Puttalam Online
art-culture

தளபதி ரத்தினம் எழுதிய “பேரொளியும் புதுவாழ்வும்” (பகுதி-02)

  • 5 January 2018
  • 343 views

நூலாசிரியர் தளபதி ரத்தினம் எழுதிய “பேரொளியும் புதுவாழ்வும்” எனும் நூல் புத்தளம் ஒன்லைன் வாசகர்களின் நலன் கருதியும், ஒன்லைன் வாசிப்பாளர்களின் ஆர்வம் கருதியும் ஒவ்வொரு வாரமும் பகுதி பகுதியாக இங்கு பிரசுரமாகவுள்ளதை அறியத்தருகின்றோம்.

————————————————————————————————————————————————————–


01) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அழ்ளாஹ்வின் பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் சொரியும் அருளுக்கு மேலெல்லை என்பதில்லை. பிரதிபலன் கருதாத அவனது அன்புக்கு நிகராக எதுவும் எங்கும் இல்லை. அத்தகைய கருணையின் ஊற்றுக்கண் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். அவன் சர்வ சக்தன், அகிலமனைத்தின் சிருஷ்டி கர்த்தா, அந்த வல்லவனை மகிழ்விக்க அவனது நினைவு என்னும் தியானம் நிறைந்த இதயம் அதனால் மகிழ்விப்போன் மகிழ்வினால் பொழியும் அருள், அளவிலாது சுரக்கும் ஞானம் வரைவிலாது. அதனால் அகிலம் சிறக்கும் அமைதி நிலவும் யதார்த்தத்தில் அகிலத்தின் சிறப்பும் அமைதியும் மனிதன் சிறப்புற்றோங்கு வதையும் மனித மன அமைதியையே குறிப்பதாகும். மனிதனின் மன அமைதியும் நிம்மதியும் அந்த அருளாளனிடமிருந்து தான் பெற வேண்டும் அதனை இலகுவாக இனாமாக பெரும் வழித்தான். அவன் கட்டளைகளும், புத்திமதிகளும், வழிக்காட்டல்களும் ஆகும். அது மனித வாழ்வின் நோக்கத்தை அடையும் வழி, அதில் வெற்றி நிச்சயம். இவ்வெற்றி பாதையை மேலும் இலகுவாக்க வாழ்ந்து காட்ட முதல் மனிதனையே தூதராகத்தான் அல்லாஹ் அனுப்பினான். தொடர்ந்தும் தூதர்களை அனுப்பி கொண்டிருந்தான்.

இங்கு நாம் அந்த அருளாளனை அனைவருக்கும் பொதுவாக இறைவன்/ இரட்சகன் என்றழைப்போம். இறைவனின் படைப்புக்கள் அனைத்திலும் மனிதனே அதி சிரேஷ்டமான படைப்பு என்று படைத்தவனே கூறுகின்றான். மனிதனின் ஒவ்வொரு உறுப்பிலும் இறைவன் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளான். மனிதனின் பார்வை விசேடமானது, கேள்வி விஷேடமானது, ஒவ்வொரு புலனும் விசேடமானது. ஒருவரது முகத்தை பார்த்து உள்ளத்தின் பிரதிபலத்தை அறிந்திடுவான். ஒருவரின் குரலை கேட்டு உள்ளத்தின் தன்மையை அறிந்திடுவான். ஒருவரின் தொடுகை ஸ்பரிசத்தை வைத்து அவரது உள்நோக்கத்தை அறிந்திடுவான். தூரத்தே வரும் ஒருவரின் நடையை பார்த்து இன்னார் என கண்டு கொள்வான். ஒருவரின் நடையை, பார்வையை அங்கசைவுகளை அவதானித்து குறிப்பான எண்ணங்களையும் குணாம்சங்களையும் நுணுக்கமாக அறிந்து விடுவான். மறைவானவற்றின் ஞானம், இரட்சகனுக்கு மட்டும் தான் உண்டு. அதன் பிரதிபலிப்புகளை தான் மனிதனில் வெளிப்படுத்துகின்றான்.

மனிதர்களுக்கு அவனால் கொடுக்கப்பட்ட விஷேட அருட்கொடைத்தான் இன்னுன்னறிதல் ஆகும். நாம் மிகச்சாதாரணமாக கருதும் நமது கைவிரல்களில் எவ்வளவு பெரிய அற்புதத்தை புகுத்தியுள்ளான். விரல் நுனிகளில் உள்ள ரேகை அது எவ்வளவு நுணுக்கமாக வரையப்பட்டுள்ளது. ஆதி மனிதன் நபி ஆதம் (அலை) முதல் இதுவரை தோன்றியுள்ள மனிதர்கள் அனைவரிலும் இனிமேல் வரக்கூடிய மனிதர்கள் அனைவரினதும் ரேகைகள் ஒரே மாதிரியாக ஒத்த தன்மையுடையதாக இருக்காது. இத்தைகைய எண்ணற்ற இரட்சகன் அருளிய மகத்துவங்களை தன்னகத்தே கொண்ட மனிதனின் வாழ்கையும் மகத்துவமானது. அவனது ஒவ்வொரு செயலும் மகத்துவமானது அவனது ஒவ்வொரு செயலுக்கும் வெளிப்படையான தோற்றம் உண்டு. அதனுள் மகத்துவமான செய்தியும் உண்டு. அதன் பிரதிபலிப்புகளும் மகத்துவமானவை. அவனது வாழ்வின் நோக்கமும் மகத்துவமானது. முடிவும் மகத்துவமானதாகவே இருக்க வேண்டும்.

இறைவன் தனது வெளிப்பாடு ஒன்றில் கூறுகின்றான். (விபரம் பின்னால்) “நாம் மனிதனை எமது பிரதிநிதியாக படைத்துள்ளோம்” இதுதான் மனிதனின் மிகப்பெரிய தகுதி அவனுக்கு கிடைத்த மிகப்பெரிய மகத்துவம் மிகப்பெரிய அந்தஸ்து, அதே வெளிப்பாட்டில் இறைவன் தொடருகின்றான். எனினும் மனிதர்களில் சிலர் கால்நடைகளை போன்றவர்கள் ஏன் அவற்றைவிடவும் மிகவும் தாழ்ந்தவர்கள் என்று எச்சரிகின்றான். அதிலிருந்து நாம் விளங்குவதென்ன.? மிக உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ள மனிதன் மிக தாழ்ந்த நிலைக்கு ஆளாகுகின்றான் ஏன்.? எவ்வாறு.? எதனால்.? என்ற வினாக்களுக்கு விடை கண்டு தெளிவு பெற்று எமது உண்மையான உயர்ந்த அந்தஸ்தை முயற்சித்து அடையப்பெறுவது அவசியமல்லவா.?

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All