Puttalam Online
art-culture

ஒற்றையடி-மைல் 06

  • 3 January 2018
  • 306 views

“மூடுபனி” பார்க்கும் போது எனக்கு எப்படியும் வயது 14 இற்கு மேல் இருந்திருக்க வாய்ப்பில்லை, இன்னும் பிரதாப் போத்தனின் நடிப்பு மறக்கவும் இல்லை, அந்த திரைப்படத்தில் ஒரு பாடல் வரும், “You ought to love music you know” என்று பிரதாப் போத்தன் தொடங்கி வைக்க,

“ம்ம்ஹ்ஹ்ம்ம்ம்…” என்று சற்று பார்வையை தாழ்த்தி ஒரு பெண் கேட்பாள், அவள் மாபெரும் அழகியெல்லாம் இல்லை, தோற்றத்தில் மிகவும் சாதாரணமாக நம் பக்கத்து வீட்டுப்பெண்ணைப் போல இருப்பாள். இன்றைய அழகின் அங்கீகாரங்களான மிணுக்கும் தோலோ வெள்ளை வெளேரென்ற தசைகளைச்சூழ கட்டியெழுப்பப்பட்ட கவர்ச்சியின் குறியீடுகளோ அவளிடம் இல்லை. ஆனால் அவளிடம் பக்கத்து வீட்டுப்பெண்களிடம் என்றுமே இருந்திராத ஒன்று இருந்தது, அது அவளது கண்களில் இருந்த வசீகரம்!

“உங்களுக்கு பாட வருமா?” என்ற அவளது அதியற்புத காந்தக் குரலின் வினாவுக்கு “கொஞ்சம் பாட வரும்!” என்று அசால்ட்டாக பிரதாப் போத்தன் கடக்க அதன் பின் அவர்கள் சிரிக்க, அந்த உரையாடலின் நடுவில் இளையராஜா சில Chord களை தவழவிட்டு அதிலிருந்தே பிறப்பிக்கும் அந்த Lead உம் அங்கு அந்த பெண் பிறப்பிக்கும் கிறக்கமும் அப்படியே என்னை தூக்கி சாப்பிட ஆரம்பித்த போது எனக்கு வயது 24 ஆகி இருந்தது. காலம் அதைத்தான் நமக்கு செய்துவிடுகிறது.

நீண்டதொரு காலப்பெருவெளியினூடு நாம் நீத்திக்கடக்கும் போது நமது பார்வையும், நோக்கமும், ஏக்கமும் மாறி எங்கெங்கோவெல்லாம் கரையேறி நிற்கின்றோம். போலீஸ்காரன் ஆகி ‘டிஷ்யூம்’ சுடுவேன் என்ற நான் இன்று மெக்கானிக்கல் இன்ஜினியராக இருப்பது குறித்து நான் பாரியதொரு பிரயத்தனம் எடுத்துக்கொண்டதாக நினைவே இல்லை. லொத்தர் கூண்டுக்குள் துள்ளும் பந்து போல அடைக்கப்பட்ட உலகுக்குள் சுற்றியோடும் எமக்கு காலமும் உறவுகளும் தரும் உந்துதலும் தள்ளுகையும் நமது இருப்பை நிர்ணயித்து விடுகின்றன. இதுவாகத்தான் ஆகி முடிப்பேன் என்ற எதுவும் எனக்கு சிரிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் கடந்த காலம் நமக்கு தந்தவற்றை பார்க்கும் போது அடைவுகளை விட இழப்புகள்தான் பாரிய தாக்கமொன்றை நிகழ்த்தி இன்னும் அது குறித்த கனவுகளை என்றாவதொரு இரவில் பிறப்பித்து மிரட்சியடையச்செய்கின்றன. காலத்தின் வழியே எமக்கு கிட்டியவை எம் வாழ்வோட்டத்தின் உந்தத்தை மிகைக்கச்செய்து ஓட்டத்தின் வழியேயயான எதிர்பார்ப்புகளையும் அதன் விளைவான பாரிய காயங்களையும் உண்டாக்கிவிடுகின்றது. இழப்புகள்தான் கற்பிக்கவல்லன.

நடிகை ஷோபா தற்கொலை செய்துகொள்ளும் போது வயது வெறுமனே 17, அவளது உயிரை மட்டுமே அவளால் விடுவித்துக்கொள்ள முடிந்தது, உயிரை விடுவித்துக்கொள்ளும் அளவு இந்த சமூகம் அவளுக்கு கொடுத்த மன அழுத்தங்களையும், துன்ப சுவடுகளையும் அந்த பிரேதம் தூக்கியே சென்றது, சமூகம் எல்லா குற்றங்களையும் இழைத்து விட்டு “அவள் கோழை” என்று சொல்ல மட்டுமே லாயக்குடனிருந்தது. இப்படித்தான் நாம் பல சமூகக்கொலைகளை நிகழ்த்தி விட்டு இறுதி ஊர்வலத்தில் மந்தைகளாக நடந்து மீள்கின்றோம்.

சென்ற வருடம் நமக்கு எதை தந்ததோ இல்லையோ, எம்மத்தியில் இருந்து டெங்கு எனும் நோயால் பலரை பறித்தது. “அப்ஸல் தம்பி… எப்படா படிச்சு முடிஞ்சு வெளாட வருவ..?” என்று காணும் போதெல்லாம் கேட்கும் மனாஸிர் காக்கா இப்போது அந்த வினாவை கேட்பதில்லை, மண்ணறையில் வேறொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார், இது போல எத்தனை எத்தனை உறவுகளை இழந்தது புத்தள சமூகம்?

வெறுமனே காரணத்தை டெங்கு என மொழியத்தெரிந்த நமக்கு அது குறித்து மேலும் பேச விருப்பில்லை. சூழல் சுத்தம் பேண மறந்து நாம் நிகழ்த்திய சமூகக்கொலைகளின் பேரேடு 2017. சந்துக்கு சந்து,வீதிக்கு வீதி பலி கொடுத்தோம், எல்லாம் நடந்தும் மிக சாதாரணமாக வீதி மூலையில் ஒரு மேட்டுக்குப்பையை எழுப்பியும் வைத்திருக்கின்றோம் இன்னுமொரு சமூகக்கொலையை நிகழ்த்த!

சத்தியமாக காலம் என்னவெல்லாம் செய்து விடுகிறது, சந்தியில் குப்பை பேக்கை வீசி வரும் எனக்கு ஒரு ப்ளாஸ்டிக் போத்தலை பாதையில் வீசக்கூடாதது குறித்த தெளிவு வரும்போது வயது 17, உங்களுக்கு எத்தனை வயதாக வேண்டும்?

-அ.இ.லு-


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All