Puttalam Online
historical-notes

புத்தளத்தின் பாரம்பரிய குடும்ப பட்டப்பெயரை பற்றி..! (பாகம் 1)

  • 5 February 2018
  • 1,222 views

(எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்)

புத்தளத்தின் பாரம்பரியங்களில் ஒன்றாக இன்னும் குடும்பங்களை அறிமுகப்படுத்துவதற்கு “குடும்ப பட்டப்பெயர்” பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவை எமது வரலாற்றை, எமது முன்னோர்களை மீட்டி பார்க்க, பரம்பரைகளின் அடையாளமாக வழக்கத்தில் இருந்துக்கொண்டிருக்கிறது.

இவ்வாறான குடும்ப பட்டப்பெயர்கள் அந்த காலத்தில் அவர்கள் செய்த தொழில், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களின் செயற்பாடுகள், தோற்றங்கள் என இன்னோரன்ன அமசங்களை கொண்டு வந்திருக்கக்கூடும்.

அந்தவகையில் எமது இப்பாரம்பரியங்களை மீட்டிப்பார்க்கும் ஓர் அம்சமாக, அந்த பட்டப்பெயர்கள் எவ்வாறு வந்திருக்கக்கூடும், அதன் வரலாறு எவ்வாறு அமையப்பெற்றது தொடர்பிலேயே இவ்வாக்கம் வரையப்படுகிறது.

இவ்வாறனதொரு நிலையில் இதனை என்னிலிருந்து ஆரம்பிக்கலாமென நினைக்கின்றேன். “பாசுமணி” என்ற குடும்ப பட்டப்பெயரை கொண்டே நாம் அழைக்கப்படுவோம். அதற்கு சிறு வரலாறும் உண்டு.

எனது அப்பாவின் (வாப்பாவின் வாப்பா) அப்பா (அப்பாவுடைய வாப்பாவின் வாப்பா) அன்றைய தொழில் பாசுமணி மாலை செய்து கொடுப்பதாக அமைந்திருக்கின்றது. அன்றைய காலங்களில் தங்கத்தின் பாவனை பெரிதாக இருந்திராத காலமென்பதால் பாசுமணி மாலைக்கான மவுசு அதிகமாம்.

பாசுமணி குடும்பத்தில் ஒருவர் – கட்டிட ஒப்பந்தக்காரர் செய்னுல் ஆப்தீன்

திருமண நிகழ்வுகள், பெண்பிள்ளைகளின் பூப்படைதல் நிகழ்வுகள், பெண் குழந்தைகளின் பிறந்தநாள் நிகழ்வுகள் என இன்னோரன்ன விஷேசங்களின் போது இவ்வாறன பாசுமணி மாலைகளை மக்கள் பெரும்பாலும் அணிவதை, அன்பளிப்பாக கொடுப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தார்களாம்.

பெரும்பாலும் இந்தியாவிலிருந்தே இந்த பாசுமணி முத்துக்கள் பெற்றுக்கொள்வார்களாம். காலப்போக்கில் பாசுமணி மாலை செய்து கொடுக்கும் தொழில் அழிவடைந்தாலும் பாசுமணி என்ற அந்த குடும்ப பட்டப்பெயர் நிலைத்துவிட்டது எனலாம்.

இவ்வாறான குடும்ப பட்டப்பெயர்கள் ஒரு சில கேட்பதற்கு வெவ்வேறு விதமாக இருந்தாலும் அவை எம் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து இருப்பதை மறுக்க இயலாது. எமக்கு பின்னால் வருபவர்கள் எமது முன்னோர்களின் வாழ்க்கையினை, வழிமுறைகளினை அறிந்திருத்தல் கடமையாகின்றது.

புத்தளம் – குடும்ப பட்டப்பெயர் – முன்னோர்கள் – வரலாறு…

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All