Puttalam Online
current

டெங்கு நோயின் ஆபத்துப் பிடிக்குள் புத்தளம் பிரதேசம்!

  • 15 November 2017
  • 626 views

மர்லின் மரிக்கார்

தினகரன் – 15.11.2017

இலங்கையருக்கு பெரும் ஆபத்தாக விளங்கி வரும் டெங்கு நோயானது தற்போது புத்தளம் நகர் உள்ளிட்ட புத்தளம் மருத்துவ அதிகாரி பிரிவில் (எம்.ஒ.எச்)பெரிதும் தீவிரமடைந்துள்ளது. இதற்கு இந்நோய்க்கு உள்ளாவோரில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு நல்ல சான்றாக உள்ளது.

கடந்த சில வாரங்களாக இந்நோய்க்கு உள்ளாகி புத்தளம் தள வைத்தியசாலைக்கும், இதர தனியார் வைத்தியசாலைகளுக்கும் அதிகளவிலானோர் சிகிச்சை பெறுவதற்கு வருகின்றனர். புத்தளம் தள வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் நகுலநாதனின் தகவல்களின்படி, தற்போது நாளொன்றுக்கு 60,- 70 பேர் சிகிச்சை பெற வருகின்றனர்.

இது ஆரோக்கியமான நிலைமை அல்ல. அதனால் புத்தளம் நகரை உள்ளடக்கிய பிரதேசங்களில் டெங்கு தீவிரமடைந்திருப்பது குறித்து மத்திய, மாகாண சுகாதார அமைச்சுகள் அதிக கவனம் செலுத்தவும் தொடங்கியுள்ளன. இதனடிப்படையில் மாகாண மற்றும் மத்திய சுகாதார அமைச்சுகள் சுகாதாரத் துறை உத்தியோத்தர்களை புத்தளம் பிரதேசத்திற்கு அனுப்பி வைத்துள்ளதோடு, அப்பிரதேசங்களில் டெங்கு மேலும் தீவிரமடைவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளன.

இதேவேளை பிரதேச மட்ட பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைகளும், சமூகநல அமைப்புகளும், ஆர்வலர்களும் இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்புக்களை நல்கி வருகின்றனர்.

ஏனெனில் இந்நோயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாவிட்டால் அது தீவிர நிலையை அடைவதைத் தவிர்க்க முடியாது. அது மிக மோசமான பாதிப்புக்களை விளைவுகளாக வெளிப்படுத்தவே செய்யும். இதற்கு இவ்வருடத்தின் ஆரம்பப் பகுதியில் கிண்ணியா, திருகோணமலை, மூதுர் ஆகிய பிரதேசங்களில் டெங்கு நோய் ஏற்படுத்திய தாக்கங்களும் பாதிப்புக்களும் நல்ல எடுத்துக்காட்டுகளாகும். இங்கு பல நூற்றுக்கணக்கானோரை வாட்டியெடுத்த இந்நோய்,பலரது உயிர்களையும் கூட காவு கொண்டிருக்கின்றது. இந்நோயின் தீவிர நிலையையிட்டு- பீதியடைந்த சிலர் பிரதேசத்தையே விட்டு வேறு இடங்களுக்கு சென்று தற்காலிகமாகத் தங்கி இருந்தனர்.

டெங்கு நோய்ப் பாதிப்பிலிருந்து கிண்ணியா, திருகோணமலை, மூதூர் பிரதேச மக்களை மீட்டெடுக்கவென அரசாங்கம் விரிவான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. நாட்டின் பல பிரதேசங்களைச் சேர்ந்த டொக்டர்களும், சுகாதாரத் துறை உத்தியோகத்தர்களும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனூடாகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் துரிதமடைந்தன. அதன் பயனாக இந்நோய்க் கட்டுப்பாட்டு நிலையை அடைந்தது.

என்றாலும் இவ்வருடம் நாட்டின் ஏனைய சில பிரதேசங்களிலும் இந்நோய் அவ்வப்போது தீவிர நிலையை அடைந்தது. இருந்தும் கடந்த ஐம்பது வருட கால வரலாற்றில் முதற்தடவையாக ஒரு இலட்சத்து 68 ஆயிரம் பேரை இந்நோய் பாதித்ததோடு சுமார் 400 பேரின் உயிர்களையும் காவு கொண்டது. இதனூடாக இவ்வருடம் இந்நோய் வரலாற்றுத் தடம் பதித்தது. இவ்வாறு முன்னொரு போதுமே இந்நோய் தீவிரமடையவில்லை.

இந்நோயைக் கட்டுப்படுத்துவற்கான நடவடிக்கைகளை அரசாங்க சுகாதாரத் துறை விரிவான அடிப்படையில் முன்னெடுத்து வருகின்ற போதிலும், அவ்வப்போது ஆங்காங்கே நோய் தீவிரமடையவே செய்கின்றது. அந்த வகையில்தான் தற்போது இந்நோய் புத்தளம் மருத்துவ அதிகாரி பிரிவில் தீவிரமடைந்துள்ளது.

இவ்வருடம் ஜனவரி முதல் நவம்பர் வரையும் இம்மாவட்டத்தில் சுமார் ஆறாயிரம் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர். இந்நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கை திடீரென ஜுன் மாதம் 783, ஜுலை மாதம் 1304, ஆகஸ்ட் மாதம் 1192 என்றபடி அதிகூடியளவில் அதிகரித்தது.

ஆனால் ஏனைய மாதங்களில் 500க்கும் குறைவானோரே இந்நோய்க்கு புத்தளம் மாவட்டத்தில் உள்ளாகியுள்ளனர். தற்போது புத்தளம் மருத்துவ அலுவலக அதிகாரி பிரிவில் ஏற்பட்டிருக்கும் டெங்கு தீவிரநிலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, சிகிச்சை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக டெங்கு நோய் தொடர்பான பரிசோதனையை துரிதமாக மேற்கொள்ளக் கூடியவகையிலான விஷேட ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய, மாகாண சுகாதார அதிகாரிகள் புத்தளத்திற்கு விஜயம் செய்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் புத்தளம் நகரிலுள்ள பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைகளும், சமூக சேவைகள் அமைப்புகளும் ஒன்றிணைந்து பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் கடந்த சனியன்று முழு அளவிலான டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணியை மேற்கொண்டன. இந்நடவடிக்கைகக்கு புத்தளம் மக்கள் மாத்திரமல்லாமல் சமூக வலைத்தளங்களும் முழுமையான ஒத்துழைப்பை நல்கின. இதனூடாக நுளம்புகள் பல்கிப் பெருகக் கூடிய இடங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு சுற்று சூழல் நுளம்பு பெருக முடியாத உலர் நிலைக்கு கொண்டு வரப்பட்டன.டெங்கு நுளம்பு பெருகக் கூடிய இடங்கள் தொடர்பில் மக்களுக்கு அறிவூட்டல்களும் மேற்கொள்ளப்பட்டன.

தேசிய டெங்கு ஒழிப்பு இயக்கத்தின் சமூக மருத்துவ நிபுணர் பிரசீலா சமரவீர குறிப்பிடுகையில், ‘புத்தளத்தில் டெங்கு நுளம்பு பெருகுவதற்கு உதவும் இடங்களில் கிணறுகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன’ என்று குறிப்பிட்டார்.

‘கிண்ணியா, திருகோணமலை, மூதூர் போன்ற பிரதேசங்களில் தீவிரமடைந்த இரண்டாம் வகை டெங்கே புத்தளத்திலும் தலைதூக்கியுள்ளது’ என்பது ஆய்வுகள் மூலம் உறுதியாகியுள்ளன’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், ‘எவருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் தாமதியாது வைத்தியசாலைக்கு சென்று உரிய மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக் கொள்ளத் தவறக் கூடாது’ என்று வலியுறுத்திய அவர், ‘இங்கு பலர் கைவைத்தியம் செய்து நோய் தீவிர கட்டத்தை அடைந்த பின்னரே வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருகை தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் டெங்கு நோயைக் கட்டுபடுத்துவதற்கும் அதனைத் தவிர்த்துக் கொள்ளவதற்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பும், விழிப்புணர்வும் அவசியம். ஏனெனில் இது சுற்றுசூழலுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட ஒரு நோய்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அது தான் உண்மை. இது நுளம்புகளால் காவிப் பரப்பப்படும் ஒரு நோய். இந்நோயைக் காவிப்பரப்பும் நுளம்புகள் சுற்றுச்சுசூழலில் தேங்கும் தெளிந்த நீரில் முட்டையிட்டு பல்கிப் பெருகும் பண்பைக் கொண்டிருக்கின்றது. தற்போது நிலவும் மழைக்காலநிலையும் இந்நுளம்பு பெருக்கத்திற்கு பெரிதும் துணை புரியக் கூடியதாகும்.

ஆகவே வீட்டிலும், சுற்றுச்சூழலிலும் தெளிந்த நீர் தேங்க முடியாதபடி சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக வீட்டிலும் சுற்றாடலிலும் சேருகின்ற கழிவுப் பொருட்களையும், நீர் தேங்கக் கூடிய கைவிடப்பட்ட பொருட்களையும் ஒழுங்கு முறையாகவும் தொடராகவும் அப்புறப்படுத்துவது மிகவும் அவசியமானது. இதனை ஒவ்வொருவரும் தம் கடமையாகவும் பொறுப்பாகவும் கருதி செயற்பட்டால் டெங்கு ஒரு அச்சுறுத்தலாகவே இருக்காது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All