாற்று வழி…?


One thought on “உப்பு விளையும் இம்மண்ணில் சுவையான குடிநீர் வழங்கும் அமீஸ் என்னும் “சசி”

  1. J.S.Hussain says:

    Arumai…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All