Puttalam Online
art-culture

MAA- குறுந்திரைப்பட விமர்சனம்

  • 5 February 2018
  • 220 views

சில விரும்பத்தகாத தருணங்கள் நம்மோடு பிசின் போல் ஒட்டிக்கொள்வது இல்லையா? மீட்டிக்கொள்ள முடியா ஒரு மூட்டை பிரச்சினப்பாடுகளுடன் ஒரு மூலைக்குள் நாம் அடைபட்டு விடுவது இல்லையா? “இது நடக்காதிருக்கத்தானே வேண்டும்”, இருந்தும் நடந்த பின் இன்னதுதானென்று எந்தவித நிர்ணயிக்கப்பட்ட தீர்வுகளும் அற்ற சூன்யத்திற்குள் நாம் மாட்டிக்கொள்கிறோம் இல்லையா?
அதன்பின் நாம் எடுக்கப்போகும் எந்த முடிவையும் உலகம் இழிவுக்கண்ணாடி அணிந்துதான் பார்த்து முடிக்கும் என்ற ஒரு இக்கட்டு நம்மை ஆட்கொள்கிறது இல்லையா?
இந்த வினாக்களுக்குப் பின்னால் விரிந்து கிடக்கும் ஒரு மனித வாழ்வியல் வெளி குறித்து பேசவேண்டும் என தைரியமாக தோளைத் தூக்கிய சர்ஜூன் இற்கு வாழ்த்துக்கள்,
நான் “MAA” பற்றி பேச விளைகிறேன்!

PREMATURED/TEENAGE PREGNANCY பற்றி JUNO, ஆதலால் காதல் செய்வீர் போன்ற திரைப்படங்கள் தத்தமக்கேயான பாணியில் தாய்மையையும், அதன் பாரத்தையும், உடலியல் பிரசினங்களையும், உள மற்றும் சமூக அழுத்தங்களையும் மற்றும் அவற்றை முகங்கொள்வது பற்றியும் பேசி நின்ற போதிலும், கருவொன்றானது அது உண்டான சூழ்நிலைகளுக்கு அப்பால் உலகைக் காண அனைத்து உரிமைகளையும் கொண்டது என்ற கருத்தை முன்வைத்து சென்றன. எமது பாரம்பரியங்களும் மத விழுமியங்களும் அதைத்தான் எமக்கு கற்பிக்கின்றன. ஒரு கருவானது இந்த உலகை காண வேண்டுமா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்க அது உருவாக முன்னர் மட்டுமே ஆண் காரணிக்கோ பெண் காரணிக்கோ உரிமை உண்டு என்பதே அவற்றின் தொனியாகவும் இருந்தது; எனது நிலைப்பாடும் கூட!

ஒரு குழந்தை கொண்டாடடப்பட அது குறித்த காலத்தில் குறித்த சந்தர்ப்பத்தில் அதாவது அது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய சூழ்நிலைச் சதுரத்தினுள் பிரசவிக்கப்படல் வேண்டும் என்ற யதார்த்தமான உலக நியதியை முன்வைத்து தன் நிலைப்பாட்டை பேசுகிறது “MAA”.
குறித்த இந்த பதின்ம வயதிற் கருத்தரித்தல் எனப்படும் பிரச்சினையில் “ஆண் கெட்டால் சம்பவம், பெண் கெட்டால் சரித்திரம்!” என்ற சமூக நிலைப்பாட்டையும் அந்த நிலைப்பாட்டின் பின்னால் பெண் இனம் வேட்டையாடப்படும் அவலத்தையும் எம் பார்வைக்கு குவியப்படுத்திய விதத்தில் “MAA” ஒரு வகையில் தன் நோக்கத்தில் வெற்றி பெறுகிறது.

இவை அனைத்தையும் தாண்டி மிகச்சிக்கலான முடிவொன்றை முன்வைக்கும் அந்த தருணத்தில் எந்த முடிவுமே நம் சமூக நியதிகளின் அளவுகோலின் படி முகஞ்சுழிக்கவே செய்யப்போவதால் அல்லது எந்த தீர்வுமே விமர்சனத்தையே தோற்றுவிக்கப்போவதால் இங்கு அந்த மடந்தையையும் அவள் முகங்கொடுக்கப்போகும் இடர்பாடுகளையும் முன்வைத்து அந்த கருவை கலைப்பதாக முடித்திருப்பது அதற்கே உரிய நியாயக்கோட்பாடாகத்தான் படுகிறது; அதற்காக நான் அந்த முடிவை ஆதரிப்பதாக அர்த்தப்படாது!

என்னை நோக்கி இந்த பிரச்சினைக்கான தீர்வொன்றை வினவினால் “வருமுன் காத்தல்” அன்றி வேறோன்றிலும் நான் திருப்தியுற மாட்டேன்! ஒரு கரு குறித்த பெண்ணின் கவலைகளும் கனவுகளும் ஒரு சாகரமாய் விரிந்துக் கிடக்க தவறிழைத்த சக ஆண் அத்தனை சுலபமாக மன்னிப்பு கேட்பதுடன் இயல்பு நிலை அடைவதாக காட்டிய இடத்தில் “அவ்வளவு கல்லாவா இருக்குது?..” என்று நெஞ்சை நோக்கி ஓர் ஆணாக வினாத் தொடுக்காமல் இருக்க முடியவில்லை. எந்தளவுக்கு பெண் பாலின மன ஓட்டங்கள் சித்தரிக்கப்பட்டனவோ அதே அளவு ஆண் பாலின மன ஓட்டங்களும் சித்தரிக்கப்பட்டு இருக்கலாமே என்ற ஏக்கத்துடன் நிறைவுறுகிறது “MAA”.

அவ்வளவு எளிதாக ஏதோ குப்பையை உறிஞ்சி எறிந்துவிடும் காரியம் போல கருக்கலைப்பை மிகச்சாதாரணமாக கடந்துவிடும் இடத்தில் மட்டும் சினிமாத்தனம் துருத்திக்கொண்டு பல்லிளிக்கின்றது; அது தவிர்த்து அற்புதமான இயல்பான நடிப்பினால் எம்மையும் உடன் பயணிக்கச் செய்கிறது “MAA”.

ஒரு தாய்க்கு அவள் சுமந்த கரு உருவாகிப்பெரிதாகி சிசுவாகிப் பிரசவமாகி அவள் விரல்பற்றும் தருணத்தில், அண்டமெலாம் அஃறிணையாகி சிசு ஒன்றே உயர்திணை ஆவதாக உற்ற நம்பிக்கை கொண்டிருக்கிறேன், MAA “இல்லை போடா…!” என்று பிடரியில் தட்டுகிறது!
-அ.இ.லு-


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All