Puttalam Online
social

உயிர்கொல்லியுடன் ஓர் உரையாடல்

வினா கேட்பவர் :

நீங்கள் யார் என்று கூற முடியுமா ?

விடை கொடுப்பவர் :

சில தினங்களாக வைத்தியசாலைகளில் கொத்து கொத்தாக மக்கள் குவிந்துள்ளனரே அதற்கு பொறுப்பானவள். என்னை பற்றி நான் கூறுவதை விட உரையாடலின் முடிவில் நீங்களே அறிந்து கொள்வீர்கள்.

வினா கேட்பவர்  :

சரி, உங்களின் பெயரையாவது தற்போது கூறுங்கள் ?

விடை கொடுப்பவர்  :

எனது பெயர் ஈடிஸ் ஈஜிப்டை  (Aedes aegypti). எனக்கு மஞ்சள் காய்ச்சல் நுளம்பு என்ற சிறப்பு பெயரும் உண்டு.

வினா கேட்பவர் :

அப்போ நீங்கள் தானா டெங்கு நோயை பரப்புவது??

விடை கொடுப்பவர் :

ஹாஹா, actually, உண்மையை சொல்ல போனால் நான் மட்டும் அல்ல எனது சகோதரியான ஈடிஸ் எல்பொபிக்டஸ் (Aedes albopictus) சேர்ந்து தான் டெங்கு நோயை பரப்பும் பணியை சிறப்பாக செய்கிறோம். எனது சகோதரியை ஆசியன் டைகர் நுளம்பு (Asian tiger mosquito) என்று கூறினால் தான் சிலருக்கு விளங்கும்.

நான் டெங்குவை மட்டும்  அல்ல  ஜிகா (Zika), சிக்குன்குன்யா (chikungunya) மற்றும் மஞ்சள் காய்ச்சல் (yellow fever) போன்றவற்றையும் பரப்புகிறேன். ஆனால் டெங்குவை தான் கூடுதலாக விருப்பத்துடன் செய்து வருகிறேன். அதில் தான் கூடுதலான மரணத்தை காண முடியும்.

வினா கேட்பவர் :

நீங்கள் எந்த எந்த இடங்களில் வாசிக்கிறீர்கள்.??

விடை கொடுப்பவர் :

பூமியின் வெப்ப மண்டல பகுதியில் உள்ள கூடுதலான நாடுகளில் எங்கள் சகோதரிகள் அவர்களின் கைவண்ணத்தை காட்டியவண்ணம் இருக்கிறார்கள். கடந்த சில தசாப்தங்களாக டெங்கு நோயை நாம் மிக விரைவாக உலகில் உள்ள பல நாடுகளில் பரப்பியுள்ளோம். நாங்கள் தூய்மையானவர்கள் சுத்தமான நீர் மற்றும் நிலையான நீரில் தான் வசிப்போம். நீங்கள் எண்ணி பார்க்க முடியாத இடத்தில கூட நாங்கள் வாழ்வோம். கடந்த சில நாட்களுக்கு முன்பாக எனது மச்சிமார்கள் குளிர்சாதன பெட்டியில் கீழ இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவர்களின் திறமையை காட்டி இருக்குறார்கள். இது போன்று வித்தியாசமான யோசனைகளை எங்கள்கிடையே வரவேற்கத்தக்கது. நாங்கள் அவர்களை பாராட்டுகிறோம்.

வினா கேட்பவர் :

நீங்கள் முன்னைய வினாவுக்கான விடையில் எங்கள் சகோதரிகள் என்று கூறி இருந்தீர்கள். அப்படியே என்றால் நீங்கள் மொத்தம் எத்தனை பேர் ??

விடை கொடுப்பவர் :

நாங்கள் மொத்தம் 4 சகோதரிகள். நாங்கள் ஈடிஸ் (Aedes) குடும்பத்தை சேர்ந்தவர்கள். மூத்தவள் நான் ஈடிஸ் ஈஜிப்டை  (Aedes aegypti), அடுத்தது ஈடிஸ் எல்பொபிக்டஸ் (Aedes albopictus) மற்றைய இருவர் முறையே ஈடிஸ் பொலிநெஸியன்ஸிஸ் (aedes polynesiensis), ஈடிஸ் ஸ்கூடேள்ளரிஸ் (Aedes scutellaris). உங்களின் அதிஷ்டம் எனது மற்றைய இரண்டு சகோதரிகளும் இலங்கையில் இல்லை.

வினா கேட்பவர் :

உங்களின் நோக்கம் தான் என்ன ..?

விடை கொடுப்பவர் :

நோயை பரப்பி மனிதர்களுக்கு மரணத்தை பரிசளித்தல்.

வினா கேட்பவர் :

நீங்கள் கருணை காட்டாமல் இப்படி பண்ணுவது உங்கள் மனசாட்சிக்கி நன்றாக இருக்கிறதா ???

விடை கொடுப்பவர் :

யார் கருணை காட்டவில்லை நாங்களா ? தெரியாமல் பேசாதீர்கள். நாங்கள் கருணை காட்டுவதனால் தான் சூரிய உதயத்திற்கு பிறகு கொஞ்ச நேரமும், சூரியன் மறையும் முன் கொஞ்ச நேரமும் கடிக்கிறோம். மேலும் எங்கள் இனத்தில் ஆண்கள் உங்களை கடிக்காமல் இருக்கிறார்கள். மழை காலத்தில் மட்டும் தான் சிறகடித்து பறந்து திரிகிறோம். இது உங்களுக்கு போதாதா ?அதுவும் வேண்டாம் என்றால் நீங்கள் கவனமா இருங்கள்.

சிறுவர்களை முதியவர்களை மற்றும் கர்ப்பிணி பெண்களை கடிக்கும் போது எங்களுக்கும் மனசுக்கு கஷ்டமாக தான் இருக்கும். ஆனால் பாவம் பார்த்தால் நாங்கள் உயிர் வாழ முடியாது.

வினா கேட்பவர் :

அப்போ இரவு முழுவதும் எம்மை தூங்கவிடாமல் காதுல நோயிங்குனு இறைஞ்சிகிட்டு சுத்தி சுத்தி வந்து கடிக்கிறது நீங்க இல்லையை .??

விடை கொடுப்பவர் :

ஹையோ! உங்களுக்கு சொன்னது புரியலையா? அது நாங்கள் இல்லை. எங்கள் குடுப்பம் மாதிரி இலங்கையில் தற்போது 140 வகையான நுளம்பு இனங்கள் இருக்கிறார்கள். அவர்களின் வேலையாக இருக்கும், அநாவசியமாக எங்கள் மீது வீண் பழி போடாதீர்கள்.

வினா கேட்பவர் :

சரி சரி கோவபடாதீர்கள். நான் தெரியாமல் கேட்டுவிட்டேன். இந்தாங்க கொஞ்சம் இரத்தம் குடிங்க.

வினா கேட்பவர்  :

நீங்கள் உங்களின் உடம்பு மற்றும் கால்களில் வரிக்குதிரையை  போல கருப்பு வெள்ளை வரிகளில் பார்பதற்கு அழகாக காட்சியளிகிறீர்கள். அழகு ஆபத்தானது என்பது உங்களை பார்த்து விளங்குகிறது. நீங்கள் அவர்களை கடிக்கும் போது அவர்கள் உங்களை காணுவது இல்லையா .???

விடை கொடுப்பவர் :

உண்மைதான். நாங்கள் நுளம்பு இனத்திலேயே ஒரு தனித்துவமான உடல் அம்சங்களை கொண்டு உள்ளோம். அதுமட்டும் அல்லது ஏனைய நுளம்புகளை விடவும் உருவத்தில் நாங்கள் பெரிது தான்.

நாங்கள் கடிக்கும் போது எப்படியும் ஏனைய நுளம்புகள் கடிக்கும் போது வலிப்பதை விட கூடுதால வலிக்கும். இருந்தும் மக்கள் அதை உணரவில்லை என்றால். ஒன்று அவர்களின் பொடுபோக்கு தனம் அல்லது எங்களில் சாமர்த்தியம் என்று தான் கூறவேண்டும்.

வினா கேட்பவர் :

உங்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி சுருக்கமாக கூற முடியுமா ?

விடை கொடுப்பவர் :

1906 ஆம் ஆண்டில் நாங்கள் உலகத்தில் தோற்றம் பெற்றோம். 1907 ஆம் ஆண்டில் டெங்கு நோயை பரப்பி மஞ்சள் காய்ச்சலிற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தினை பெற்றோம். அன்றில் இருந்து இன்று வரை படி படியாக வளர்ந்து இன்று கம்பீரமாய் நிற்கிறோம்.

எங்கள் வாழ்க்கையானது 4 படிமுறைகளை கொண்டதாகும். அதில் 3 படிமுறைகள் நீரியல் சந்தர்ப்பதிலும் 1 தரைச் சந்தர்ப்பமும் ஆகும். முட்டை, குடம்பி, கூட்டுப்புழு மற்றும் நிறைவுடலி என்பன நாங்கள் கடந்து வந்த படிகள்.

எங்களால் ஒரே தடவையில் 100 – 200 முட்டைகள் இட முடியும். இதே போல் நாங்கள் 3 அல்லது 4 முறை முட்டைகள் இடுவோம். இறப்பதற்கு முன்பாக மொத்தமாக குறைந்தது 300 முட்டைகளாவது இடுவோம். நீருடன் கூடிய கொல்கலன்களில் நீர் மட்டத்திற்கு சற்று மேலே ஈரலிப்பான மேற்பட்டையில் முட்டையினை இடுவதால் அம் முட்டை நீருடன் சேர்கின்ற சந்தர்பம் கூடுதலாக இருக்கும். மழை அல்லது வேறு ஒரு முறையினால் நீர் மோதுகின்ற போது முட்டைகள் வெடித்து எங்கள் பிள்ளைகள் உலகில் கால் எடுத்து வைப்பார்கள், 7 நாட்களில் இளமையாக வளர்ந்து கடமையில் இறங்கிவிடுவார்கள். மழை வந்தால் எங்களுக்கு ஜாலி ஜாலி ஜாலி..

நாங்கள் 14 தொடக்கம் 21 நாட்கள் தான் வாழ்வோம், ஆனால் செய்யும் சாதனைகள் பெரிசு.

வினா கேட்பவர் :

எப்படி டெங்கு நோயை பரப்புகிறீர்கள் என்று கூற முடியுமா ??

விடை கொடுப்பவர் :

இது எங்களின் வெற்றியின் இரகசியம். உங்களுக்காக கொஞ்சம் சொல்கிறேன்.

நாங்கள் ஒருவருக்கு கடிக்கும் போது 4 வகையான அதாவது DENV-1, DENV-2, DENV-3, DENV-4 போன்ற டெங்கு கிருமிகளை அவரின் உடலின் உள்ளே ஒரே கடியில் செலுத்தி விடுவோம்.

உள்ளே சென்ற கிருமிகள் இரத்தத்தில் உள்ள தட்டணுக்களை கொஞ்சம் கொஞ்சமா அழிப்பார்கள். இதனால் டெங்கு நோயின் ஆரம்ப கட்டத்திற்கு இவர்கள் அடிஎடுத்து வைப்பார்கள்.

இவ்வாறு டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவரை கடித்து விட்டு பாதிப்பில்லாதவரை கடிக்கும் போது எங்களால் இலகுவாக டெங்கு காய்ச்சலை பரப்ப முடிகிறது. டெங்கு காய்ச்சல் ஏற்பட்டவருக்கு உடலின் வெப்பம் 104° – 105° டிகிரி பாரன்ஹீட் (Fahrenheit) வரை உயரும். அவருக்கு கொஞ்ச கொஞ்சமாக தலைவலி, தசைவலி, மூட்டுவலி, கண்வலி, வாந்தி, உடலில் அரிப்பு போன்றவை தோன்றும் அதை பார்த்து நாங்கள் ஆனந்தம் கொள்வோம்.

ஒரு நபருக்கு தட்டணுக்களின் (platelets) எண்ணிக்கை 3,00,000 வரை இருக்க வேண்டும். எமது கில்லாடி கிருமிகள் 20,000 இற்கு கீழே தட்டணுக்களை குறைக்கும் போது நுரையீரல், வயிறு, பல் ஈறு சிறுநீர் பாதையிலும் இரத்த கசிவு ஏற்படும். உரியநேரத்தில் உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் மரணம் தான் மிஞ்சும்.

வினா கேட்பவர்  :

உங்களின் இந்த முயற்சிகள் எப்போதும் வெற்றி பெருவதுண்டா ?

விடை கொடுப்பவர்  :

இந்த கேள்விக்கி 50%, 50% என்று தான் கூற முடியும். ஏன் என்றால்,

இவர்களுக்கு காய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமா தான் கூடும். சாதாரண வைரஸ் (virus) நோய் போல இருப்பதால் டெங்கு நோயை உடனடியாக உறுதி செய்ய இயலாது. இது எங்களுக்கு பிளஸ் மார்க்.

ஆனால், 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல்  நீடித்தால் பரிசோதனை செய்யவேண்டும் என்று கூறி பரிசோதனை செய்வார்கள். பரிசோதனையில் டெங்கு தான் என்று கண்டு பிடித்துவிடுவார்கள்.

சிலர் அதிஷ்ட காரர்கள். நோய் ஏற்பட்டு 7 நாட்களுக்குள் சரியாகிடும். என்னாதான் உண்ணுகிரார்களோ தெரியாது. ஆனால் சிலருக்கு மட்டும்தான் டெங்கு கிருமி மிக மோசமான பதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கு டெங்கு காய்ச்சல் அதிகமான பதிப்பை கொடுக்கும்.

எங்களின் கஷ்ட காலம் இந்த டெங்கு நோயானது தண்ணீர், காற்று மூலமாக பரவாது. மேலும் பாதித்தவரின் இருமல் தும்மல் எச்சில் போன்ற வற்றாலும் பரவாது. நாங்கள் தான் ஓடி ஓடி வேலை செய்யவேண்டும்.

வினா கேட்பவர்  :

யானைக்கால், மலேரியா வை ஒழிதது போல உங்களையும் ஒழிக்க மக்கள் மும்முரமாக ஈடுபடுகிறார்கள். இது பற்றி உங்களின் கருது என்ன ?

விடை கொடுப்பவர்  :

ஹஹ்ஹா ஹஹ்ஹ்ஹா… எங்களை முற்றாக ஒழிப்பதா ?? முடியுமா .??

எங்களை கட்டுபடுத்த முடியும் ஆனால் ஒழிக்க முடியாது. .

எங்களின் முட்டைகளுக்கு பாதகமான சூழல் மற்றும் காலநிலை நிலைமைகளினைப் பொறுத்துக்கொண்டு பல மாதங்கள் சாகாமல் வாழ்வதற்குரிய விசேட ஆற்றல் உள்ளது.

மக்கள் எவ்வளவு முயன்றும் எங்கள் பிள்ளைகளின் குடம்பி சந்தர்ப்பம், கூட்டுப்புழு சந்தர்ப்பம் மற்றும் நிறைவுடலி சந்தர்ப்பங்களை அழித்தாலும். முட்டைகள் தேங்கியுள்ள கொல்கலனொன்றில் நீர் விழுந்ததும் முட்டை வெடித்து மீண்டும் எங்கள் பிள்ளைகள் வருவதற்கு ஆற்றல் இருக்கிறது. எங்களுக்கு அதிஷ்டமாக உங்களுக்கு துரதிஷ்டவசமாக கொல்கலன்களில் ஒட்டியுள்ள முட்டைகளை அழிப்பதற்கான விசேடமான ஒரு முறைமை உங்களிடம் இல்லை. இதனால் எங்களை நீங்கள் இல்லாமல் ஒழிப்பது இலகுவான காரியமல்ல.

மேலும், டெங்கு நோய்கென்று இதுவரை தடுப்பு ஊசிகளோ மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை. உங்களின் பாதுகாப்பு உங்களின் கைகளிலே உள்ளது. நீங்கள் அதை ஒழுங்காக செய்யாமல் இருப்பதனால் தான் நாங்கள் இன்றுவரை உயிர் வாழ்கிறோம். அதற்கு நான் உங்களுக்கு நன்றி கூறிகொள்கிறேன்.

வினா கேட்பவர்  :

இதுவரை விளக்கம் கொடுத்த உங்களுக்கு நன்றி, இறுதியாக மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள். ??

விடை கொடுப்பவர்  : 

உங்கள் உயிர் உங்களின் கைகளில் உள்ளது. அதை காப்பதும் எங்களிடம் ஒப்படைப்பதும் உங்களின் விருப்பம். எங்களை சாதரணமாக நினைக்க வேண்டாம். நாங்கள் கொடூரமானவர்கள். இப்போது என்னை உங்களுக்கு புரிந்து இருக்கும். இன்னும் புரியவில்லை என்றால் கடித்ததும் புரியவரும். எங்களின் bucket list இல் சேராமல் இருப்பது உங்களுக்கு நல்லது. விளைவு மோசமாக இருக்கும்.

வினா கேட்பவர்  :

நன்றி ஈடிஸ் ஈஜிப்டை  (Aedes aegypti). செல்லுங்கள் திரும்ப வந்துவிடாதீர்கள்.

இவ்வுரையாடலானது யார்மனதையும் நோகடிப்பதட்காவோ இடப்படவில்லை. மாறாக பந்தி பந்திகளாக விளக்கம் கொடுத்தால் யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். மேலும் முழுமையாக வசிக்க கூடமாட்டார்கள். அதனால் தான் நகைச்சுவை கலந்த உரையாடல் மூலம் டெங்கு பற்றிய ஒரு தெளிவை முன்வைத்துள்ளேன்.

ஆரம்பத்தில் இருந்து டெங்கு பற்றிய விழிப்புணர்வுகள் சுகாதார அமைச்சினாலும் ஏனைய நிருவனகளாலும் தொண்டர் அமைப்புகளாலும் கொடுக்க பட்டு கொண்டே இருக்கின்றன. இருப்பினும் நாங்கள் அதை பொருட்படுத்தாது தான் இருகிறோம்.

டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய வைகையில் எமது சுற்றுப்புற சூழலை வைக்க போய் தான் இன்று எண்ணற்ற நோயாளிகள் வைத்தியசாலையில் அவதியுறுகின்றனர். நாங்கள் செய்யும் தவறால் ஏன் மற்ற நபர்கள் பாதிக்கபடனும். கொஞ்சமாவது யோசிச்சி இருக்கிறோமா??

ஏனையே காலங்களை விட இந்த வருடம் தான் எமது நாட்டில் கூடுதலாக டெங்கு நோயாளிகளும் மரணங்களும் நிகழ்ந்து உள்ளன. ஆனால் நாங்கள் எதையும் பொருட்படுத்தாமல் எங்களின் பொடுபோக்கில் இருக்கிறோம். தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது போல நோயானது எமக்கு ஏற்படும் போது தான் அதன் வலி தெரியும். அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.

உங்களின் வீடுகளுக்கு அருகாமையில் உள்ளவர்கள் வீட்டில் டெங்கு பரவக்கூடிய சாத்தியகூறுகள் இருந்தால் அல்லது அவர்கள் டெங்கு பரவக்கூடிய பொருட்களை அப்புறப்படுத்தாமல் இருந்தால் நீங்கள் சமூக சேவையாக அதை அகற்றுவதற்கு முன்பாக உரியவர்களை அழைத்து அவர்களின் முகத்துக்கு நேராக அவர்களின் குறையை சுட்டிகாட்டி அப்புறபடுத்த திண்டியுங்கள். இல்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று அச்சுருத்துங்கள். பகைமை ஏற்படுமே உறவு முறியுமே என்று சிந்தித்தால் நாளை ஓர் உயிர் முறியும். அவரின் வேலைகளை நீங்கள் செய்யபோனால் காலம் முழுவதும் நீங்கள் செய்து கொண்டு தான் இருக்கவேண்டும் அவர் டெங்கு வளர்த்து கொண்டு தான் இருப்பார். சிலருக்கு உரைக்கும் வகையில் கூறினால் தான் புரியும்.

பொது இடங்களில் டெங்கு பரவக்கூடிய நிலையை கண்டால் பொதுச் சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார வைத்திய உத்தியோகத்தர் உள்ளிட்ட பிரதேசத்திலுள்ள நகரசபை/ பிரதேச சபை/ என்பவற்றுக்கு அறிவித்தல் கொடுங்கள்.

டெங்கை ஒழிப்போம். எம்மை நாமே பாதுகாப்போம். நோயற்ற ஊராக மாற்றுவோம்.

உயிரின் மதிப்பை உயிர் உள்ளபோதே உணர்வோம்.

இவண்
Aboo Hanifa Anfath Hifans

WAK


One thought on “உயிர்கொல்லியுடன் ஓர் உரையாடல்

  1. Mohamed SR Nisthar says:

    மிக அருமையாகவும் இலகுவாக புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இந்த விடயத்தை எழுதியதற்கு வாழ்த்துக்கள். எல்லா வீடுகளுக்கும் வழங்கப்படவேண்டிய செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All