Puttalam Online
politics

பட்ஜட் இரண்டாவது வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் அங்கீகாரம்

  • 17 November 2017
  • 153 views

ஆதரவு – 151
எதிர் – 58

* த.கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, இ.தொ.கா ஆதரவு
* ஜே.வி.பி, மஹிந்த ஆதரவு அணி எதிர்ப்பு
* சிவசக்தி, சரவணபவன் சமுகமளிக்கவில்லை

2018ஆம் ஆண்டுக்கான தேசிய அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 58 வாக்குகளும் பதிவாகின.

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன், இணைந்து பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களும் வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆதரவாக கிடைத்த வாக்குகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 வாக்குகளும் உள்ளடங்குகின்றன. கூட்டமைப்பின் எம்.பிக்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் சரவணபவன் ஆகியோர் சபைக்கு சமுகமளித்திருக்கவில்லை.

எனினும், ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மை எம்.பிக்களும் உள்ளடங்கலாக 58 பேர் எதிர்த்து வாக்களித்திருந்தனர்.

எதிரணியிலுள்ள எம்.பிக்களான ஆறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா, முத்து சிவலிங்கம் ஆகியோர் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாகவே வாக்களித்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன, ராஜித சேனாரட்ன அடங்கலான 15 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

தேசிய அரசாங்கத்தின் மூன்றாவது வரவு-செலவுத்திட்டத்தை முதற்தடவையாக நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட மங்கள சமரவீர கடந்த 9ஆம் திகதி சபையில் சமர்ப்பித்திருந்தார். ‘நீல பசுமைப் புரட்சி – என்டபிரைஸ் ஸ்ரீலங்கா’ என்ற தொனிப்பொருளில் அமைச்சர் இவ்வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பித்திருந்தார். சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்கும் திட்டங்கள், வடக்கு, கிழக்கு உட்பட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றுக்கு நிதிகளை ஒதுக்கும் வகையிலான யோசனைகள் பல இந்த வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கலை மேலும் விரிவுபடுத்தும் வகையிலான இது தயாரிக்கப்பட்டிருப்பதாக ஆளும்தரப்பு உறுப்பினர்கள் விவாதத்தில் தெரிவித்திருந்தனர்.

அதேநேரம், திறந்த பொருளாதாரம் தோல்வியடைந்தது எனக் கூறிக் கொண்டு மீண்டும் அதனை விரிவுபடுத்தும் நோக்கத்தில் வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி உள்ளிட்ட எதிர்த்தரப்பினர் குற்றஞ்சாட்டியிருந்தனர். அது மாத்திரமன்றி கடந்த அரசாங்கம் எடுத்த கடன்களைவிட அதிக கடன்களைப் பெறும் வகையில் இது தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தின் இறுதிநாளான நேற்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர பதிலளித்து உரையாற்றியிருந்தார். அவருடைய உரையைத் தொடர்ந்து இரண்டாம் வாசிப்பை நிறைவேற்றுவதற்கான சபையின் அனுமதியை சபாநாயகர் கோரினார்.

இதற்கு ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர். இதற்கமைய கோரம் ஒலிக்கப்பட்டு மாலை 5.25 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஒன்றிணைந்த எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்க ஆகியோரின் வாக்குகளை பதிவு செய்வதில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து அவர்கள் வாய்மூலம் தமது வாக்குகளை அளித்திருந்தனர்.

வரவுசெலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தமையைத் தொடர்ந்து ஆளும் தரப்பு உறுப்பினர்கள் மேசையில் தட்டி ஆரவாரம் செய்தனர்.

இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நேற்று பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் இன்று (17) முதல் குழுநிலை விவாதம் ஆரம்பமாகிறது.

எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதிவரை குழுநிலை விவாதம் நடைபெறும். இன்றையதினம் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட 23 அமைச்சுக்கள் மற்றும் ஆணைக்குழுக்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் விவாதம் நடைபெறும்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Thinakaran


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All