Puttalam Online
social

கடல்கடந்த உழைப்பை கஞ்சா உண்ணுகிறது..!

  • 16 January 2018
  • 1,221 views

(கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்)

கடந்த காலங்களில் எமது வட்டாரத்தில் வதியும் வாக்காளர்களை பதிவு செய்வதற்காக கிராம சேவகருடன் தொண்டராக பணியாற்றிய வேளை அனேகருடைய வீடுகளில் ஒருவர் இருவர் கத்தார், சவூதி அரேபியா, துபாய், ஓமான், குவைத், பஹ்ரைன் என வளைகுடா நாடுகளில் பணிபுரிவதாக அறிய முடிந்தது.

எமது வட்டாரத்திலேயே இத்தனை பேர் என்றால் புத்தளத்தின் அத்தனை பகுதிகளிலும் இவ்வாறாக வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்ற எனது அனுமானம் ஆயிரங்களை தாண்டியது.

இவ்வாறான ஆயிரக்கணக்கானோர் உள்ளூரின் சந்தோஷங்கள், துக்கங்கள் அனைத்தையும் மறந்தே வெளிநாடு பயணிக்கின்றனர். அவர்களுக்கு பின்னால் குடும்பங்கள், மனைவி பிள்ளைகளினது வாழ்வாதாரம் அமைந்திருக்கின்றது. வேறுவிதமாக சொல்வதென்றால் ஒருவித தியாகமெனலாம்.

அந்த தியாகங்கள் இப்போது செல்லாகாசாக செல்வதை நினைக்கையில் தான் உள்ளம் தடுமாறுகிறது. கடல்கடந்து பல்வேறு கஷ்டத்திற்கு மத்தியில் உழைக்கும் அந்த உழைப்பை கஞ்சா இலகுவாக உண்ணுகிறது.

ஒவ்வொரு மனைவியும், ஒவ்வொரு தாய், தந்தையரும் கட்டாயம் இதுப்பற்றி சிந்தித்தாக வேண்டும்.  இல்லாவிடில் கரையான் உண்ணும் தளபாடம் போல் வாழ்க்கை பாழாகிவிடும். இறுதியில் கைசேதப்பட்டு ஒன்றும் காண இயலாது.

உள்ளூரிலே வீடு, குடும்பம், சுற்றம் என ஓரளவு கட்டுப்பாட்டுடன் இருந்த இவர்களுக்கு இங்கே பூரண சுதந்திரம் இருப்பதாக நினைத்து கொண்டு மித மிஞ்சியவாறு இவைகளை பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். எனது பணம், நான் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்பதே இவர்களின் இறுதி முடிவு. இவ்வாறாக கஞ்சா பயன்படுத்துபவர்கள் தன்னையும் ஏமாற்றி, தன்னை நம்பியிருக்கும் குடும்பங்களையும் ஏமாற்றுகின்றனர் என்பதை மறந்து விடுகின்றனர்.

தியாகமும் கத்தரிக்காயும், ஒன்றுமில்லை..! சீரழிவு தான் மிச்சமாகிறது. ரூம்களில் தன்பாடு உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவர்களும் இவர்களால் நாடு திரும்ப வேண்டிய நிலை. பகுத்தறிவு இருந்தால் கொஞ்சமாவது யோசித்திருப்பார்கள்.

கத்தார் சட்டங்களை அறிந்திருந்தும் கஞ்சாவை மூன்று நேர சாப்பாடு என்று நினைத்தார்களோ என்னவோ..! யாருக்கும் பயமில்லை. புத்தளம் என்றால் ‘கஞ்சா’ தானே என்று இலேசாக சொல்லி சிரிக்கிறார்கள் ஏனைய ஊர்களை சேர்ந்தவர்கள். இவ்வவப்பெயரை எப்போது மாற்றப்போகிறோம்.

மறுபடியும், பெற்றோர்களே..! மனைவிமார்களே..! கொஞ்சம் பிள்ளைகள், கணவர்கள் நடவடிக்கை தொடர்பில், அவர்களுடைய ஆரோக்கியம் தொடர்பில் அதீத கவனம் செலுத்துங்கள்.

கஞ்சா பயன்படுத்தி, கஞ்சா வியாபாரம் செய்தென கத்தார் சிறைச்சாலைகளில் எத்தனையோ பேர், கத்தாரிற்கே வரமுடியாது தடைசெய்யப்பட்டவர்கள் எத்தனையோ பேர் எம்மை சுற்றித்தான் இருக்கிறார்கள். இவர்கள் வந்த நோக்கத்தை சரியாக புரிந்து கொள்ளாமை, பிழையான வழிக்காட்டல், கவனிக்கப்படாத தன்மை என்பதினால் வாழ்க்கை அதாலபாதாளத்தில் விழுகிறது.

வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைப்பதில் ஓர் அர்த்தம் வேண்டும். ஆனால் இங்கோ அழிவு தான் இருந்துக்கொண்டிருக்கிறது.  இல்லாவிடில் உள்ளூரிலேயே உழைத்து வாழ்ந்திருக்கலாம்.

வாழ்கையில் முன்னேறவேண்டும் என்றே வெளிநாடு வருகின்றோம். உழைத்த பணத்தில் சேமிப்பை பேணி உள்ளூரில் முதலீடு செய்யலாம். அதைவிடுத்து கஞ்சா தின்று உமது உழைப்பை உதாசீனப்படுத்துவது எவ்விதத்தில் நியாயம்..!

கத்தார் – கஞ்சா – கடல்கடந்த உழைப்பு – உதாசீனம்…

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All