Puttalam Online
politics

“மக்களுக்கு விசுவாசமான ஒரு புதிய தேசிய சக்தியை உருவாக்குவதற்காக ‘இரட்டைக் கொடி’க்கு வாக்களியுங்கள்”

  • 16 January 2018
  • 468 views

NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான் 

(NFGGஊடகப் பிரிவு)

“சிறுபான்மைக் பிரதிநிதித்துவத்திற்கு  சாவுமணி அடிப்பதற்காக இந்தப் புதிய உள்ளூராட்சி தேர்தல் முறையை கொண்டு வந்துள்ள  பெரிய கட்சிகளுக்கு சாவு மணி அடிக்கும் தேர்தலாக இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹகீம் கூறியுள்ளார்.

அப்படியென்றால், அதே சட்ட முலத்தை எதிர்க்கும் நேர்மையும், துணிச்சலும் இன்றி  மீண்டும் மீண்டும் அதற்காக வாக்களித்த றவூப் ஹகீம் போன்றவர்களின் கட்சிகளுக்கு மக்கள் என்ன மணி அடிக்க வேண்டும்.இதற்கான தீர்ப்பை இத்தேர்தலில் மக்கள் வழங்குவார்கள்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

அண்மையில் காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

“உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன. ஓவ்வொரு கட்சிகளும் மக்கள் தமக்கே வாக்குகளை  வழங்க வேண்டும் எனப் பரப்புரைகளை செய்து வருகின்றன. இந்தத் தேர்தல்பிரச்சார ஆரவாரங்களில் மக்கள் ஒரு பாரதூரமான  உண்மையை மறந்துவிடக்கூடாது.

அதாவது, இப்போது நடக்கவிருக்கின்ற உள்ளூராட்சித் தேர்தல் புதிய முறையின் கீழ் நடக்கிறது. இந்த முறையானது சிதறி வாழுகின்ற முஸ்லிம் மக்களுக்கும் ஏனைய மக்களுக்கும் மிக அபாயகரமானது. 4000உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக இருந்த தொகை இப்போது 8000 க்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  எமது விகிதாசாரத்தின்படி நாம் நாடளாவிய ரீதியில் 800 உறுப்பினர்களையாவது பெற்றுக்கொள்ள வஆனால், 400 உறுப்பினர்களைக்கூட பெறமுடியாத நிலையிலேயே இந்தத் தேர்தல் முறை அமைந்துள்ளது.

இது நமது மக்களின் தலையின் மீது திணிக்கப்பட்ட ஒரு பாரிய அநியாயமாகும். பெரும்பான்மைக் கட்சிகள் மிகத் தந்திரமாக எம்மைப்போன்ற சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்து எமதுஅரசியல் முக்கியத்துவத்தை இல்லாமல் செய்வதற்காகவே இந்தத் தேர்தல் முறையை கொண்டு வந்துள்ளனர்.

இந்த அநியாயத்திற்கு பாராளுமன்றத்தில் முஸ்லிம் கட்சிகளும், உறுப்பினர்களும்அதரவளித்துள்ளனர். இந்த ஆதரவினை ஒரு தடவையில்லாமல் பல தடவைகளில் மீண்டும் மீண்டும் சமூக அக்கறையில்லாமல் வழங்கியுள்ளனர்.

எமக்கு பாராளுமன்றத்திலோ அல்லது மாகாண சபையிலோ பிரதிநிதித்துவம் எதுவும் இருக்கவில்லை. இருந்திருந்தால் நிச்சயமாக இதனை நிராகரித்து வாக்களித்திருப்போம்.  அப்படியிருந்தும் சட்ட ரீதியாகஇதற்கொதிராக நாம் போராடியுள்ளோம்.  இந்த சட்ட மூலத்தின் உருவாக்கம் கிட்டத்தட்ட 7 வருடங்களாக நடைபெற்று வந்திருக்கிறது. முதன் முதலில் இது மஹிந்த ராஜபக்சவுடைய காலத்தில் 2010 இல் கொண்டுவரப்பட்ட போது இதற்கெதிராக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து போராடிய ஒரேயொரு முஸ்லிம் சார்ந்த  கட்சியாக நாம் மாத்திரமே இருந்தோம்.

ஆனால், அமைச்சரவையில் இருந்தவர்கள் இதற்காகப் பேசவில்லை. இதற்கெதிராக குரல் கொடுக்கவில்லை. பாராளுமன்றத்தில் பல தடவைகள் இந்த சட்டம் வாக்கெடுப்புக்கு வந்த போது இதற்கொதிராகஇவர்கள் வாக்களிக்கவில்லை. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இது பாராளுமன்றத்தில் சட்ட மூலமாக கொண்டு வரப்பட்ட போது மக்களின் சார்பாக துணிச்சலோடு அதனை முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும்நிராகரிக்கவில்லை.

இந்த சட்டமூலம் ஏற்படுத்தும் பாதகத்தின் விழைவுகளை இந்தத் தேர்தல் முடிந்ததன் பிறகு மக்கள் எல்லோரும் புரிந்து கொள்வார்கள்.

இந்த அநியாயத்திற்கு துணைபோன கட்சிகளும் முஸ்லிம்களின் வாக்குகளை தற்போது கோரி நிற்கிறது. அண்மையில் புத்தளத்தில் உரையாற்றுகின்ற போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹகீம் இப்படிச்சொல்லியிருந்தார். அதாவது , முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்திற்கு சாவுமணி அடிப்பதற்காக இந்தப் புதிய தேர்தல் முறையை கொண்டு வந்த பெரிய கட்சிகளுக்கு இத்தேர்தலில் சாவுமணி அடிக்கவேண்டும்  எனக் கேட்டிருந்தார்.

அப்படியென்றால், இந்த அநியாயமான சட்டங்களுக்கு பாராளுமன்றத்தில் வாக்களித்துத் துணைபோன றவூப் ஹகீம் போன்றவர்களின் கட்சிகளுக்கு மக்கள் இந்தத் தேர்தலில் என்ன மணி அடிக்க வேண்டும்.

எனவே, இருக்கின்ற உரிமைகளையும் பறித்துக் கொடுத்திருக்கின்ற அத்தனை கட்சிகளையும் இத்தேர்தலில் மக்கள் நிராகரிக்கவேண்டும்.

மக்களுக்கு விசுவாசமான ஒரு புதிய தேசிய சக்தியை உருவாக்குவதற்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இரட்டைக் கொடி சின்னத்திற்கு வாக்களிப்பதே மக்களுக்கு அறிவுபூர்வமான பாதுகாப்பானதெரிவாக அமையும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All