Puttalam Online
other-news

கிரான் சந்தை விவகாரம் -நெருக்கடியை இனவிரிசலாக மாற்றாதீர்- NFGG

  • 2 November 2017
  • 145 views

(ஊடகப் பிரிவு)

மட்டக்களப்பு மாவட்டம் கிரானில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்குத் தடைவிதிக்கும் சுவரொட்டிகள் நேற்று (29.10.2017) ஒட்டப்பட்டிருந்தன. இது அங்கு பதற்ற நிலையையும் இன முறுகலையும் தோற்றுவித்திருந்தது தெரிந்ததே. இதனால் உடனடியாக பொலிஸார் குவிக்கப்பட்டனர். சந்தைகள் இடம் பெறும் மட்டக்களப்பின் ஏனைய சில இடங்களிலும் இது போன்ற விரிசல்களை ஏற்படுத்த சில தீயசக்திகளினால் முயற்சிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.குறிப்பாக, மட்டக்களப்பு கொக்குவில் பகுதியில் இடம் பெறும் வாராந்த சந்தையிலும் முஸ்லிம் சமூகத்தினர் வியாபாரம் செய்வதனைத் தடுப்பதற்கான முயற்சிகள் இன்று மேற் கொள்ளப்பட்டன. இருப்பினும், பொலிஸார் மற்றும் அப்பிரதேச தமிழ் மக்களின் தலையீட்டின் காரணமாக தீய சக்திகளின் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

இந்த நெருக்கடியான நிலமையைக் கட்டுப்படுத்தி, இனவிரிசலற்ற சுமுகமான சூழ்நிலையைக் கொண்டு வருமாறு பொதுநலனில் அக்கறை கொண்ட பலரும் வேண்டுகோள் விடுத்தனர். இதில் தீய சக்திகள் சிலரின் அரசியல் உள்நோக்கம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பின்னணியில் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான அவசர சந்திப்பொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக த.தே.கூ.வின் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமானதுரை இராசசிங்கம் அவர்களை, NFGG யின் தேசிய அமைப்பாளர் MBM. பிர்தௌஷ் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். த.தே.கூ.வின் மட்டக்களப்பு காரியாலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், கிரான் சந்தை விரிசலில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் அங்காடி வியாபாரிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கொக்குவில் சந்தைப்பகுதிக்கு நேரில் விஜயம் செய்த NFGG யின் தேசிய அமைப்பாளர் அங்குள்ள நிலைமைகளை நேரில் கேட்டறிந்துகொண்டார்.

எந்தப் பிரச்சினையையும் பேசித் தீர்ப்பதே சிறந்தது. தமிழ்- முஸ்லிம்களிடையே அனாவசியமான பிரச்சினைகளை வளர்ப்பதன் மூலம், திரைமறைவில் இயங்கும் தீய சக்திகளே நன்மையடைவர் எனவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த நிலமையைத் தொடர விட்டால் கிழக்கு மாகாணத்தின் சமூக நல்லிணக்கம் ஆழமாகப் பாதிப்புறும். கடந்த கால கசப்பான அனுபவங்கள் மீண்டும்தலைதூக்காத வண்ணம் மிகுந்த நிதானத்தோடும், விவேகத்தோடும் செயல்பட வேண்டியது நம் அனைவரதும் கூட்டுப் பொறுப்பாகும் என நல்லாட்சிக்கான தேசியமுன்னணி தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All