Puttalam Online
politics

மூன்றாவது சக்திக்கான சரியான தருணம்

  • 27 December 2017
  • 200 views

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது தகுதியானவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என்று பலதடவைகள் சமூகத்தை மன்றாடிய போதும், அதற்குச் செவிசாய்க்காததன் விளைவை சமூகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. முஸ்லிம் கட்சிகளின் சார்பில் வாக்குக் கேட்டு பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டவர்கள் எல்லோருமே முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் என்ற தகைமையை இழந்து விட்டார்கள்.

இயற்கை அனர்த்தங்களின் பின்னர் சேதமடைந்த இடங்களைப் பார்வையிடச் செல்பவர்கள் போலத்தான் கிந்தோட்டை கலவரத்தின் பின்னர் இவர்கள் களத்துக்குச் சென்றார்கள். நானும் வெளியேற்றப்பட்டவன் தான் என்று மார்தட்டிக் கொள்பவர்களாவது கால்நூற்றாண்டு கால முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத் தர முயற்சிக்கவில்லை. வர்த்தமானி அறிவித்தல் மூலம் முஸ்லிம்களின் காணிகள் பறிக்கப்பட்ட போது இந்த முஸ்லிம் தலைவர்கள் எல்லாரும் பாராளுமன்றத்தில் தான் இருந்தார்கள். என்றாலும் அதனைத் தடுப்பதற்கு அவர்கள் முயற்சிக்கவில்லை.

எல்லை நிர்ணயம், வட்டாரப் பிரிப்பு, புதிய தேர்தல்முறை, மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தம் என முஸ்லிம்களுக்குப் பாதகமான பல சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதும் இவர்கள் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளாக இருந்து அவற்றை எதிர்க்கவில்லை. மாறாக, அரசாங்கத்தின் எடுபிடிகளாக இருந்து அவற்றையெல்லாம் அவர்கள் ஆதரித்தார்கள். உத்தேச அரசியல் யாப்பு வரையப்பட்டபோது கூட முஸ்லிம்களின் பிரச்சினைக்கான தெளிவான தீர்வொன்றை இவர்களால் முன்வைக்க முடியவில்லை.

இந்த நிலையில் அரசாங்க சொகுசுகளில் கண்ட சுவையினால் மீண்டும் பல இடங்களில் அரசாங்கத்துடன் இணைந்து மக்களிடம் வாக்குக் கேட்கும் நிலைக்கு தனித்துவக் கட்சிகள் தள்ளப்பட்டிருக்கின்றன. இவர்கள் அமைக்கின்ற எந்தக் கூட்டும் சமூகத்தின் நன்மைக்கானதல்ல என்பதனை அவர்களே தமது கடந்த காலச் செயற்பாடுகளின் மூலம் நிரூபித்துவிட்டார்கள்.

இனியும் அரசியலுக்கூடாக சமூகத்தின் விடிவை முஸ்லிம் சமூகம் நாடுவதாக இருந்தால் அதனை சோரம் போன இந்த அரசியல் தலைமைகளிடம் எதிர்பார்க்க முடியாது. இந்த நேரத்தில் தான் முஸ்லிம் அரசியலுக்கான மூன்றாவது சக்தியின் தேவை வெகுவாக உணரப்படுகிறது. முஸ்லிம் சமூகத்துக்கென அர்ப்பணித்து உழைக்கின்ற, அதனுடைய விடிவையே இலக்காகக் கொண்ட, சமூகத்தை அடகு வைத்து பிழைப்பு நடத்தாத தூரநோக்குடன் சமூகத்தை வழிநடத்திச் செல்லக் கூடிய அரசியல் இயக்கம் ஒன்று, அரசியல் கட்சிகளுக்கு அப்பால் இருந்து பரிணமிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது.

நாட்டில் நல்லாட்சியொன்றை விரும்பும் மக்கள் இந்த மூன்றாவது சக்தியை நோக்கி முன்னணியில் இருந்து உழைப்பது தான் சமூகத்தின் விடிவுக்கான இறுதி எதிர்பார்ப்பாக அமைய முடியும். இந்த முறை உள்ளுராட்சித் தேர்தலை சமூகம் அதற்கான ஆரம்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All