Puttalam Online
other-news

பன்மைத்துவத்தினை உள்வாங்கி தேசிய அடையாளத்தினை வெளிப்படுத்துவோம்

  • 3 February 2018
  • 242 views

70 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாம் சுதந்திரத்தோடு எமக்கு கிடைத்த தேசியம், ஜனநாயகம் என்ற விழுமியங்களை உண்மையான முறையில் அனுபவிக்க அணிதிரள்வோம்.

எமது நாடு ஒரு பன்மைத்துவ நாடு என்ற வகையில் இங்கு வாழும் ஒவ்வொரு சமூகங்களினதும் தனித்துவமான விருப்பங்கள், பாரம்பரியங்கள் மற்றும் நம்பிக்கைகள் தொடரக்கூடிய நிலையில் அனைத்து சமூகங்களினதும் நலன்களையும் அவற்றை ஊக்குவிக்கும் முறைமைகளையும் மற்றும் அபிவிருத்தியையும் ஒன்று சேர்த்து ஏற்றுக் கொள்வதுடன் செயற்படுத்தும் அமைப்புகளையும் கொண்டதாக எமது பன்மைத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்.

எமக்கு பிறப்புரிமையாக கிடைத்த சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க நினைக்கும் ஒரு மனிதன் அந்த சுதந்திரம் தடைகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்டு ஏனையவர்களின் சுதந்திரத்திற்கும் பங்கம் ஏற்படாத வகையில், தான் அனுபவிக்க வேண்டிய ஒன்று என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தனிமனித சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்த சமுதாய கூட்டு வாழ்க்கை தேவைப்படுகிறது.

நாட்டின் பிரஜைகள் என்பவர்கள் தமது நாட்டின் ஒரு அங்கமாக உள்ளனர். அம்மக்கள் இயங்கினாலே அன்றி எந்த ஒரு நாடும் முன்னேற்றமடையாது என்பதை வரலாறும், நவீன அனுபவங்களும் நமக்கு தரும் சிறந்த பாடமாகும்.

எமது நாட்டு மக்களுக்கு மத்தியில் பிரஜைகளுக்கு மத்தியில் பன்மைத்துவம் இருப்பது போலவே, எமது இயற்கை சூழலிலும், ஜனநாயக விழுமியங்களை பேணுகின்ற வகையில் கட்சிகளிலும் பன்மைத்துவம் காணப்படுகின்றது.

மனித நலன்களை மேம்படுத்துவதற்காக விழுமியமிக்க ஊடகங்கள் இந்த யதார்த்தத்தை மக்கள் மத்தியில் உணரச்செய்வதன் மூலம் கிடைத்த இந்த சுதந்திரத்தை எமது நாட்டு மக்கள் அனுபவிக்கும் நிலை ஏற்படலாம்.

எமது நாடு ஒரு வளமிக்க நாடாகும். அதனால் தான் வெளிநாட்டவர்கள் எமது நாட்டை கைப்பற்றி 4 நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தனர். அந்த 4 நூற்றாண்டுகளிலும் எமது நாட்டு மக்கள் தேசிய உணர்வோடு இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் எமது நாட்டைப் பாதுகாக்க, எமது நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தர ஒன்றாக இணைந்து போராடினர். இதனால் தான் சுதந்திரப் போராட்டத்தில் எமது முக்கிய விழுமியங்களில் ஒன்றாக எமது இன ஒற்றுமை எடுத்துக் காட்டப்பட்டது.

ஆனால், சுதந்திரத்திற்கு பின்னால் வந்த எமது தலைவர்கள் அந்த தேசிய உணர்வை, இன ஒற்றுமையை பாதுகாத்து வளர்க்க தவறி விட்டனர். அந்த வகையில் எமது ஜனநாயகத்தின் விழுமியங்களை சரியாக விளங்கி அதனை நடைமுறைப்படுத்துவதோடு பன்மைத்துவத்தினை உள்வாங்கி தேசிய அடையாளத்தினை வெளிப்படுத்தும் சுதந்திரமாக எமது 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்.

Asheikh. M.H.M Usair (Islahi) 
Deputy President 
Sri Lanka Jama’athe Islami. 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All