Puttalam Online
politics

இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி அரசியல் தலைகள் சிந்திக்குமா?

  • 20 November 2017
  • 740 views

இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி அரசியல் தலைகள் சிந்திக்குமா? என்ற வினாவுடன் தொடரும் இந்த கட்டுரையின் நோக்கம், அரசியல் தலைவர்களை மட்டும் சமூக பொறுப்புக்களை கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதற்கல்ல, சிலரை குறைகூற வேண்டும் என்கின்ற தவறான எண்ணமும் அல்ல.
அப்படியென்றால் ஏன்? என்ற கேள்வி எழுகின்றது.
இந்த தலைப்பை இப்படியும் சிந்திக்கலாம்,
இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி ஆன்மீக தலைகள் சிந்திக்குமா?
இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி கல்விமான்கள் சிந்திப்பார்களா?
இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி இளைஞர் யுவதிகள் சிந்திப்பார்களா?
இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி பணக்கார தலைகள் சிந்திக்குமா?
இப்படி ஒவ்வொரு தலைகளின் மேல் இந்த பொறுப்பை ஏற்றி வைத்து சிந்தித்துப் பார்த்தேன், ஆனால் எதையும் அரச அனுமதியுடன் முன்னெடுக்க அரசியல் தலைகளின் துணையும் பங்களிப்பும் தேவை என்பதை நமது இலங்கை அரசியல் நிலவரம் சொல்லிக் கொண்டிருப்பதனால் அரசியல் தலைகளுக்கு அந்த பொருப்பு சுமத்தப்படுகிறது.
சமூகத்திற்கு தேவையான ஒரு பணியை ஆன்மீக, பணக்கார அல்லது யுவன் யுவதிகள் முன்னின்று செய்ய, சாதிக்க முனைந்தாலும் முடிவாக அரச அனுமதியையும் அரசியல் வாதிகளின் ஒப்புதலையும்தான் வேண்டிநிற்கிறது.
இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி எல்லா தரப்பினரும் சிந்திக்க வேண்டும், எல்லா வகையிலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இலங்கையின் சுதந்திரத்திற்கான போராட்டங்கள் முதல் இலங்கையின் அரசாங்கங்களை நிர்ணயிப்பது வரை முஸ்லிம் அரசியல் வாதிகளின் ஈடுபாடும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவமும் மிக முக்கியமானதாகும்.
இலங்கைக்கான சுந்தந்திர பிரகடன செய்திகளைப் படிக்கும் போது அப்போது கலத்தில் இருந்த தலைவர்களாக நமது மூத்த அரசியல்வாதிகளாக பலர் திகழ்ந்திருக்கிறாகள்.
சேர். ராஸிக் பரீத், டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத், எம்.ஸீ.எம். கலீல் மற்றும் டாக்டர் டீ.பி. ஜாயா போன்றவர்கள் மிக முக்கியமானவர்களாகும்.
அதனால் தான் 1948 ம் ஆண்டு டாக்டர் டீ.பி.ஜாயா அவர்கள் தொழிலார் மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக (Minister of Labour and Social Services) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதில் இன்னும் ஒரு செய்தி,
1939ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் திகதி அனைத்து முஸ்லிம் அரசியல் செயலகத்தினால் (the Secretary of the All Ceylon Muslim Political Conference) கொழும்பு ஸாஹிரா படசாலையில் நடந்த மாநாட்டில் டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் இப்படிச் சொன்னார்; இலங்கைக்கு சுதந்திரம் வேண்டி போராடுபவர்களின் நானும் ஒருவன் என்பதை சிங்கள அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்துகின்றேன் (Let me assure my Sinhalese countrymen that I am one among them in demanding complete freedom for our country).
இலங்கை அரசியல் வரலாற்றில் உயிரான (சுதந்திர போராட்டம்) சந்தர்ப்பங்களிளும் அதே நேரம் பல அரசாங்க முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை (கல்வி அமைச்சு, கப்பல் மற்றும் துறைமுக அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு) வகிப்பதிலும் முஸ்லிம் தலைவர்கள் வாய்ப்புப் பெற்றிருந்தனர்.
ஆனால் முஸ்லிம்களுக்கு எதிராக பல மரண, மர்ம அடிகளும் காலா காலமாக இருந்துவந்திருக்கின்றது.
அது பல பணக்காரர்களை பிச்சைகாரர்களாக மாற்றி இருக்கின்றது, பல முஸ்லிம் கல்விமான்களை இழக்கச் செய்திருக்கின்றது.
பல பிரதேசங்களை துரக்கச் செய்திருக்கின்றது, பலரை அநாதையாக, அகதியாக மாற்றி இருக்கின்றது.
ஏறாவூர், காத்தான்குடி, அழிஞ்சிப் பொத்தானை, பங்குராணை, மூதூர், வடகிழக்கு என்று பல பிரதேசங்களில் இந்த அழிவுகளும் இழப்புக்களும் நடந்தேறி இருக்கின்றன.
மன்னார் அரச அதிபர் மக்பூல், மூதூர் உதவி அரச அதிபர் ஹபீப் முஹம்மத், ஓட்டமாவடி உதவி அரச அதிபர் ஏ.கே. உதுமான், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரச அதிபர் வை. அஹ்மது, காத்தான்குடி உதவி அரச அதிபர் ஏ.எல். பளீல் போன்ற பல முஸ்லீம் புத்தி ஜீவிகள், உயரதிகாரிகள் எம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார்கள்.
மாவனல்லை நகரம் இரவோடு இரவாக சாம்பலாகி பல பணக்காரர்கள் ஒரே இரவில் பிச்சைக்காரர்களாகிய நிகழ்வுகள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக துக்ககரமான பக்கங்களாகும்.
முஸ்லிம்கள் வாழுகின்ற எந்த பிரதேசத்தையும் ஒரு நிமிடம் மீட்டிப் பாருங்கள், அங்குள்ள வாழ்க்கை நிலைமைகள், சூழல்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் தான், இத்தவரைக்கும் நீடிக்கிறது. அது இலங்கையின் தலைநகர் கொழும்பாக இருக்கட்டும். அங்கும் இதே நிலைதான்.
இலங்கை முஸ்லிம்களின் தேவைகளை, குறைகளை நிறைகளை பட்டியலிட்டு எதிர்கால நோக்குடன் செயற்படும் எந்த நிருவனங்களாவது நம்மிடத்தில் இருக்கின்றனவா?
எத்தனை முஸ்லிம்கள் இலங்கையில் வாழ்கின்றார்கள்?
வனத்தொகைப் பெருக்கம் ஒரு வருடத்தில் என்ன சதவீதம்?
அவர்களின் கல்வி நிலை என்ன?
கல்விக்கூடங்கள் எத்தனை இயங்குகின்றன?
பள்ளிவாயல்கள் எத்தனை இருக்கின்றது?
கட்டப்பட்ட அனைத்துப் பள்ளிவாயல்களும் இயங்குகின்றனவா?
மார்க்கம் போதிக்கும் எத்தனை மத்ரஸாக்கள் இயங்குகின்றன?
அவை அனைத்தும் உண்மையில் பதிவுசெய்யப்பட்டுள்ளனவா?
நவீன சவால்களை எதிர்கொள்ளும் வகையிலான கல்விக் கோட்பாடுகள் அங்கு கற்பிக்கப்படுகின்றனவா?
பாடசாலை வயதிலுள்ள அனைத்து முஸ்லிம் பிள்ளைகளும் பாடசாலைக்குச் செல்கின்றார்களா?
அல்லது சிறுவர் துஷ்பிரயோத்தில் சிக்குண்டிருக்கிறார்களா?
அந்நிய பாடசாலைக்குச் செல்லும் எமது மாணவிகளின் நிலைமை எவ்வாறானாது?
அது ஆரோக்கியமானதா?
கற்பிக்கப்படும் பாடசாலை பாடத்திட்டங்கள் எமது பிள்ளைகளுக்குத் தேவையானது தானா?
நமது பிள்ளைகள் படிக்கும் பாடத்திட்டங்கள் இஸ்லாமிய மயமானதா? என்பதை பரிசீலனைக்கு உட்படுத்துவது மிக இன்றியாமையாத ஒன்றாகும்.
இதனை எழுதும் போதே எனக்கு ஒரு சந்தேகம், இலங்கை முஸ்லிம்களின் சமய பண்பாடுகளை பாதுகாக்க இயங்கும் திணைக்களமே இஸ்லாத்தில் இல்லாத மீலாத் விழா போன்ற கொண்டாட்டங்களை முன்னெடுத்து நடாத்தும் போது, எங்கே பாடசாலை புத்தகங்களில் கொள்கைக்கு மாற்றமானவை உள்ளது என்று பார்க்க போகிறார்கள்??
இதன் ஏனைய பகுதிகளை உங்கள் சிந்தனைக்கு விட்டுச் செல்கிறேன்.
ஏன் அதிகமான முஸ்லிம் யுவதிகள் வெளிநாடுகளில் வாழ்க்கையைத் துலைத்து நடுரோட்டில் நிர்கதிக்குள்ளாகுகிறார்கள்??
வெளிநாட்டுக்குச் செல்பவர்களின் நிலை தொடருமா? எண்ணிக்கை அதிகரிக்கின்றனவா?
அவர்கள் குடும்பங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் என்ன?
ஊருக்கு ஊர் ஸகாத், ஸதகா வசூல் விநியோகம் நடைமுறையில் இருக்கின்றனவா?
எமது சமூகத்தில் ஏழைகளின் நிலை என்ன?
விதவைகளின் நிலை என்ன?
எமது மக்கள் வாழும் கிராமங்களில் அத்தியவசிய தேவைகளான வைத்தியசாலை, பாடசாலை, மின்வசதி, நீர் வசதிகள் கிடைக்கப்பெருகின்றனவா?
என்று பல கேள்விகள் இந்த தலைப்பினூடாக எழுகின்றன.
இவைகள் பதிலளிக்க முடியாத பிரச்சினைகளாக மாறி நிற்பதற்கு கீழ்வருவன காரணங்களாக அமையலாம்
சமூக சேவை நிருவனங்கள் பல குழுக்களாக பிரிந்து குருகிய வட்டத்திற்குள் நின்று பணியாற்றுகின்றமை.
மார்க்கத்தை போதிக்கும் அமைப்புக்கள் தனித்தனியாக துண்டாடப்பட்டு தங்களுக்கென ஆதரவாலர்களை வைத்துக்கொண்டு அவர்களின் நல்லது கெட்டதை பார்க்கின்றமை.
இளைஞர், யுவதிகள் எதிர்கால இலட்சியம், சமூகம் பற்றிய அக்கறை இல்லாமல் வளர்க்கப்படுகின்றமை.
தொழிலதிபர்கள், பணம் படைத்தவர்கள் எமது சமூகத்தில் உள்ள பின்தங்கியவர்களை அடையாளம் கண்டு தொழில் வாய்ப்பளிக்காமை.
கல்விமான்கள் தங்களுடைய தகுதிகளையும் திறமைகளையும் ஊதியத்திற்காக மட்டும் பயன்படுத்தும் போக்கு.
குறித்த சிலரின் அல்லது குறித்த அமைப்பின் வழிகாட்டல்களை மட்டும் முன்மாதிரியாக எடுத்துக் கொள்வதும் அடுத்தவற்றையை ஆய்வுக்குள் உட்படுத்தாமை.
முஸ்லிம் தலைவர்களிடத்தில் ஏற்பட்டுள்ள கட்சி பேதம்.
முஸ்லிம் தலைவர்களிடம் எவ்வித தூர நோக்குப் பார்வையும் இல்லாமை.
அரசியல் பேசும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மட்டும் மக்களை சந்திக்கின்றமை.
அரசியல் களத்தில் இருக்கும் முஸ்லிம்களுக்கிடையில் இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் பற்றி நீண்டகால சிந்தனைகள் எதுவும் இல்லாமை.
தேர்தல் காலங்களில் மட்டும் சமூக சேவைகள் பற்றி பேசுவது.
தேர்தலில் வெற்றியாகி ஆட்சி அமைக்கின்ற கட்சிக்குள் சீட்டெடுத்துக்கொண்டு செல்வதன் மூலம் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கிடையில் பாரிய இடைவெளி ஒன்று வருவதுடன் மோதல்களும் நிழவுகின்றமை.
அரசியல் என்று வருகின்ற போது முஸ்லிம்கள் நான்கு முக்கிய பிரிவாக பிரிந்து மோதிக்கொள்கின்றமை.
1.    ஆளும் கட்சி ஆதரவு
2.   எதிர்கட்சி ஆதாரவு
3.   முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு
4.   சுயேட்சைக்குழுக்களாக நிற்பது மட்டும்……
கட்சிகளாக குழுக்களாக பிரிந்து தேர்தலில் பங்கேற்கின்ற போது முஸ்லிம்களின் வாக்குகள் முஸ்லிம்களின் கைகளினாலே சிதருண்டு போகின்றது.
உதாரணமாக, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டமான புத்தளத்தில் நிலையான பிரதிநிதிகள் தேர்வு இன்மை,
சேவை செய்கின்ற போது அல்லது உதவி கேற்கின்ற போது எந்த கட்சியை சார்ந்தவர், எந்த கட்சிக்காரருக்கு உதவுவார் என்ற பார்வையும் அளவை நிர்வையும் புலக்கத்தில் இருந்து வருவது.
முஸ்லிம்களைப் பாதிக்கக் கூடிய தேசியப் பிரச்சினைகள் பற்றி அனைத்து முஸ்லிம் அரசியல் வாதிகளும் இணைந்து எந்த முடிவும் எடுக்க தயக்கம் காட்டுவது.
இவ்வாறு பட்டியல் நீண்டுகொண்டு செல்கிறது.
அரசியல் நீர்வோடையில் நம் முஸ்லிம் அரசியல் தலைகளின் பங்களிப்புக்களையும் நடவடிக்கைகளையும் பார்க்கும் போது எல்லாக் காலங்களிலும் மாறுபட்ட செயற்பாடுகளும் தனிக் கட்சி போக்குகளும் இருந்து வந்திருக்கின்றது.
அது நம் சமூகத்தின் வளர்ச்சியை முன்னெடுப்பதில் சவால்களை எதிர்நோக்க துணையாக அமைந்திருக்கின்றது, அமைகிறது.
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றைப் புரட்டுகின்ற போது பல அரசியல் கட்சிகளின் தோற்றத்தை பார்க்க முடியும்.
சேர்.ராஸிக் பரீத் தலைமையில் – All Ceylon Moors Association
எம்.ஸீ.எம். கலீல் தலைமையில் – சிலோன் முஸ்லிம் லீக்
பதியுத்தீன் மஹ்மூத் தலைமையில் – இஸ்லாமிக் சோஷலிஸ்ட் முன்னணி
எம்.எச். முஹம்மத் தலைமையில் – மார்க்ஸிஸ்ட் எதிர் முன்னணி,
எம்.எச்.எம், அஷ்ரப் தலைமையில் – சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ரவூப் ஹக்கீம் தலைமையில்  – சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
பேரியல் அஷ்ரப் தலைமையில் – NUA
அதாவுல்லாஹ் தலைமையில் – National Muslim congress
ரிஷாத் பதியூதின் தலைமையில் – All Ceylon Muslim congress
இன்னும் சில……..
இந்த நிலையில் முஸ்லிம் அரசியல் தலைகள் காலத்தின் தேவை என்ன என்பதை சிந்திக்கும் சக்திகளாக மாறி தேவையை உணர்ந்து அதனை நடைமுறைக்குக் கொண்டு வரும் ஒரு குடையை தெரிவு செய்ய வேண்டும்.
எங்குமே ஒரே தலைமைத்துவத்தை ஏற்க சிலருடைய கெளரவச் சிக்கல்களும் சுய இலாபங்களும் அனுமதிப்பதில்லை.
ஆனால் தேவைப்படுகின்ற போது அவைகளை தூக்கி எறிந்துவிட்டு காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு செயற்பட முன்வர வேண்டும்.
தற்போது இலங்கை திருநாட்டில் 325 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. அவற்றின் 225  பிரதேச சபைகள், 28 மாநகர சபைகள் (Municipal Council), 18 நகராட்சி (Urban Council) ளும் இருக்கின்றன.
இவைகளுக்கிடையில் பாராளுமன்றத்தில் நல்ல எண்ணிக்கையை கொண்ட முஸ்லிம் பிரதிநிதித்துவமும் இருக்கின்றன.
ஆனால் சமூக நலன், சமூக முன்னேற்றம் என்ற ஒரு நோக்கத்திற்காக ஒன்று சேர இத்தனை தலைகளையும் மாற்றங்கள் தேவை அன்பாய் அழைக்கின்றது.
மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் அரசியல் நகர்வுகளில் அவரின் கடைசி காலத்தைப் பார்த்தால் பூரிப்படைவீர்கள், முஸ்லிம்களின் ஒரே ஒரு தனிக் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸை உயர்த்திய போது இலங்கையின் பொதுத் தேர்தல்களில் வெற்றியை நிர்ணயிக்கும் வாக்குகளாக முஸ்லிகளின் வாக்குகள் முக்கியமாகிப் போனது.
ஆனால் இன்று யாரும் கண்டுகொள்ளாத வாக்குகளாக சில்லரை நாணயங்களாக சிதரிக்கிடக்கின்றன.
மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் அரசியல் ஊக்கமும் ஆக்கமும் ஒலிவில் வெளிச்சவீடு, கிழக்கிலங்கை பல்கலைக்கழகம் என்பன முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றிச் சின்னங்களாகும்.
இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, பூரண உரிமைகளும் பெற்று சுயமாக எழுந்து நிற்கின்ற சமூகமாக மாற, மாற்ற அரசியல் தலைகள் ஒன்றிணைய வேண்டும்.
இந்த சமூக முன்னேற்ற நடவடிக்கையின் போது அதற்கு தேவையான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்க சமூக அமைப்புக்கள், தொழில் அதிபர்கள், கல்விமான்கள், இளைஞர் யுவதிகள் தயாராகுவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
அஸ்லம்
கத்தார்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All