Puttalam Online
other-news

‘வலிகள் சுமந்த தேசம்’ கவிதை நூல் பற்றிய பார்வை

  • 27 November 2017
  • 289 views

வெலிகம ரிம்ஸா முஹம்மத்
 
மீராமொஹிதீன் ஜமால்தீன் என்ற இயற் பெயரையுடைய கவிஞர் மருதூர் ஜமால்தீனின் ”வலிகள் சுமந்த தேசம்” கவிதை நூல் நூலாசிரியரின் 8 ஆவது நூல் வெளியீடாக வெளிவந்துள்ளது. சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும், ஏறாவூரை வசிப்பிடமாகவும் கொண்ட இவரது இந்த நூலை ஏறாவூர் வாசிப்பு வட்டம் வெளியிட்டுள்ளது. 
 
இந்த நூலில் மறக்க முடியவில்லை, தெளிந்து கொள், உங்களுக்கின்னும், ஏன் விடிகிறாய், அபாபீல்கள், கழுகுப் பார்வைக்குள் நீ, என்றும் நானே தலைவனாக, ஏமாளிகள், உடன் பிறப்பே, ஆத்மாக்களே, நிலை மாறுகின்றேன், எதை எதிர்பார்க்கிறாய், நாளைய அபாபீல்களாக, நிம்மதி ஏது?, நாளை முதல், எம்மிலக்கு, காத்திருக்கிறது, சொல்லிக் கொடு, வாடிக்கிடக்கிறது, நினைவிருக்கட்டும் எம்மை ஆகிய தலைப்புக்களில் 20 கவிதைகள் உள்ளடங்கியுள்ளன. இந்த நூலுக்கான முன்னுரையை தீரன் ஆர்.எம். நௌசாத் அவர்களும் பின்னட்டைக் குறிப்பை ஏறாவூர் தாஹிர் அவர்களும் வழங்கியுள்ளார்கள். 
 
சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இவர் இலக்கியப் பணியாற்றி வந்தாலும் தனது கன்னிக் கவிதைத் தொகுதியை 2008 இல் புரவலர் புத்தகப் பூங்கா மூலமே வெளியீடு செய்தார். அதனைத் தொடர்ந்து மருதூர் ஜமால்தீன் ரமழான் ஸலவாத் (2010), கிழக்கின் பெரு வெள்ளக் காவியம் (2010), முஹம்மத் (ஸல்) புகழ் மாலை (2011), இஸ்லாமிய கீதங்கள் (2012), தாலாட்டு (2015), பத்ர் யுத்தம் (2016) ஆகிய நூல்களையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.
 
புதுக் கவிதை, மரபுக் கவிதை ஆகிய இரண்டு வடிவங்களிலும் கவிதை எழுதுவதில் சமர்த்தரான இவரது கவிதை, சிறுகதை, கட்டுரை, இஸ்லாமியப் பாடல்கள் போன்ற ஐநூறுக்கு மேற்பட்ட படைப்புக்கள் தேசிய பத்திரிகைகளிலும் பல்வேறு சஞ்சிகைகளிலும் களம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எந்த மெட்டுக்கும் உடனடியாக பாடல் வரிகளை மிகவும் இலகுவாக எழுதும் ஆற்றல் கை வரப்பெற்ற இவர் தற்போது முகநூலிலும் பல்வேறு வலைத்தளங்களிலும் பல படைப்புக்களையும் அதிக ஈடுபாடுகாட்டி எழுதி வருகின்றார். 
 
அநியாயங்களுக்கு எதிரான காட்டமாகவும் தவறுகளைச் சுட்டிக் காட்டும் விதமாகவும் ஒரு சில அரசியல் வாதிகளுக்கான சாடல்களாவும் முயற்சி செய்து முன்னேறாமல் சோம்பேரிகளாகவும் ஏமாளிகளாகவும் இருக்கும் மானிடர்களுக்கு சாட்டையடியாகவும் தனது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள அரும்பாடு படும் மானிடனின் அவலக் குரல்களை படம் பிடித்துக் காட்டும் விதமாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைத் துடைத்து அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறுவதாகவும் இப்படி பல கருக்களை வைத்தே ”வலிகள் சுமந்த தேசம்” என்ற கவிதை நூலை மருதூர் ஜமால்தீன் யாத்துள்ளார். மிகவும் எளிய வடிவில் வெளிவந்துள்ள இந்தக் கவிதைத் தொகுதி சுடும் நெருப்பாக பல விடயங்களை கக்கி நிற்கின்றமை ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கின்றன. மருதூர் ஜமால்தீன் இன்னும் பல காத்திரமான படைப்புக்களை வெளியிட வாழ்த்துகின்றேன்!!!
 
நூல் – வலிகள் சுமந்த தேசம்
நூல் வகை – கவிதை
நூலாசிரியர் – மருதூர் ஜமால்தீன்
தொலைபேசி – 0775590611
வெளியீடு – ஏறாவூர் வாசிப்பு வட்டம்
விலை – 100 ரூபாய்

வெலிகம ரிம்ஸா முஹம்மத்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All