எழுபது வருட முதலாளித்துவவாத அரசியல் தலைமைகளை நாம் கண்ட பின் எஞ்சி இருப்பது குறித்து இங்கு நாம் விலாவாரியாக பேச ஒன்றும் இல்லை. நேற்று சீன அரசுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகம்(?) தாரை வார்க்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிகு தினமொன்றில் வாழ்ந்தோம் என்ற பெருமையுடன் இன்றைய தினத்தினுள் காலடி எடுத்து வைத்துள்ளோம்.
மேட்டுக்குடிக்கு மட்டுமே உரித்தான கல்வி சகலருக்கும் வழங்கப்பட வேண்டும் என தந்தை கன்னங்கர பாராளுமன்றில் பேச அது குறித்து தமது தென்னந்தோப்புகளில் தேங்காய் பறிக்க ஆள் இல்லாமல் போய்விடுமே என கவலையுற்ற முது பெரும் ஓநாய்களை தலைமைகளாக்கொண்ட தலைமை கட்சிகளின் கைகளில் எம் அரசாங்கம் பந்தாடப்பட்டு சீழ் வடிந்து கொண்டு இருக்கும் இந்த பொழுதில் இன்னுமொரு தேர்தலை நோக்கி நமது நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பள்ளிக்காலங்களில் இனவாதிகளும், முதலாளித்துவ குள்ள நரிகளும், துவேஷம் தலைக்கேறிய எச்சைகளும் “தேச பிதாக்கள்” ஆக கற்பிக்கப்பட்ட ஒரு கல்வி, கலை, அரசியல் கட்டமைப்பினுள் அரசியல் குறித்து பேசுவதே ஏதோ தான்தோன்றித்தனத்தின் வெளிப்பாடாக கருதப்பட்ட இந்த சமூகத்தில் நான் இங்கு பேச போவதும் சற்று சுளிப்பை ஏற்படுத்தத்தான் போகின்றது என்பது நிச்சயம்!
நமக்கு எதை பேச வேண்டும், எதை பேசக்கூடாது என்பதை கற்பிக்கும் அளவுக்கு மேலாதிக்கவாதம் கை ஓங்கிய இந்த கட்டமைப்பினுள் நானும் நீங்களும் முறுக்கி விடப்பட்ட பாவைகளாக ஒரு எல்லையினுள் இயங்கிக்கொண்டு இருக்கின்றோம். வயல் விதைத்த, உப்பு இழுத்த, தேங்காய் பறித்த, கூலிக்கு உழைத்த எமது மூத்தோர்களுக்கு அரசியல் என்பது ஒரு சாரார் மட்டுமே செய்யும் ஏதோ அவர்களுக்கே எழுதி கொடுக்கப்பட்ட சொத்தாகவே பாடங்கள் கற்பிக்கப்பட்டு உள்ளன. தேர்தல் காலங்களில் ‘முதலாளிமார்’, ‘தொரைமார்’ வீடு வந்து வாக்கு கேட்டதையே பெறும் பேறாக எண்ணி அவர்களை தலைமை ஆக்கி அவர்களது எச்சங்களையும் சொச்சங்களையும் அள்ளித்தின்னத்தான் இந்த முதலாளித்துவ அரசியல் புலம் எம்மை பழக்கி விட்டது. இங்கு வேறு எந்த கருத்துகளும், அநீதிகளுக்கு எதிரான குரல்களும் மேலெழும் போது அது சமூகம் குறித்த காட்டிக்கொடுப்பாகவும், கலகக்காரத்தனத்தின் வெளிப்பாடாகவும் முத்திரை குத்தப்பட்டு இயற்கைக்கு ஒன்னா விதத்தில் தண்டிக்கவும் பட்டது இங்கு மறுக்க முடியா இருள் வரலாறு! மீறி கீழிருந்து மேல் சென்று “கோல்” கையில் கிடைக்க “பன்றியுடன் சேர்ந்த பசு” ஆகி முடிந்த தலைமைகளையும் நாம் காணாமல் இல்லை.
பேச மறுத்த, மறைத்த, மறந்த வார்த்தைகள் இன்று யாரை எல்லாம் அதிகாரங்களில் அமர்த்தி உள்ளது என்பதை காணும் போது பேசாமல் விடுவது என்பது சமூகம் மீது நாம் இழைக்கும் பாரிய அநீதியாகவே இருக்க போகின்றது! ஊழல்களும் அசிங்கங்களும் உயர்பீடங்களில் நிகழும் போது கோமாளியாக நடந்து கொள்ளும் அதே நேரம் விளிம்பு நிலை சாமான்யன் ஒருவனின் சிறு தவறும் நாட்டின் இறைமையின் கலங்கமாக தண்டிக்கப்படுவதும் எமது நீதி முறைமையின் அன்றாடம் ஆகி விட்டது. இதையெல்லாம் கண்டு கை கட்டி நிற்கும் நாம் நியாயம் பேசுவது என்னவோ தெருவோர கீரைக்காரியிடம்தான்!
எங்கே தவறு விட்டோம் என என்றுமே எண்ணியதும் இல்லை, யாரோ விட்ட தவறில்தான் நாம் நொந்துகொண்டும் இருக்கின்றோம் என்பதை தெரிந்தும் கண்டு கொள்வதும் இல்லை, கேட்டால் அடுத்தவனுக்கு இல்லாத அக்கறை நமக்கு எதற்கு என தத்துவம் வேறு! இதுதான் நமக்கு இந்த அரசியல் முறைமை கற்றுத்தந்த பாடம்.
தேர்தல் காலம் நெருங்க மதமாக, இனமாக, பிரதேசமாக, ஊராக இன்னும் என்னமோ பிரிவுகள் எல்லாவற்றுக்கும் உட்பட்டு வாக்குகளில் பிரிந்து கடைசியில் நாடு என்று வரும் போது எல்லோருமாக சேர்ந்து நொந்தும் கொள்கின்றோம். அபிவிருத்தி என்பது நமக்கு வெறுமனே பாதையாகவும், தொழில் வாய்ப்பாகவும் அதையும் அரசியல் தலைமைகள் நமக்கு இடும் பிச்சையாகவும் எண்ணிக்கொண்டு இருக்கும் நமக்கு அந்த ‘சுரண்டிகள்’ அங்கு சென்றதே நமது வாக்கு எனும் பிச்சைதான் என்பது மட்டுமே புரிவதே இல்லை!
தலைமையை நோக்கிய பயணத்தில், ஒரு தலைமையினை நிர்ணயிக்கும் பயணத்தில் பெரும் சக்தியாக திகழும் ஒரு சாமான்யனும், அவனது வாக்கும் அதே தலைமையினை கேள்விக்கு உட்படுத்தும், அல்லது கீழுக்கு இறக்கும் பயணத்தில் ஏன் எந்தவித சக்தியும் இல்லாத செல்லாக்காசு ஆகின்றான் என்பதை என்றாவது சிந்தித்தோமா?
முஸ்லிம்களுக்காக தனி அரசியல் அலகு வேண்டும், பலம் வேண்டும் என நாம் கிளம்பி கிழித்ததை விட அது ஒன்றும் இல்லாமலே கிழித்ததுதான் அதிகம்! தமிழ் உரிமைக்கான போராட்டமும் அப்படித்தான், தனிப்பானை கேட்க போய் இருந்த குவளையும் நொறுங்கி கிடக்கிறது!
நாடு நாறட்டும், நமக்கு முற்றம் மனத்தால் போதும் என்ற அரசியல் சிந்தனைகளை ஊட்டிய அந்த தலைமைகள் நம்மை வழிநடத்தியது போதும், இனி நாம் நமக்கான அரசியல் தீர்வை நாமே தேடிக்கொள்ள வேண்டிய நேரம் சரி!
“வெட்டினாலும் பச்சை” க்கு போட்டியாக “வளமான எதிர்காலம்” கிளம்பி சிரிப்பூட்ட எஞ்சியிருக்கும் ஒரே நம்பிக்கையாக “இருவருக்கும் கொடுத்தது போதும், இனி எமக்கு தாருங்கள்” என்ற தாரகம்தான் கண்ணை உறுத்துகிறது! அதனது இறந்த காலமும் இரத்தம் தோய்ந்து கிடக்க அதுவும் தலைமைக்கு வந்து இதைத்தான் செய்யுமா? என்ற பயமும் இல்லாமல் இல்லை!
யாரோ “மரம்” என்று வினவியது போல இருந்தது, “மரம்” உம் (___________) !
உங்களது விரக்தி நிலையை வைத்து மேலுள்ள இடைவெளியை நிரப்பிக்கொள்ளுங்கள், இதுதான் இலங்கை அரசியல்!
-அப்ஸல் இப்னு லுக்மான்-