Puttalam Online
education

புத்தளம் அப்துல் மஜீத் அக்கடமியில் உயர் டிப்ளோமா பட்டமளிப்பு

  • 18 October 2017
  • 748 views

ரூஸி சனூன்  புத்தளம்

ஷரீஆஹ் மற்றும் பொது கற்கைகளில் உயர் டிப்ளோமா பட்டமளிப்பு என்பன (14) சனிக்கிழமை அன்று புத்தளம் அப்துல் மஜீத் அக்கடமியில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதன்போது அப்துல் மஜீத் அக்கடமியில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறந்துவைக்கப்பட்டதோடு புதிய கற்கைநெறிகளும் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
அக்கடமியின் பணிப்பாளர் அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வுகள் அக்கடமியின் அறங்காவலர் என்.ஏ.எம். முசாதிக் முஹம்மத் அவர்களின் அனுசரணையில் நடந்தேறின.
அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் பிரதம அதிதியாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு நிகழ்வுகளை சிறப்பித்தனர்.
ஷரீஆஹ் மற்றும் பொது கற்கைகளில் உயர் டிப்ளோமா கற்கைநெறியை நிறைவுசெய்துகொண்ட ஏழு ஆலிம்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.
அப்துல் மஜீத் அக்கடமியின் அறங்காவலரும் பிரபல கொடைவள்ளலுமான முசாதிக் முஹம்மத் இந்நிகழ்வில் பொன்னாடை அணிவித்தும் நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.
கூட்டத்தில் உரை நிகழ்த்திய அஷ்-ஷைக் அப்துல் நாஸர், அக்கடமியின் நோக்கங்களை தெளிவுபடுத்தியதோடு அக்கடமி முன்னெடுத்துச் செல்லும் கல்விச் சேவைகள் குறித்தும் விளக்கப்படுத்தினார். உயர் அரபு மொழி, உசூல் அல்-பிக்ஹ், பிக்ஹ் அல்-முஆமலாத், ஆலிம்களுக்கான உளவள டிப்ளோமா போன்ற கற்கைநெறிகளை அவர் அறிமுகம் செய்துவைத்ததோடு முசாதிக் முஹம்மத் அவர்கள் அக்கடமிக்கு வழங்கிவரும் அளப்பரிய கொடை பற்றியும் பிரஸ்தாபித்தார்.
அப்துல் மஜீத் குடும்பத்துடனான குடும்பப் பிணைப்பில் இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் அப்துல் ஹலீம் அக்கடமியின் குறிக்கோள்கள் மற்றும் செயல்பாடுகளை சிலாகித்துப் பேசியதோடு முசாதிக் முஹம்மத் அவர்களின் பல்வேறு பாரிய தர்ம காரியங்களையும் பாராட்டினார்.
கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற நவவி, 2018ஆம் ஆண்டுக்கான தனது பாராளுமன்ற ஒதுக்கீட்டில் அக்கடமி அமைந்துள்ள செம்மாந்திடல் பாதையை அபிவிருத்தி செய்து தருவதாக வாக்களித்தார்.
குழு கசீதஹ் மற்றும் களிகம்பு போன்ற கலாசார நிகழ்ச்சிகள் விழாவை அலங்கரித்தன.
ஈற்றில் மர்ஹூம் என்.எஸ். அப்துல் மஜீத் அவர்களின் பாரியார் திருமதி ஏ.ஜி.எஸ். மர்ஸூனா அவர்களால் தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஆய்வுகூடம் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டதோடு அமைச்சர் அப்துல் ஹலீம் மற்றும் முசாதிக் முஹம்மத் ஆகியோரல் ஆய்வுகூடம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆங்கிலத்தில் திறன் அபிவிருத்தி பாடநெறிக்கு பதிவுசெய்திருந்த 80 மாணவர்கள் பாடநெறியைத் துவங்கும் பொருட்டு தமது பெற்றார் சகிதம் சமுகமளித்திருந்தனர். இம்மாணவர்கள் பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இது சக வாழ்வின் அடையாளமாகும்.
பட்டமளிப்பு, தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு மற்றும் புதிய கற்கைநெறிகள் ஆரம்பம் ஆகிய முப்பெரும் நிகழ்வுகளை சகல சமூகங்களையும் சேர்ந்த பெருந்திரளான மக்கள் ஒன்று குழுமிய ஒரு வைபவத்தில் நடத்தி முடித்தமை அப்துல் மஜீத் அக்கடமிக்கு மறக்க முடியாத சந்தர்ப்பமாகும்.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All